Monday, 12 March, 2012

இது என்ன காதல்?

சில வருடங்களுக்கு முன்பு பஸ்ஸில் பயணம் செய்ய நேர்ந்தது. இடமில்லாததால் நின்று கொண்டே வந்தேன். அப்போது ஒரு பெண் கைக்குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினாள். இடமில்லாததால் அவளும் நின்று கொண்டே வந்தாள். அவள் நின்ற இடத்தில் புதுமணத் தம்பதிகள் சிரித்துப் பேசி உட்கார்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணின் கையில் இருந்த குழந்தை அழ ஆரம்பித்தது. குழந்தை அழுவதைப் பார்த்தும் அந்த தம்பதிகள் திரும்பி கூட பார்க்கவில்லை. அந்த ஆண் ஏதோ காதில் கிசுகிசுக்க, பெண் வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே வந்தாள்.

பசியில் கத்திய குழந்தை அழுது, அழுது சோர்ந்து போனது. புதுமணத் தம்பதிகளாகவே இருந்தாலும் கூட ஒரு மனிதாபிமானம் வேண்டாமா? அந்த ஆணுக்குத்தான் அறிவில்லை...அந்தப் பெண்ணுக்கும் கூட அவனை எழுந்து இடம் கொடுக்கச்சொல்லும் மனமில்லாதது ஆச்சர்யம். இவளும் ஒரு பெண்ணா? என்றுதான் தோன்றியது. அப்படியென்ன ஒரு காதல்?

சக பயணியிடம் கூட மனிதாபிமானத்தை காட்ட முடியாதவர்கள் மற்றவர்களுக்கு என்ன பெரிதாக  உதவி விடப் போகிறார்கள்?

உதவி என்பது பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் இல்லை. நம்மால் முடிந்த இந்த சின்ன சின்ன உதவியில் தான் இருக்கிறது மனிதாபிமானத்தின் அடையாளம்.

Sunday, 3 April, 2011

இருவீடு, இருவாசல்!!


அந்த நாளில் அப்பாவிடம்
எனக்கு இவ்வளவு வேண்டும்
என்ற செய்தியை மட்டும் கொடுத்துவிட்டு
நானாகவே பாக்கெட்டிலிருந்து 
உரிமையுடன் எடுத்துக்கொள்வேன்


இன்று எனக்காக செய்யும் 
ஒவ்வொரு செலவையும்
அப்பா கேட்கமாட்டார் என்பதால்
பாக்கெட்டில் வலுக்கட்டாயமாக வைத்துவிட்டு
அதன் பிறகே செய்தியை சொல்கிறேன்


ஏன் இந்த மாற்றம் என்று 
பல நேரம் யோசிக்கிறேன்....


மாற்றத்திற்கு காரணம்
என் கழுத்தில் இருக்கும் தாலியா?
இல்லை..நானே போட்டுக்கொள்ளும் வேலியா?


யதார்த்தங்கள் நிறைந்த வாழ்க்கை
பலநேரம் ஆச்சர்யப்பட வைக்கிறது.....


அந்த ஆச்சர்யத்தில் 
வந்து வந்து போவது
பெண்ணுக்கு மட்டும்
இருவீடு, இருவாசல்!!Saturday, 26 March, 2011

கொத்துங்க எஜமான்... கொத்துங்க!

"எங்க அப்பாவைக் கொன்ன அந்த நாலு பேரு யாரு?" இதுதான் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமா நாயகர்கள் தங்கள் அம்மாவையோ, ஆயாவையோ பார்த்து கேட்கும் கேள்வி. வில்லன்களின் கதையைக் கேட்டதும், 'ஒரு போங்கு புயலாகி வருதேய்ய்ய்ய்ய்ய் ஓஓஓஓ' என்று ஸ்பீக்கர்கள் காதைக் கிழிக்கும். ஆனால் வில்லனின் மகள் மட்டும் ஹீரோவிடம் கிறங்கி, மயங்கி, குத்தாட்டம் போடுவார்.


ரிவெஞ்ச் கதைகளில் வெரைட்டி காட்டியது 'அபூர்வ சகோதரர்கள்'. கோலிக்குண்டில் கொடூரக்கொலை, புலியை விட்டு குரல்வளையைக் குதறுவது, சர்க்கஸ் சிங்கத்தை வைத்து சட்னி ஆக்குவது என விதவிதமான கொலைகளை செய்வார் தம்மாத்துண்டு கமல்.


அம்மாவை கைவிட்டுப்போன அப்பாவை 'என்னம்மா கண்ணு செளக்கியமா?' என்று கேட்ட ரஜினிக்குப் பழைய படங்களில் ஆல்டைம் ட்யூட்டியே பழிவாங்குவதுதான். அப்பாவைக் கழுத்தறுத்தவன், தங்கச்சியைக் கற்பழித்தவன் என்று தீங்கு செய்யும் வில்லன்களை ஜெர்கின் அணிந்து பழி வாங்கினார் சூப்பர் ஸ்டார்.


எல்லா ஹீரோக்களும் சுயநினைவோடு பழிவாங்கியபோது சுற்றிச் சுற்றி பழிவாங்கிய 'கஜினி'யின் ரிவெஞ்ச் நிறையவே வித்தியாசம்.


ஆண்கள் எல்லாம் உயிரோடு பழிவாங்க, பெண்கள் ஆவியாக வந்து பழிவாங்குவார்கள். வெள்ளைச்சேலை, சாம்பிராணிப் புகை, மணக்கும் மல்லிகை இதுதான் ஆவிக்கு உரிய அடையாளம். சூப்பர் சிங்கர் ரேஞ்சுக்கு ஒரு பாட்டு பாடுவார்கள். அந்தப் பாடாவதி பாட்டுக்கே வில்லன்கள் தூக்கில் தொங்கலாம். அது சரி, ஆவிகள் மற்றவர்களை ப‌ழிவாங்குகிறதே...ஆவிகளால் பழிவாங்கப்பட்டு அகால மரணம் அடைபவர்கள் ஆவிகளாக மாறி யாரைப் பழிவாங்குவார்கள்?


இதுபோக, நண்பனைக் கொன்றவனை நாள் குறித்துப் பழிவாங்குவது, குடும்பத்தை அழித்தவனைக் குத்திக் கிழித்து பழிவாங்குவது, அத்திப்பட்டியை அழித்தவர்களை ஆள்வைத்துக் கடத்திப் பழிவாங்குவது என்று தனிப்பட்ட பிரச்சினைகளுக்காகவும், சமூகப் பிரச்சினைகளுக்காகவும் தொடரும் பழிவாங்கும் படலம்.


இந்தியாவில் பாம்புகள் படம் எடுத்ததை விட பாம்புகளைப் பற்றி படம் எடுத்ததுதான் அதிகம். குஜாலாக இருக்கும் பாம்புகளைக் குருவி சுடுவதைப் போல சுட்டுவிடுவார் வேட்டைக்காரன். பெண் பாம்பு பிழைத்துப் பழிவாங்கும். சிட்டி, பட்டி எல்லாம் தேடி வந்து வில்லனை போட்டுத்தள்ளும். கொத்துங்க எஜமான்...கொத்துங்க! 


நண்பனின் எதிரி எனக்கும் எதிரியே என்கிற 'சுப்ரமணியபுரமும்', சேர்த்து வைத்தவர்கள் பிரிந்து விட்டால் பிரித்து மேய்ப்பது என்கிற 'நாடோடிகள்', இன்றைய 'ஈசன்' வரை தொட்டுத் தொடர்கிறது தமிழ் சினிமாவின் பழிவாங்கும் பாரம்பரியம்!


இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கொத்துக்கொத்துன்னு கொத்துவாய்ங்களோ தெரியல....
(செய்திகள் விகடனிலிருந்து)

Saturday, 19 March, 2011

எல்லா நாளும் நல்ல நாளே!


அதென்ன நல்ல நேரம், கெட்ட நேரம், நல்ல நாள், கெட்ட நாள்? அப்புறம் எதற்கு வாரத்திற்கு 7 நாட்கள், ஒருநாள் என்பது 24 மணி நேரம் என்றெல்லாம் வரையறுத்து வைத்தார்கள். நமக்கு எது நல்ல நாள், கெட்ட நாள் என்று அவர்களைத்தான் முதலில் கேட்க வேண்டும். 


உலகில் நடக்கும் அத்தனை நல்லவையும் எமகண்டம் என்று சொல்லப்படும் கெட்டநேரத்திலும் நடக்கிறது..அத்தனை கெட்டவையும் ஜோசியர் குறித்துக் கொடுக்கும் முகூர்த்த நேரத்திலும் நடக்கிறது. இது இயற்கைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். 


எத்தனையோ கெட்ட விஷயங்களிலிருந்து தான் ஏதோ ஒரு நல்ல விஷயம் பிறக்கிறது. அப்படியென்றால் அந்த கெட்டது நடக்கும் நாளும் உலகத்துக்கு எச்சரிக்கையாக மாறும் நல்ல நேரம்தானே!


'செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது என்று நினைத்து உருவாக்கப்பட்ட 'நல்ல நேரம், கெட்ட நேரம்' என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன.


இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின் படி, ஒரு மாதத்துக்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு தலைதான் சுற்றுகிறது.


வாரத்தில் செவ்வாய், சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது (10 நாட்கள்).


மாதத்தின் அஷ்டமி, நவமி நன்மைக்கு உகந்தது அல்ல (4 நாட்கள்).


'பாட்டி முகம்' நாளில் நல்லது செய்வது நல்லதில்லை (2 நாட்கள்).


ஒரு மாதத்தில் வரும் ராகுகாலம், எமகண்டம், குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 3/4 நாட்கள்).


தவிர, கெளரி பஞ்சாக்கத்தின் படி நன்மை செய்யத் தகாத நாட்கள் (2 நாட்கள்).


மொத்தத்தில் ஒரு மாதத்தின் 21 3/4 நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட?

(நன்றி: விகடன்)

Monday, 14 March, 2011

எதை கேட்கணும்?


"பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி..தெரியுமா? அதனால அவங்க என்ன சொன்னாலும் கேட்கணும்..சரியா?"


"ஓ.. அப்படியா? சரி, கேட்டுக்கறேன்..அதனால தான் சகுனி பேச்சை துரியோதனனும், கூனி பேச்சை கைகேயியும் கேட்டாங்களோ..."


"ம்ம்க்கும்..அவுகளுக்குன்னு ஒரு சுயபுத்தி இருந்திருக்கணும்.."
இப்ப நான் பெருமாளை கேட்கறதா? இல்லை சுயபுத்தியை கேட்கிறதா? 


#என்னடா கொடுமை இது? என்னோட மூளைக்கு வந்த சோதனை!

Tuesday, 1 March, 2011

நாளை உங்கள் பெண்ணும் இந்தக் கேள்வியைக் கேட்கலாம்!


மகள்: "அம்மா, என்னம்மா இவ்வளவு பாத்திரங்கள்.. எதுக்கும்மா இதெல்லாம்?"


அம்மா: "இந்த பாத்திரங்களெல்லாம் உனக்கு சீர் செய்யத்தான்.."


மகள் அத்தனை பாத்திரங்களையும் கலைத்துப் பார்த்தாள்..


மகள்: "இதென்னம்மா.. தோசைக்கல் கூட வைத்திருக்காயே.."


அம்மா: "ஆமாம். உன் புருஷனுக்கு தோசை செஞ்சு கொடுக்க வேண்டாமா?"


மகள்: "அப்படின்னா அவரால தோசைக்கல் கூட வாங்க முடியாதாம்மா?"


அம்மா: "அப்படியெல்லாம் பேசக்கூடாதும்மா.. இதெல்லாம் காலம், காலமாக நடக்கும் சம்பிரதாயம்"


மகள்: "ம்ம்.. சரிம்மா..இந்தப் பாத்திரங்களையெல்லாம் வைத்து நான் என்ன செய்ய?"


அம்மா: "என்னடி கேள்வி இது? உன் புகுந்த வீட்டில் வைத்து சமைப்பதற்கு பாத்திரங்கள் வேண்டாமா? அதற்குத்தான்...."


மக‌ள்: "ஏன் அவர்கள் வீட்டில் பாத்திரங்கள் இருக்காதாம்மா?"


அம்மா: "இருக்கும். இருந்தாலும் உனக்கென்று தனியாக எல்லாம் வேண்டாமா?"


மகள்: "எல்லாத்தையும் இப்போதே அவர்களும் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள், நீங்களும் தனியாக எனக்கென்று அத்தனையும் ஒதுக்கி விடுகிறீர்கள். அப்புறம் ஏன் கல்யாணத்துக்கப்புறம் என் மகனை மயக்கி தனியாக கூட்டிச்சென்று விட்டாள் என்று எல்லாரும் சொல்கிறார்கள் அம்மா? பக்கத்து வீட்டுல இருக்கிற ஜானகி அக்கா அழுதப்போ பாவமா இருந்துச்சும்மா..."


அம்மா: "!....!" 

Friday, 25 February, 2011

பெயரின் மீது காதல்!


அதென்ன பெயரின் மீது காதல்? ஒவ்வொருவருக்கும் முதல் அடையாளமாக இருப்பது நம்முடைய பெயர்தான். அந்தப் பெயரில்தான் எத்தனை விதம்? 


பெற்றோர்கள் வைத்தப் பெயர், நண்பர்கள் வட்டத்தில் ஒரு பெயர், பெற்றோர் வைத்தப் பெயர் பிடிக்காமல் போய் தாங்களாகவே வைத்துக்கொண்ட பெயர் என்று பெயர்களின் மீது உள்ள காதல் இதுவரை மட்டுமல்ல.. இனிமேலும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.


அந்தப் பெயரால் வந்த சுவாரஸ்யங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.


ஸ்ரீஅகிலா! இது என்னுடைய ஜாதகப்பெயர். ஆனால் இந்தப்பெயரை என்னுடைய சர்டிஃபிகேட்டில் கொடுக்காமல் வெறும் அகிலா என்று மட்டுமே கொடுத்தார்கள். 'அகிலா' இதன் முதலெழுத்து A என்று ஆரம்பிப்பதால் க்ளாஸ் ரூமில் முன்னாடி உட்கார வைத்து விடுவார்கள். (கொடுமை! க்ளாஸில் தூக்கம் வந்தால் தூங்கவே முடியாது) எக்ஸாம் ஹாலிலும் முதல் பெஞ்சில் உட்கார வைத்து ஒரு பிட்டு கூட அடிக்க முடியாமல் செய்து விடுவார்கள். வீட்டில் கூப்பிடுவது 'பேபி'என்றாலும் நல்லவேளை அந்தப்பெயரையே எனக்கு வைத்து விடவில்லை. (வைத்திருந்தால்..நான் பாட்டியான பிறகு 'பேபி பாட்டி' என்றுதான் கூப்பிட்டிருப்பார்கள். ஷ்ஷ்! கற்பனை செய்யவே முடியவில்லை)  


கண்கள் பெரிதாக இருந்ததால் என்னை 'முட்டக்கண்ணு' என்று கூப்பிட்டவர்கள் ஏராளம். அப்படி கூப்பிடுபவர்களை அதே முட்டைக்கண்ணை வைத்து முறைத்து விட்டு சென்றுவிடுவேன். அந்தக் கண்ணைக் கொடுத்ததற்காக கடவுளையும் திட்டியிருக்கிறேன். அந்த தாழ்வு மனப்பான்மை, அந்தக் கண்களுக்காகவே என்னை ஸ்கூலில், நடனத்தில் சேர்த்துக் கொள்ளும் போதும், அந்தக் கண்களை வர்ணித்து லவ்லெட்டர் வந்தபோதும் தானாக விலகிப்போனது.


நண்பர்கள் குழுவில் என்னை 'அகில், அகில்ஸ்' என்றெல்லாம் சுருக்கி கூப்பிடும்போது அந்தப் பெயர் எனக்கு ரொம்பவும் பிடித்துப்போனது. அதன் அர்த்தம் தெரிந்தபோது அதைவிட அந்தப்பெயரின் மீது காதல் வந்தது.


என் கணவரும் அடிக்கடி சொல்லுவார், "எனக்கு முதலில் ராஜாஜி என்றுதான் பெயர் வைக்கப்பார்த்தார்கள், ஆனால் நல்லவேளை 'ராஜ்குமார்' என்று வைத்து விட்டார்கள். தப்பித்தேன்!" என்று சொன்னார். பொதுவாக தேசத்தலைவர்களின் பெயர்களை வைத்துக்கொள்ள யாருக்கும் விருப்பமில்லை என்பது தான் உண்மை. அப்படி வைத்தாலும் அதையும் சுருக்கி ஸ்டைலாக வைத்துக்கொள்வது பலருக்கும் பிடித்தமான விஷயம். 


பிடிக்காத பெயரைப் பெற்றோர்கள் வைத்துவிட்டால் அதனால் வரும் தாழ்வு மனப்பான்மையும் அதிகம் தான். அனைவரும் கிண்டல் செய்வதாலேயே அந்த எண்ணம் வருகிறது என்று நினைக்கிறேன். 


வீட்டில் பெண், மாப்பிள்ளை பார்க்கும் நேரத்தில் கூட இந்தப் பெயருக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்தப் பெயருக்காகவே பல வரன்களைத் தட்டிக்கழித்தவர்களும் ஏராளம். (அதுசரி அர்ச்சனா என்று வைத்தால் பிடிக்கும், அருக்காணி என்று வைத்தால் பிடிக்குமா?)


இப்போது அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்டைலாக பேர் வைப்பது கூட அதன் மீது உள்ள காதலால் தான். என் மகள் பிறந்த போதும் பெயர் பிரச்சினை தலை தூக்கியது. பெரியவர்கள் இப்படித்தான் வைக்க வேண்டும் என்று ஆரம்பித்தார்கள். நட்சத்திரப் பெயர்தான் வைக்க வேண்டும் என்றும் சண்டை போட்டார்கள். நாங்கள் யாருக்கும் இசைந்து கொடுக்கவில்லை. 


அவரவர்களுக்கு எப்படி பிடிக்கிறதோ அப்படி கூப்பிட்டுக்கொள்ளுங்கள். நாங்கள் இப்படித்தான் வைப்போம், சர்ட்டிஃஃபிகேட்டிலும் நாங்கள் வைக்கும் பெயர்தான் இருக்கும் என்று உறுதியாக இருந்தோம். 


அப்படி ஆசையாக என் மகளுக்கு வைத்தப் பெயர்தான் 'ரிஜூதா'. அவள் வளர்ந்து வரும் போது அது நல்லப் பெயராகவும், கொஞ்சம் ஸ்டைலாகவும்  இருக்க வேண்டும் என்றும் இந்தப்பெயரை வைத்தோம்.


ஆனால் அவளுக்கும் 'ரிஜூதா' என்ற முழுப்பெயர் ஸ்கூலில் தான் கூப்பிட வேண்டும். வீட்டிற்கு வந்தால் ரிஜூதான். இல்லாவிட்டால் ரகளைதான்.  அவளை வெறுப்பேற்ற வேண்டும் என்றால் ரிஜூதா என்று கூப்பிட்டால் போதும். சிறு குழந்தைகளுக்கும் அவர்களின் பெயர் மீது உள்ள காதல் இங்கிருந்தே தொடங்கி விடுகிறது.


பதிவுலகத்துக்கு வந்தபிறகு முதலில் கவர்ந்ததும் பலருடைய பெயர்கள் தான். எத்தனையோ பேருக்கு தங்களுடைய பெயர்களால் வந்த சீண்டல்களும், சுவாரஸ்யங்களும் நிறைய இருக்கும். அதைப் பலரும் பகிர்ந்து கொள்ளலாமே, அதற்காக இதை தொடர்பதிவாக கொண்டு செல்லலாம் என்று நினைக்கிறேன்.


உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களுடைய பெயரால் வந்த சுவாரஸ்யங்களை, கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். படிப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். 


இந்த தொடர்பதிவுக்கு நான் அழைப்பது; (விருப்பமிருந்தால்)


சந்தன முல்லை  (இந்தப்பெயர் எனக்கு மிகவும் பிடித்திருப்பதால்)


Tuesday, 15 February, 2011

தீரவில்லையா ஆண்பிள்ளை மோகம்!


சமீபத்தில் சிநேகிதி ஒருவரிடம் தொலைபேசியில் பேசினேன். அவ‌ருக்கு இரண்டாவதும் பெண் குழந்தையாக பிறந்து ஒரு வருடம்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் அவரின் இருவீட்டுக் குடும்பத்தாரும் சேர்ந்து ஆண்பிள்ளை வேண்டும் என்ற ஆசையால் தொந்தரவு செய்வதை என்னிடம் தொலைபேசியில் சொன்னார்.


இரண்டாவது சிசேரியன் செய்யும்போதே குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனையும் சேர்த்து செய்திருக்கலாமே என்று கேட்டேன். ஆனால் அவர், அதற்கு குடும்பத்தார் யாரும் சம்மதிக்கவில்லை என்று வருத்தப்பட்டார். இப்போதே இரண்டு பெண்குழந்தைகள் ஆகிவிட்டது. இவர்களை வள்ர்ப்பதற்கே எனக்கு நேரம் சரியாக இருக்கும். இன்னும் 'ஆண்பிள்ளை' ஆசையை சொல்லி வேறு தொந்தரவு செய்கிறார்கள். இவர்களை எதுவும் செய்யமுடியாமல் நான் 
தவிக்கிறேன் என்று சொன்னார்.


இப்போதே ஜனத்தொகை நூறு கோடியை எட்டிவிட்ட நிலையில் ஆண்பிள்ளை மோகம் இன்னும் தீராமல் இருப்பதை நினைத்து வருந்துகிறேன். ஆண்பிள்ளை பிறந்தால் எதை அடைந்து விடுகிறார்கள்? பெண்பிள்ளை பிறப்பதால் எதை இழந்துவிடுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.


ஒரு குடும்பத்தில் முதலில் பிறப்பது ஆணாக இருக்க வேண்டும் என்றுதான் பொதுவாக பலரும் நினைக்கிறார்கள். அது பெண்ணாக பிறக்கும்போது அடுத்தது ஆணாக இருக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. அனைவருக்கும் ஆண் ஒன்று, பெண் ஒன்று இருக்க வேண்டும் என்று ஆசைதான். அது அமையாமல் போனால் ஏன் வருத்தப்படுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. அதில் சின்ன சலிப்பும் கூட தொற்றிக்கொள்கிறது.


ஆண்பிள்ளை என்றால் வரவு, பெண்பிள்ளை என்றால் செலவு என்ற காலமெல்லாம் முந்தைய தலைமுறையோடு போய்விட்டது. இன்று நாட்டில் இருக்கும் விலைவாசியில் ஆண், பெண் பாகுபாடில்லாமல் தான் செலவு செய்ய வேண்டியதிருக்கிறது. என்னைப்போலவே என்னுடைய பெண்ணும் கஷ்டப்பட வேண்டாம் என்றுதான் பல தாய்மார்கள் நினைக்கிறார்கள். அந்தக் கஷ்டத்தை நம்மைவிட பலமடங்கு சக்தியுடன் எதிர்கொள்ள பழக்கப்படுத்துவது தான் பெற்றோர்களின் கடமை.


படுத்த படுக்கையாகிவிடும் கடைசிக்காலத்தில் (நிர்வாணக் கோலத்தில் கிடந்தால் கூட) நம் தாய், தந்தை, மாமனார், மாமியார் என்று அனைவரையும் அரவணைக்கும் பக்குவம் ஒரு பெண்ணுக்கு இயற்கையாகவே வந்துவிடும். இந்த மன‌நிலை ஆணுக்கு வருவது கடினம். அதையும் மீறி அவர்கள் செய்ய வேண்டும் என்றால் அதற்கு அவனுடைய மனைவியோ, அக்காவோ, தங்கையோ அவ‌ர்களின் துணை தேவை. இது தெரியாமல் பல பெற்றோர்கள் என் பிள்ளை வந்து கொள்ளி வைத்தால் தான் என்கட்டை வேகும் என்று புலம்புவார்கள்.


அந்த புலம்பல்களுக்குப் பின்னால் கண்டிப்பாக ஒரு பெண்ணின் அரவணைப்பு இருக்கும். அது மகளாகவோ, மருமகளாகவோ, பேத்தியாகவோ அல்லது ஒரு நர்ஸாகவோ கூட இருக்கலாம்.  


அந்த அரவணைப்பைத் தரும் பெண்பிள்ளையை பெற்றெடுத்ததற்காக சந்தோஷ‌ப்படுங்கள். என்னைப் பொறுத்தவரை, ஒரு பெண்குழந்தையை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள், இரண்டு பெண்குழந்தைகளை பெற்றவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.


ஆண்குழந்தைகளை வரவேற்போம்! 
பெண்களை மதிக்க கற்றுக்கொடுப்போம்! 
பெண்குழந்தைகளையும் வரவேற்று 
பெண்ணை பெற்றெடுத்ததற்கு பெருமைப்படுவோம்!

Thursday, 20 January, 2011

வாழ்க்கைப் பாடம்!

சிறுவயதில் அம்மா ஆக்ரோஷமாக அடித்துத் திட்டும்போது
நினைத்துக் கொண்டேன்
அம்மா கோபப்படும்போது அசிங்கமாக இருக்கிறாள்
நான் அப்படி இருக்க மாட்டேன்
எல்லாரிடமும் பொறுமையாகப் பேசி அழகாக இருப்பேன் என்று.

சிறுவயதில் அண்ணன் அடித்தவுடன் 
வலி தாங்காமால் அழும்போது நினைத்துக் கொண்டேன்
யாரையும் இப்படி அடிக்கக் கூடாது அவர்களுக்கும் 
இவ்வளவு வலிக்குமே என்று.


கொஞ்சம் வளர்ந்தவுடன் ஏதோ ஒரு நேரத்தில் 
அப்பாவும், அம்மாவும் சண்டைபோட்டு 
வார்த்தைகளை வீசி வருந்தும் போது 
மனதில் நினைத்துக் கொண்டேன்
யாரிடமும் காயப்படுத்தும் வார்த்தைகளைப் 
பேசக்கூடாது என்று.


படிக்கும் வயதில் சாப்பாடு பிடிக்கவில்லை என்று 
டிபன் பாக்ஸில் உள்ளதை மொத்தமாகக் கொட்டிவிட்டு 
மெத்தனமாக திரும்பி வரும்போது
யாரோ "அம்மா, சாப்பிட்டு மூணு நாளாச்சு..
ஏதாச்சும் தர்மம் பண்ணும்மா" என்று சொல்வது 
காதில் விழ அப்போதே மனதில் நினைத்துக் கொண்டேன்
சே! இந்த சாப்பாட்டை வீணாக்குவது 
எவ்வளவு தவறு என்று.


அவசரத்தில் ஒரு பேனா, பென்சிலைக் கூட 
சக தோழிகளுக்குத் தர மனமில்லாமல் 
உதாசீனப்படுத்தும் மற்ற தோழிகளைப் பார்த்து
மனதில் நினைத்துக் கொண்டேன்
நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்குக் 
கொடுக்க வேண்டும் என்று.


யாராவது ஒருவரைப் பற்றி குறை சொல்லிப் 
புலம்புவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு 
அதை அவர்களிடமே எடக்குமடக்காகப் போட்டுக்கொடுத்து மாட்டிவிடும் 
என் கணவரைப் பார்த்து மனதில் நினைத்துக் கொண்டேன்
யாரைப்பற்றியும் குறை சொல்லக்கூடாது என்று.


கெட்ட வார்த்தை பேசுவதால் கடுமையாகக் கண்டித்து விட்டு வருத்தப்படும்போது இனி அப்படி பேச மாட்டேன்மா 
என்று உடனே கோபத்தை மறந்து கட்டிக்கொள்ளும்
குழந்தையின் இயல்பைப் பார்த்து 
மனதில் நினைத்துக் கொண்டேன்
யாருடையக் கோபத்தையும் உடனே மறந்து விடும்
இந்த குழந்தை மனதுடன் இருக்க வேண்டும் என்று.
நான் வாழ்க்கையில் பக்குவப்பட 
இத்தனை பேர் உதவியிருக்கிறார்களே
என்று ஆச்சர்யப்படும் வேளையில்
நான் வாழ்நாள் முழுவதும் பக்குவப்பட 
இன்னும் எத்தனைப் பேரை
சந்திப்பேன்? காத்திருக்கிறேன் ஆவலுடன்!Tuesday, 18 January, 2011

தேர்தல் பண்பாடு

நம்ம ஊர் அரசியலைப் பொறுத்தவரை, ஒரே குடும்பத்தில் உள்ள அண்ணன், தம்பி வேறு வேறு கட்சியில் இருந்தால் அதுவே குடும்பத்துக்குள் சண்டையாக மாறி அடிதடியில் முடிந்துவிடும் அளவுக்குப் போய்விடும்.


நம்ம ஊர் அரசியல் இப்படிப்பட்ட நிலையில் தான் இருக்கிறது.


ஆனால் இங்கிலாந்தில் எப்படித் தெரியுமா?


அங்கே ஒரே மேடையில் போட்டியிடுகிற இரு வேட்பாளர்களும் பேசுவார்களாம், பட்டிமன்றம் மாதிரி.


ஒருமுறை இது போன்ற ஒரு கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு வேட்பாளர் மக்கள் தனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கானக் காரணங்களை வரிசையாகச் சொல்லி, "ஆகவே எனக்கு வாக்களியுங்கள்" என்ற வேண்டுகோளோடு பேச்சை முடித்துக் கொண்டு தன் இருக்கைக்கு சென்றுவிட்டார்.


அதுவரை போட்டி வேட்பாளர் அங்கு வந்து சேரவில்லை. மக்களோடு முதலில் பேசிய வேட்பாளரும் காத்திருந்தார். அவர் வந்து சேர தாமதமாகியதால் முதலில் பேசியவர் ஒலிவாங்கியின் முன் வந்து நின்று பேச ஆரம்பித்தார். எப்படித் தெரியுமா?


"என்னை எதிர்த்துப் போட்டியிடுகிற வேட்பாளர் ஏனோ இன்னமும் வந்து சேரவில்லை. அதன் காரணமாக அவர் தனக்காக ஓட்டு கேட்கும் வாய்ப்பை இழந்து நிற்கிறார். அதனால் அவர் சார்பாக நான் பேச விரும்புகிறேன். அவர் தரப்பு நியாயங்களையும் நானே சொல்கிறேன்" என்று தொடங்கி.. எதிர்தரப்பு வேட்பாளருக்காகவும் இவரே பேசி முடித்திருக்கிறார்.


தேர்தல் பண்பாடு என்பது இப்படித்தானே இருக்க வேண்டும்.


அதுமட்டுமல்ல, அங்கு ஓட்டுக் கேட்கும்போதே வெற்றியா? தோல்வியா? என்பதைக் கணித்துவிட முடியுமாம்.


ஒரு வேட்பாளர் வீட்டுக்கு முன்னால் நின்று, "எனக்கு ஓட்டுப் போடுங்கள்" என்று கேட்டால் "அதுக்கென்ன..பார்த்துச் செய்யறோம்" என்று வாசலிலேயே அனுப்பி வைத்து விடுவார்களாம். இப்படி வாசலிலேயே அனுப்பி வைப்பவர்களின் ஓட்டு நிச்சயம்.


வேறு சில வீடுகளில் வேட்பாளரை வீட்டுக்குள்ளே கூப்பிட்டு உட்கார வைத்து காபி கொடுத்து அனுப்புவார்களாம். இந்த ஓட்டு நிச்சயமில்லாததாம். இந்த உபசரிப்பு, ஓட்டுப்போட போவதில்லை..இதையாவது செய்வோம் என்ற அனுதாபத்தில் தான் அப்படி நடந்து கொள்வார்களாம்.


தேர்தல் பண்பாடு என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்.


(செய்திகள்: தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் எழுதிய 'சிறகை விரிப்போம்!' எனும் நூலிலிருந்து)


நம்ம ஊர் அரசியல் நிலவரத்தையும் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் அய்யோ..யோசிக்கவே முடியவில்லை. நம் ஊரில் ஓட்டுக் கேட்கும் விதமே தனிதான். நம்ம ஊர் அரசியல்வாதிகள் ஓட்டுக்காக எந்த அளவுக்கு இரங்கிப் போகிறார்கள். அரசியல் ஒரு சாக்கடை என்பது உண்மைதானோ!


இங்கே அரசியல் திருடர்களில் கொஞ்சமாகத் திருடுபவன் யாரோ? என்று தேடும் நிலையில் இருக்கிறார்கள் மக்கள்.