Saturday 7 August, 2010

பயணத்தில்......

சில வருடங்களுக்கு முன்பு பஸ்ஸில் பயணம் செய்ய நேர்ந்தது. பஸ்ஸில் மூதாட்டி ஒருவரின் இருக்கைக்கு அருகில் இடம் இருந்தது. அவருக்குத் தலை நன்றாக நரைத்திருந்தது. கண்கள் சோர்வாக, வாயில் வெத்தலை மென்று கொண்டிருந்தார். நான் அவ்ர் அருகில் சென்று, "கொஞ்சம் தள்ளி உட்காருங்க பாட்டி" என்று சொன்னேன். அவர் என்னை ஒருமாதிரியாக முறைத்துப் பார்த்துவிட்டு தள்ளி உட்கார்ந்தார். தள்ளித் தானே உட்காரச் சொன்னோம் ஏன் இப்படி முறைக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. சிறிது நேரம் மௌனமாக இருந்த அவர், "உன் வயதில் எனக்கொரு மகள் இருக்கிறாள். ஆனால் நீ என்னைப் பாட்டி என்று சொல்கிறாயே?" என்றார். ஓ... அவர் முறைப்பின் காரணம் நன்றாகப் புரிந்தது.



அது சின்ன விஷயம் தான். ஆனாலும் ஏனோ என் மனம் அவர் வயதில் உள்ளவர்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது. தனக்கு வயதாகி விட்டதே என்றக் கோபத்தில் அவர் அப்படிச் சொன்னாரா? அல்லது இளமைப் போய் விட்டதே என்ற வருத்தத்தில் சொன்னாரா எனக்குத் தெரியவில்லை. உண்மையிலேயே அவர் தன் தோற்றத்தில் மட்டுமே அப்படி இருந்திருக்கலாம். அது தெரியாமல் அப்படிச் சொன்னது என் தவறுதான்.


நம் அனைவருக்குமே சிறு வயதில் செய்த குறும்புகளும், நினைவுகளும், அந்த நாட்கள் திரும்பக் கிடைக்காதா என்ற ஏக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன. சிறு வயதில் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் மகிழ்ந்த நமக்கு வயது ஏற, ஏற அதன் மேல் உள்ள ஆர்வம் குறைந்து விடுகிறதே. ஏன்? ஒருவேளை வயதாகி விட்டதே என்ற சலிப்புதான் காரணமோ? இன்றைய உலகில் நாம் அனைவருமே தோற்றத்தாலும், மனதாலும் இளமையாக இருப்பதைத்தான் விரும்புகிறோம். ஆனாலும் யாராவது நமக்கு வயதாவதை சுட்டிக் காட்டும்போது கொஞ்சம் கோபம் வரத்தான் செய்கிறது.


நம் குழந்தை வயதை ஒத்த குழந்தைகள் நம்மை ஆன்ட்டி, அங்கிள் என்று கூப்பிடும்போது பெரிதாக ஒன்றும் தோன்றுவதில்லை. ஆனால் அதையே வளர்ந்த டீன்-ஏஜ் பெண் சொன்னால்?.. அதற்காக பெரிதாக வருத்தப்படவில்லை என்றாலும், இவ்வளவு பெரிய பெண்ணாக இருந்து கொண்டு ஒரு குழந்தைக்குத் தாயானக் காரணத்தினாலேயே நம்மை ஆன்ட்டி என்கிறாளே என்ற ஒரு சின்ன முணுமுணுப்பாவது இருக்கத்தான் செய்கிறது. அப்போது இளமைக் கால நினைவுகள் நம்மை ஏங்க வைக்கின்றன.


நமக்கு இருக்கும் இதே ஏக்கங்கள் தானே நம்மை விடப் பெரியவர்களுக்கும் இருக்கும். அவர்களை விட சிறு வயதில் உள்ளவர்கள் பெரிசு, கிழவி, கிழம் என்றெல்லாம் அழைக்கும் போது அவர்களுக்கும் அந்த வருத்தம் இருக்கத்தானே செய்யும். காலம் வேகமாக் ஓடுவதில் அந்த வருத்தத்தை மறைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வயதாகி விட்டதன் சலிப்பு ஒவ்வொரு முதியவருக்கும் இருக்கத்தான் செய்கிறது.


இப்போதெல்லாம் என்னை விடப் பெரியவர்களை வாங்க, போங்க என்று பொதுவாகத்தான் அழைக்கிறேன். இல்லையென்றால் உங்களை நான் எப்படிக் கூப்பிட வேண்டும்? என்று அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டுதான் கூப்பிடுகிறேன். அதில் அவர்களுக்கும் மகிழ்ச்சி, அவர்கள் விருப்பப்படியே அழைப்பதில் எனக்கும் மகிழ்ச்சி!