Wednesday, 15 September 2010

ஸ்வர்ணலதாவின் நினைவாக....

பாடகி ஸ்வர்ணலதா மறைவு!



இந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. "மாலையில் யாரோ மனதோடு பேச.." என்று பாடிய அந்த வசீகரக் குரலில் மயங்காதவர்கள் யாராவது உண்டா?

ஸ்வர்ணலதாவின் குரலைக் கேட்பதற்கு முன்பு, உனக்கு மிகவும் பிடித்தப் பாடகர் யார்? என்று கேட்டால் உடனே நான் சொல்வது எஸ்.பிபியையும், சித்ராவையும் தான். அவர்கள் எனக்கு இன்னமும் பிடித்தப் பாடகர்களாக இருந்தாலும் ஸ்வர்ணலதாவின் பாடல்கள் பிடித்தது ஒரு தனிக்கதை.

அவர் பாடி எனக்குப் பிடித்த பாடல்கள்;

"என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட.." - உன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன்

"அன்புள்ள மன்னவனே ஆசைக் காதலனே.." - மேட்டுக்குடி

"கண்ணாடி சேல கட்டி.." - சார்லி சாப்ளின்


"மல்லிக மொட்டு மனசத் தொட்டு.." - ?

"ஊரடங்கும் சாமத்திலே..." - புதுப்பட்டி பொன்னுத்தாயி

"குயில் பாட்டு ஹோ.." - என் ராசாவின் மனசிலே

"ஆத்தோரம் தோப்புக்குள்ள..." - ?

"கானக்கருங்குயிலே கச்சேரிக்கு..." - பாண்டித்துரை

"காதலா காதலா..." - சூரிய வம்சம்

"மெல்லிசையே.. என் இதயத்தின்.." - மிஸ்டர் ரோமியோ

"காலையில் கேட்டது கோயில் மணி.." - செந்தமிழ்ப்பாட்டு

இன்னும் நிறைய. இந்தப் பாடல்களை எல்லாம் கேட்ட ஆரம்பத்தில் இதை ஸ்வர்ணலதாதான் பாடினார் என்று எனக்குத் தெரியாது. ஆஹா! இந்தப் பாடல் கேட்பதற்கு இவ்வளவு நன்றாக இருக்கிறதே, இதை யார் பாடியிருப்பார்கள் என்று தேடும்போது தான் தெரியும் அது ஸ்வர்ணலதா பாடியது என்று. அப்படித்தான் அவர் பாடல்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது.

மனதில் நிற்காத படங்களில் கூட அவர் பாடிய பாடல்கள் மனதிற்கு இனிமையாக இருந்தது. இப்படி தன் குரலால் எத்தனை பேரை வசியப்படுத்தி இருப்பார்.

ஆனால் இன்று ...அவர் இல்லை என்பதை நினைக்கும் போது...

அதுவும் இந்த சின்ன வயதில், எவ்வளவோ சாதனைகள் செய்ய வேண்டிய வயதில் அல்ப ஆயுசில் மறைந்து போனது என்னைப் போன்ற ரசிகர்களுக்கு மிகப் பெரிய இழப்பு.

ஆழ்ந்த இரங்கல் என்றெல்லாம் ஒரு வார்த்தையில் முடிக்க முடியவில்லை. (அவர் இல்லை என்பதை நினைக்கும் போது).

Tuesday, 7 September 2010

ஆண், பெண் சுதந்திரம்

சமீபத்தில் 'நான் மகான் அல்ல' படம் பார்த்தேன். அதில் நிறையக் காட்சிகள் பார்ப்பதற்கு கொடூரமாகத் தெரிந்தாலும் அவை அனைத்தும் இன்று நாட்டில் நடக்கக்கூடியதாகத்தான் இருக்கின்றன. படத்தில் வில்லன்களாக வரும் கல்லூரி மாணவர்கள் இதுபோன்ற தவறுகள் செய்யும் ஆண் பிள்ளைகளை அப்படியே தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். நான் அந்தப் படத்தின் விமர்சனங்களுக்குள் செல்லாமல் விஷயத்துக்கு வருகிறேன்.


போதைக்கு அடிமையாகி, பெண்களைக் கற்பழித்து, கொலை செய்யும் அளவிற்கு மாணவர்கள் செல்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு முழுமையானக் காரணம் பெற்றோர்கள் ஆண்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் அளவுக்கு மீறிய சுதந்திரம்தான்.

ஒரு வீட்டில் பெண்பிள்ளையை "இருட்டிய பிறகு ஏன் வெளியே செல்கிறாய்?" என்றுக் கட்டுப்படுத்தும் அதே அம்மாதான் ஆண்பிள்ளையை இரவு முழுவதும் வெளியே நண்பர்களுடன் தங்கிக் கொள்வதற்கும் அனுமதி கொடுக்கிறாள். ஏன் இந்த முரண்பாடு? அதனால் யாருக்கு என்ன பயன்?

ஆண்களைப் போல் பெண்கள் வெளியே சுதந்திரமாகத் திரிய வேண்டும் என்றில்லை. ஆனால் பெண்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகளை ஆண்பிள்ளைகளுக்கும் கொடுத்தால் இந்த சமூகத்திற்கு நல்லது.

நட்பு வட்டம் பெற்றோர்களின் கண்காணிப்பில் இருக்கும் வரைப் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் நண்பர்களுடன் வெளியே தங்குகிறேன் என்று ஒரு ஆண் சொன்னால் அது குடித்து கும்மாளம் போடுவதற்காகத்தானே தவிர வேறு எதற்காகவுமில்லை.

என் கணவர், அண்ணா, மாமா, சித்தப்பா, அப்பா என்று உறவினர்கள் அனைவரிடமும் இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்றுக் கேட்டால் அனைவரும் ஒன்றாக சொன்னது "நண்பர்கள் பழக்கிவிட்டார்கள்" என்பதுதான்.

குடி, போதை என்று அடிமையாகி கிடப்பவர்கள் ஒன்றாகச் சேரும்போது குடிக்காத இன்னும் இரண்டு பேரைக் குடிக்க வைத்துக் கெடுக்கிறார்கள். போதைத் தலைக்கேறினால் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது நினைவிலே இருப்பதுமில்லை. அதிலும் அந்தப் போதையில் ஊறிப்போன அனைவரும் சொல்லும் ஒரு மட்டமான டயலாக் "என்னோட லிமிட் எனக்குத் தெரியும்" என்பது.

இதற்கெல்லாம் காரணம் ஆண்களுக்கு பெற்றோர்கள் கொடுக்கும் அளவுக்கு மீறிய சுதந்திரம். அந்த அளவுக்கு மீறிய சுதந்திரத்தால், தவறான நட்புகளுடன் சேர்ந்து தானும் கெட்டு, இன்னும் நாலு பேரை சேர்த்துக் கெடுக்கிறார்கள், பெண்கள் வாழ்க்கையையும் சீரழிக்கிறார்கள். இதற்கு காரணமாக அம்மா என்னும் இன்னொரு பெண்ணேக் காரணமாக இருப்பது அதைவிட வேதனையிலும் வேதனை.

பெண்கள் தங்கள் நட்பு வட்டத்தில் ஒரு சின்னத் தவறு நடந்தால் கூட பயத்தில் உளறி விடுவார்கள். ஆனால் ஆண்கள் பெரிய தவறே என்றாலும் தன் நண்பனுக்காக என்று அனைத்தையும் மூடி மறைத்து விடுவார்கள். இது ஆரோக்கியமான விஷயமா?

ஆண்பிள்ளைகள் வைத்திருக்கும் இன்றையத் தலைமுறைப் பெற்றோரே! பெண்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் கட்டுப்பாடுகளில் சிலவற்றை ஆண்பிள்ளைகளுக்கும் கொடுத்து அடுத்த தலைமுறையைக் காப்பாற்றுங்கள்!

Monday, 30 August 2010

கவனமுடன்....

ஒருநாள் நானும், எனது கணவரும் குழந்தைக்கு ரெயின் கோட் வாங்குவதற்காக கடைத்தெருவுக்குச் சென்றிருந்தோம். ரெயின் கோட் வாங்கிவிட்டு வெளியில் வந்தவுடன், கடைக்கு வெளியே ஸ்வீட் கார்ன், கலர் கலராக ஜூஸ் எல்லாம் வைத்திருப்பதைப் பார்த்தவுடன் எனக்குக் கலர் ஜூஸ் வேண்டும் என்று அழுது அடம்பிடித்தாள் என் குழந்தை. எவ்வளவு தான் சமாதானம் செய்தாலும் முடியவில்லை.


"எனக்குப் பசிக்குதும்மா, ப்ளீஸ்மா" என்று அவள் கெஞ்சியதைப் பார்த்தவுடன் பாவம் என்று இரக்கப்பட்டு வாங்கினேன். அவள் கையில் இன்னும் நான் கொடுக்கவில்லை. கையில் இருப்பதைப் பிடுங்கத்தான் பார்த்தாள்.

என் கணவர் சில்லறை மாற்றிக் கொண்டிருக்கும்போது, கையில் வைத்திருந்த ஜூஸை யதேச்சையாகப் பார்த்தேன். பார்க்கும் போதுதான் தெரிந்தது, அதன் எக்ஸ்பையரி டேட் முடிந்து ஒரு மாதம் ஆகிறது என்று. சரி, வேறு பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என்றுப் பார்த்தால் வரிசையாக எல்லா பாட்டிலிலும் ஒரே டேட் தான் இருந்தது.

அதிர்ச்சியாக என் கணவரிடம் காட்டினேன். அவர் கடைக்காரனிடம் கேட்டதற்கு ஏதேதோ சொல்லி மழுப்பினான். என் கணவர் காசைத் திருப்பிக் கேட்டார். அதற்குள் என் குழந்தை வேறு ஒரு பாட்டிலை எடுத்துப் பிரித்து விட்டாள். அவள் பிரித்ததை வைத்துக் கடைக்காரன் பிரச்சினை செய்தான். என் கணவர் கோபமாக என் குழந்தைக் கையில் வைத்திருந்த பாட்டிலைப் பிடுங்கி கடைக்காரன் கண்முன்னேத் தூக்கி எறிந்து விட்டார்.

"இதெல்லாம் ஏன் குழந்தைக்கு வாங்கிக் கொடுக்கிறே?" என்று எனக்குத்தான் திட்டு விழுந்தது. அந்த இடத்தை விட்டுக் கிளம்பும் போது, அடுத்தடுத்து வந்தவர்கள் அந்த ஜூஸை வாங்கிக் கொண்டே இருந்தார்கள். யாருமே அந்தப் பாட்டிலைக் கவனிக்கவே இல்லை. என் கணவர் திட்டியது கூட எனக்கு கஷ்டமாக இல்லை. ஆனால் யாருமே இந்த மாதிரி விஷயங்களைக் கவனிக்காமல் இருந்தது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

"இப்படி ஏமாத்துறாங்களே. நான் வேணுன்னா அவங்ககிட்ட சொல்லிட்டு வரவா?" கணவரிடம் கேட்டேன். அதற்கும் திட்டு விழுந்தது.

"அவனுக்கென்ன அக்கறை? வாங்கிக் குடிப்பவர்களுக்குத்தான் அறிவு வேண்டும்." என்று சொன்னார் என் கணவர்.

என்ன சொல்லணும்னு தெரியாமல் முழித்தேன்.
இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில்  அனைவரும் கவனமாக இருக்கத்தான் இதை எழுதுகிறேன். (முக்கியமாகக் குழந்தை வைத்திருப்பவர்களுக்கு)

Thursday, 19 August 2010

டீன்-ஏஜ்

எதிர் வீட்டு முரளியைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு சின்னக் குறுகுறுப்பு, சந்தோஷம், வெட்கம் எல்லாம் வந்தது அவளுக்கு. காலையில் அவன் வீட்டு வாசலில் வண்டியைத் துடைக்கும் அழகைப் பார்ப்பதற்காகவே புத்தகமும், கையுமாக ஜன்னலோரம் உட்கார்ந்து விடுவாள். தினமும் ஒரு தடவையாவது அவனைப் பார்க்காவிட்டால் அவளுக்குத் தூக்கமே வருவதில்லை. அவனும் அவளைப் பார்க்காமல் இல்லை. ஓரக் கண்ணால் அவள் செய்கைகளை ரசித்துக் கொண்டுதான் இருந்தான்.



ஒரு வருடமாகவே இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது. இன்று சொல்லலாம், நாளை சொல்லலாம் என்று நினைத்து நினைத்துத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தாள் அவள். சொல்லி விட்டால் இந்த சந்தோஷமும் நிலைக்காதோ? குழப்பமாக இருந்தது.

இந்த வருடம் பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுத வேண்டும். படிப்பில் கவனம் சென்றால்தானே. இப்படி ஒரு அவஸ்தையை அனுபவிப்பதற்கு பேசாமல் நேரில் சொல்லி விடலாம் என்று நினைத்தாள். பாடப் புத்தகத்தைக் கையில் எடுத்தாலே அவன் முகம்தான் ஞாபகம் வருகிறது. படிப்பு மண்டையில் ஏறவே இல்லை. புத்தகத்தை எரிச்சலுடன் மூடி வைத்தாள். மனம் திரும்பத் திரும்ப அவன் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தது. எத்தனை நாள்தான் இந்த சுகமான அவஸ்தையை அனுபவிப்பது? முடிவுகட்டி விட்டாள். நாளைக் கண்டிப்பாக சொல்லியேத் தீர வேண்டும். சொல்லாமலேயே இருந்துவிட்டால் தன் வாழ்க்கைத் தன்னை விட்டுப் போய்விடும். என்ன ஆனாலும் சரி, அதன் பிறகுப் பார்த்துக் கொள்ளலாம். நாளை மனம் திறந்து பேசி விடுவது நல்லது. ஒரு முடிவுடன் உறங்கி விட்டாள்.


மறுநாள் காலை ஜன்னலோரம் எட்டிப் பார்த்துவிட்டு, பேப்பர் படித்துக் கொண்டிருந்த தன் அப்பாவிடம் வந்தாள். "அப்பா, உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்" என்று இழுத்தாள். அவள் அப்பா அவளை நிமிர்ந்துப் பார்த்தார். அவ்வளவுதான்! அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்த அவள் அப்பா, "என்னம்மா, என்ன ஆச்சு?" என்று தலையைக் கோதினார். "அப்பா, என்னால் படிக்கவே முடியவில்லை. புத்தகத்தை எடுத்தாலே எதிர் வீட்டு முரளிதான் மனதில் வருகிறான். அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், அவனிடம் பேச வேண்டும் என்று ஆசையாக உள்ளது. என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. நான் என்ன செய்ய? " ஒரு வழியாக மனதில் உள்ளதைக் கொட்டி விட்டாள் அவள் தந்தையிடம்.


அவள் கையை ஆதரவாகப் பிடித்த அவள் தந்தை, "அவ்வளவுதானே! இதற்காகவா அழுகிறாய்? அவனைப் போய்ப் பார்க்க வேண்டுமா? போய்ப் பார்! அவனிடம் பேச வேண்டுமா? போய்ப் பேசு! உன் வயதில் இதுபோல எண்ணங்கள் வருவது சகஜம்தான். அவனிடம் நட்புடன் பழகு. அவனை நம் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வா. அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தால் அவன் தோற்றம் மட்டும் தான் உன் கண்ணுக்குத் தெரியும். அவனுடன் நட்புடன் பழகிப் பார்த்தால் தான் அவனுடைய குறைகளும் உனக்குத் தெரிய வரும். அப்போது உனக்குள் இருக்கும் அவனைப் பற்றிய கற்பனை பிம்பம் தானாக மறைந்து விடும். புரிகிறதா?" என்று சொன்னார்.

அப்பாவின் வார்த்தைகளைக் கேட்ட அவளுக்கு தெளிவு வந்தது. அப்பாவைப் பார்த்து மலர்ந்து சிரித்தாள். "சீக்கிரம் அவனை எனக்கும் அறிமுகம் செய்து வை. என் மகளின் மனதைத் திருடிய அந்த முதல் ஆண்மகனிடம் பேச எனக்கும் ஆசையாக உள்ளது" தன் மகளைப் பார்த்துக் கிண்டலடித்தார் அப்பா.


என் தோழி ஒருத்தி தான் படிக்கும் வயதில் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட விஷயம் இது. அவள் தன் தந்தையைப் பற்றிப் பெருமையாகக் கூறினாள். "அன்று மட்டும் என் தந்தையிடம் என்னுடய நிலைமையைச் சொல்லாமல் இருந்து, என் தந்தையும் என்னைத் தெளிவுப்ப்டுத்தாமல் இருந்திருந்தால்? நான் அவனைக் கண்மூடித்தனமாகக் காதலித்து, வீட்டை விட்டு ஓடிப்போய், வயிற்றில் புள்ளையோடுதான் வந்திருப்பேன். நல்லவேளை அவனிடம் நட்புடன் பழகிப் பார்த்தவுடன் தான் தெரிந்தது, அவன் என் வாழ்க்கைக்கெல்லாம் ஒத்து வரமாட்டான் என்று. அவனையே நினைத்துக் கொண்டு இருந்திருந்தால் கண்டிப்பாக என் வாழ்க்கையில் நான் கஷ்டப்பட்டிருப்பேன்." என்று சொன்னாள்.


தன் மனதில் ஏற்பட்ட மாற்றங்களை, அவஸ்தையைத் தன் தந்தையிடமே பகிர்ந்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு பெண் யோசிக்கிறாள் என்றால், அவள் தந்தைத் தன் மகளிடம் எந்த அளவுக்கு நண்பராகப் பழகியிருப்பார். இது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகப் பட்டது எனக்கு.

பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாகப் பழகினால் அவர்கள் வழித்தவறிப் போக வாய்ப்பில்லை என்பதை இதன் மூலம் தெரிந்துக் கொண்டேன்.

Wednesday, 18 August 2010

மெட்டி ஒலி

எப்போது ஊருக்குச் சென்றாலும் வீட்டில் கழட்டி வைத்திருக்கும் மெட்டியை மறக்காமல் காலில் மாட்டிக் கொண்டு போய்விடுவேன். வீட்டில் உள்ளவர்களிடம் வாங்கும் அர்ச்சனைகளைக் கேட்க முடியாமல் தான். இந்த முறை ஊருக்குச் செல்லும் போது அதை மறந்தேப் போய் விட்டேன். எப்போதும் அதைப் போட்டுக் கொள்ள ஞாபகப்படுத்தும் என் கணவர் இந்த முறை வீட்டில் நன்றாக வாங்கட்டும் என்று அவரும் விட்டுவிட்டார் போலும், மறந்தே போனார்.


வீட்டிற்குச் சென்றவுடன் காலில் மெட்டியைக் காணாமல் ஒரே திட்டு. அதைக் கழுவுவதற்காகக் கழட்டி வைத்தேன், மறந்தேப் போய்விட்டேன் என்று சமாளித்துப் பார்த்தேன். ஒன்றும் முடியவில்லை. அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம் என்று அர்ச்சனை மேல் அர்ச்சனையாக விழுந்து கொண்டிருந்தது.

 "நீங்கள் இதற்கெல்லாம் இடம் கொடுக்காதீர்கள் மாப்பிள்ளை" என்று மாப்பிள்ளைக்கு அறிவுரை வேறு. "இதெல்லாம் அவரவர் மனதைப் பொறுத்த விஷயம். அவள் தாலியைக் கழட்டி வைத்தால் கூட நான் ஒன்றும் சொல்லுவதில்லை." நல்லபிள்ளையாக சமயம் பார்த்து உசுப்பேற்றி விட்டார் என் கணவர். நான் அவரைப் பார்த்து முறைத்தேன்.

"தாலியை வேறு கழட்டி வைக்கிறாளா?" என்று மேலும் மேலும் அர்ச்சனைகள் தொடர்ந்துக் கொண்டிருந்தது. பொறுக்க முடியவில்லை. "மெட்டியைக் காலில் மாட்டினால் எனக்கு மிகவும் அலர்ஜியாகிறது" பொய் சொல்லவில்லை, உண்மையைத்தான் சொன்னேன். யாரும் புரிந்து கொள்ளவில்லை. தாலி, நெற்றியில் வைக்கும் குங்குமம், மெட்டி இதெல்லாம் குடும்பப் பெண்களுக்கு முக்கியம் என்கிற ரீதியில் அர்ச்சனைகள் தொடர்ந்துக் கொண்டேயிருந்தது. சிறு வயதில் இருந்தே கழுத்தில் செயின், கையில் வளையல், காதில் கம்மல் எல்லாம் மாட்டிவிட்டு பழக்கியது போல், மெட்டியையும் போட்டுப் பழக்கியிருக்க வேண்டியதுதானே" எதிர்க் கேள்வி கேட்டேன் அப்பாவிடம். உடனே அம்மா, "எப்படியெல்லாம் பேசிப் பழகியிருக்கிறாள். பாருங்கள்" என்று முணுமுணுத்துக் கொண்டே கையில் வைத்திருந்த டம்ளரை 'டொங்க்" என்ற சத்தத்துடன் வைத்தார். காது கிழிந்தது. சே... ஏந்தான் ஊருக்கு வந்தோமோ என்றிருந்தது.

கணவர், "நன்றாக மாட்டிக் கொண்டாயா?" என்று நக்கலாக என்னைப் பார்த்து சிரித்தார். அவருக்கு இதிலெல்லாம் பெரிதாக நம்பிக்கை இல்லைதான். இருந்தாலும் சமயம் பார்த்துக் காலை வாரி விட்டார் பாருங்கள். கடுப்பாகத் தான் இருந்தது. சரி. சமாளித்தாக வேண்டுமே. என்ன செய்ய? "சரிப்பா. அலர்ஜியாகி, புண்ணாகி விட்டதால் போடாமல் விட்டேன். வேறொன்று வாங்கிக் கொடுக்க வேண்டியது தானே. அதற்கு கூட அவர் எனக்கு நேரம் ஒதுக்குவதில்லை. நான் என்ன செய்ய?", கொஞ்சம் கண் கலங்கியவாறு அப்பாவிடம் கேட்டேன். அப்பா கொஞ்சமாகப் பரிதாபப்பட்டார். "மாட்டினீங்களா?" ஜாடையாகக் கேட்டேன் என் கணவரிடம். அப்பா, " மாப்பிள்ளை...." என்று இழுத்துக் கொண்டே கணவரிடம் திரும்பினார். அப்பாடா என்றிருந்தது. மாப்பிள்ளை என்பதால் கட்டாயம் அர்ச்சனைகள் விழப்போவதில்லை. நான் தப்பித்தேனடா சாமி என்று ஓட்டமாக ஓடி விட்டேன். அந்த நாள் மெட்டிச் சத்தத்தால் ஓய்ந்து போனது.

மறுநாள் ஊருக்குத் திரும்பும்போது என் கணவர், "மெட்டி வாங்கித் தர நேரமில்லைன்னு வீட்ல சொன்னேல்ல. ஒரு டஜன் மெட்டி வாங்கித் தர்றேன். இனிமே அதைக் கழட்டினேன்னு வை, அப்புறம் ஊர்ல இருக்கிறவங்களுக்கு ஃபோன் போட ஆரம்பிச்சிடுவேன். புரியுதா?" என்று கொஞ்சம் மிரட்டினார். "என்ன இருந்தாலும் உங்களை விட எங்க வீட்ல உள்ளவங்களுக்கு முற்போக்கு சிந்தனை கொஞ்சம் கம்மிதானே. அவங்கள என்னப் பண்றது?" ஆறுதல் சொன்னேன் அவ்ரிடம். பெருமூச்சு விட்டபடி தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.

எனக்கு தூக்கமே வரவில்லை. உண்மையில் இந்த மாதிரி ஆபரணங்களில் எல்லாம் எனக்குப் பெரிதாக ஆர்வமுமில்லை, நம்பிக்கையுமில்லை. அது அவரவர் மனதைப் பொறுத்த விஷயம். ஆரம்பத்தில் மெட்டியைப் போடவேக் கூடாது என்றெல்லாம் நான் நினைக்கவே இல்லை.

திருமணத்தன்று மெட்டியைக் காலில் மாட்டும் போது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அது கொஞ்சம் லூசாக இருந்ததால் நடக்கும் போதெல்லாம் கழன்று வந்து விடும். மறுநாளே கழட்டி வைத்துவிட்டால் தவறாக நினைப்பார்களோ என்று விரலால் கவ்விக் கொண்டு கொஞ்சம் தத்தித் தத்தி நடந்தேன். மாமியார் வீட்டில் "சேலைக் கட்டிப் பழக்கமே இல்லையா. இப்படி நடக்கிறாய்" என்று சந்தேகத்துடன் கேட்டார்கள். தயக்கத்துடன் விஷயத்தைச் சொன்னேன். "ஓ.. அப்படியா? சரி. சரி.. மாற்றி விடலாம்" என்று வேறொரு மெட்டியை வாங்கி வந்துக் காலில் மாட்டிவிட்டார்கள். அது கொஞ்சம் பரவாயில்லை.

இதுவரை கழுத்தில் செயின், கையில் வளையல், காதில் கம்மல் என்று அனைத்து விதமான ஆபரணங்களும் போட்டுப் பழகியிருந்ததால் அதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால் புதிதாகப் போட்டிருந்த மெட்டி கொஞ்சம், கொஞ்சமாக உறுத்த ஆரம்பித்தது. நடக்கும் போதெல்லாம் கால் விரல்களை இறுக்கிப் பிடித்திருந்ததால் எரிச்சலாக இருந்தது. ஒரு ஆறு மாதக் காலம் அதை மாட்டிக் கொண்டே இருந்தேன். கால் விரல்களில் அரிக்க ஆரம்பித்தது. அதை மேலும் கீழும் அசைக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டுத்தான் அந்த மெட்டியைக் கழட்டினேன். கழட்டி விட்டுப் பார்த்தால் மெட்டிப் போட்டிருந்த விரலில் புண்ணாகிப் போயிருந்தது. அப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் போடாவிட்டால் என்ன. என்று அதைத் திரும்ப மாட்டவே இல்லை.


ஆரம்பக்காலத்தில் மெட்டி என்பது திருமணமான ஆண்களுக்குத்தான் என்றிருந்ததாம். ஒரு பெண் திருமணமானவள் என்று அவளின் தாலியைப் பார்த்து எப்படி அடையாளம் தெரிந்துக் கொள்வார்களோ அதைப் போல ஒரு ஆண் திருமணமானவன் என்பதை அவன் காலில் அணிந்திருக்கும் மெட்டியைப் பார்த்துத் தெரிந்துக் கொள்வார்களாம். (நான் சொல்வது அந்தக் காலத்தில்). ஆனால் காலப்போக்கில் ஆண்கள் இதையும் பெண்கள் தலையிலேயேக் கட்டி விட்டார்கள் என்று படித்திருக்கிறேன். இன்று வரை ஆண்களுக்குத் திருமணமானவன் என்ற அடையாளம் ஒன்று கூட இல்லை. ஆனால் பெண்களுக்கு எல்லாமே கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. அது கொஞ்சம் சலிப்பைத் தந்தாலும் கணவர் மேல் உள்ள அன்பினால் மட்டும்தான் பெண்கள் அதைச் சுமக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி ஒரு பெண் முற்போக்குத்தனமாக சிந்தித்தால் இந்தச் சமுதாயம் அவளைப் பழிப்பது மிகப் பெரிய வேதனை!

Tuesday, 10 August 2010

பாசம்! (ஒரு துக்க நிகழ்வு)

                      அந்த வீட்டுத் தொலைபேசி அடித்துக் கொண்டே இருந்தது. அந்த வீட்டுப் பெண்மணி தான் எடுத்தார். பேசிவிட்டு வந்தவர் கணவனிடம், "கிராமத்திலிருந்து ஃபோன் வந்திருக்கு. என் கூடப் பிறந்த அண்ணன் சீனிச்சாமி இறந்துட்டானாம். நமக்கும், அவனோட பத்து, பதினெஞ்சு வருஷமா தொடர்பே இல்லாமப் போச்சு. என்ன பண்றது? கூடப் பொறந்துத் தொலைச்சுட்டானே" என்றார்.

                     கணவர், "இப்ப என்ன பண்ணலாம்? சாவுக்குப் போகலாமா, வேண்டாமா?".

                    "என்ன இப்படி கேட்டுட்டீங்க? என் கூடப் பொறந்தப் பொறப்பாச்சே. என்னால எப்படி அவன மறக்க முடியும்? இவ்வளவு சீக்கிரம் அவன் இறந்து போவான்னு நினைக்கவே இல்லை. அவசரப்பட்டு என்னவெல்லாம் சொல்லி திட்டியிருப்பேன். என்ன இருந்தாலும் என் அண்ணன் தானே. அவன் மேல் தப்பே இருந்தாலும் நானாவது பொருத்துப் போயிருக்கலாம். பாவம்! இப்பப் போய்ச் சேர்ந்துட்டானே. எல்லாமே உங்களால தான் போங்க." என்று இறந்த தன் அண்ணனுக்காகக் கண்ணீர் விட்டார் அந்தம்மா.

                    "சரி சரி. சீக்கிரம் கிளம்பு, போயிட்டு வந்திரலாம்.", கணவர் மனைவிக்கு ஆறுதல் கூறினார்.

                   வெளியூரில் இருக்கும் தன் பிள்ளைகளுக்கு அந்தம்மா தொலைபேசியில் விஷயத்தைச் சொன்னார். "என் அண்ணன் போய்ச் சேர்ந்துட்டானேப்பா." என்று அழுதார். பிள்ளைகள் அம்மாவுக்கு ஆறுதல் கூறினார்கள்.

                  இருவரும் கிராமத்திற்குச் சென்றார்கள். கிராமத்தில் நுழைந்தவுடன், தன் அண்ணனை நினைத்து அழுதுகொண்டே சென்றார். எதிரில் தென்பட்ட உறவினர் மகனுடன் இருவரும் துக்கம் நடந்த வீட்டுக்குச் சென்றனர். அங்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் கண்ணில் தென்படவில்லை. இறந்த அண்ணனின் முகம் நன்றாகக் கருத்துப் போயிருந்தது. சிறிது நேரம் ஒருவிதக் குழப்பத்துடன் தன் அண்ணனைப் பார்த்து புலம்பியவர், "என்னப்பா, அண்ணனோட மகன்கள் யாரையுமேக் காணோம்?" என்று அருகில் இருந்தவரிடம் விசாரித்தார். அப்போதுதான் புரிந்தது, தான் வந்தது 'சீனிச்சாமி' என்ற பெயரில் உள்ள வேறு ஒரு உறவினரின் துக்க நிகழ்வுக்கு என்று.

                  தன் அண்ணனைப் பார்த்து பத்து வருடங்களுக்கும் மேலாகி விட்டது. இறந்த அந்த உறவினரும் தன் அண்ணனைப் போலவே இருந்ததால் கொஞ்சமல்ல, நிறையவே குழப்பமாகி விட்டது. ஏதோ வந்தது வந்துவிட்டோம், துக்க நிகழ்ச்சியில் கொஞ்ச நேரம் கலந்து விட்டுப் போய் விடலாம் என்று அமைதியாக இருந்தனர் கணவனும், மனைவியும்.

                  அப்போது அதே கிராமத்தில் குடியிருந்த, இறந்ததாக நினைத்த அதே அண்ணன் எதிரே வந்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த அந்தப் பெண்மணியின் கணவர், " வரும் போது உன் அண்ணனை நினைத்து அழுது கொண்டே வந்தாயே, போய்ப் பேசுகிறாயா? " என்றுக் கேட்டார்.

                 அவ்வளவுதான்! உடனே அந்தம்மா, " அவன் கிட்ட என்னப் பேச்சு வேண்டிக்கிடக்கு? அவன் பண்ணினக் கூத்துக்கு இங்க வந்ததேப் பெரிய விஷயம். அவனாச் சாவான்? இருக்கிறவங்களை எல்லாம் சாகடிப்பான். " என்றாரே பார்க்கலாம். கணவர் வாயடைத்து நின்றார்.

இல்லாத போது ஏங்கும் மனது, இருக்கும் போது தூற்றுவது ஏனோ?! கலிகாலம்டா சாமி!

Monday, 9 August 2010

கனவு கண்டேன்!

சிறு பிள்ளைப் போல் துள்ளித் திரியக் கனவு கண்டேன்!
பெண் பிள்ளைப் போல் அடக்க, ஒடுக்கமாய் இரு.
ஆசைப்பட்டான் அண்ணன்.


மேலே படிக்க கனவு கண்டேன்!
படிப்பெதற்கு, சமையல் பழகு.
ஆசைப்பட்டார் அம்மா.


சாதனை செய்யக் கனவு கண்டேன்!
இந்த மாப்பிள்ளை உனக்கு ரொம்பப் பொருத்தம்.
ஆசைப்பட்டார் அப்பா.


அனைவரது ஆசைகளும் நிறைவேறியது.
தேங்கிப்போனது என் கனவுகள் மட்டுமே!

Saturday, 7 August 2010

பயணத்தில்......

சில வருடங்களுக்கு முன்பு பஸ்ஸில் பயணம் செய்ய நேர்ந்தது. பஸ்ஸில் மூதாட்டி ஒருவரின் இருக்கைக்கு அருகில் இடம் இருந்தது. அவருக்குத் தலை நன்றாக நரைத்திருந்தது. கண்கள் சோர்வாக, வாயில் வெத்தலை மென்று கொண்டிருந்தார். நான் அவ்ர் அருகில் சென்று, "கொஞ்சம் தள்ளி உட்காருங்க பாட்டி" என்று சொன்னேன். அவர் என்னை ஒருமாதிரியாக முறைத்துப் பார்த்துவிட்டு தள்ளி உட்கார்ந்தார். தள்ளித் தானே உட்காரச் சொன்னோம் ஏன் இப்படி முறைக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. சிறிது நேரம் மௌனமாக இருந்த அவர், "உன் வயதில் எனக்கொரு மகள் இருக்கிறாள். ஆனால் நீ என்னைப் பாட்டி என்று சொல்கிறாயே?" என்றார். ஓ... அவர் முறைப்பின் காரணம் நன்றாகப் புரிந்தது.



அது சின்ன விஷயம் தான். ஆனாலும் ஏனோ என் மனம் அவர் வயதில் உள்ளவர்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது. தனக்கு வயதாகி விட்டதே என்றக் கோபத்தில் அவர் அப்படிச் சொன்னாரா? அல்லது இளமைப் போய் விட்டதே என்ற வருத்தத்தில் சொன்னாரா எனக்குத் தெரியவில்லை. உண்மையிலேயே அவர் தன் தோற்றத்தில் மட்டுமே அப்படி இருந்திருக்கலாம். அது தெரியாமல் அப்படிச் சொன்னது என் தவறுதான்.


நம் அனைவருக்குமே சிறு வயதில் செய்த குறும்புகளும், நினைவுகளும், அந்த நாட்கள் திரும்பக் கிடைக்காதா என்ற ஏக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன. சிறு வயதில் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் மகிழ்ந்த நமக்கு வயது ஏற, ஏற அதன் மேல் உள்ள ஆர்வம் குறைந்து விடுகிறதே. ஏன்? ஒருவேளை வயதாகி விட்டதே என்ற சலிப்புதான் காரணமோ? இன்றைய உலகில் நாம் அனைவருமே தோற்றத்தாலும், மனதாலும் இளமையாக இருப்பதைத்தான் விரும்புகிறோம். ஆனாலும் யாராவது நமக்கு வயதாவதை சுட்டிக் காட்டும்போது கொஞ்சம் கோபம் வரத்தான் செய்கிறது.


நம் குழந்தை வயதை ஒத்த குழந்தைகள் நம்மை ஆன்ட்டி, அங்கிள் என்று கூப்பிடும்போது பெரிதாக ஒன்றும் தோன்றுவதில்லை. ஆனால் அதையே வளர்ந்த டீன்-ஏஜ் பெண் சொன்னால்?.. அதற்காக பெரிதாக வருத்தப்படவில்லை என்றாலும், இவ்வளவு பெரிய பெண்ணாக இருந்து கொண்டு ஒரு குழந்தைக்குத் தாயானக் காரணத்தினாலேயே நம்மை ஆன்ட்டி என்கிறாளே என்ற ஒரு சின்ன முணுமுணுப்பாவது இருக்கத்தான் செய்கிறது. அப்போது இளமைக் கால நினைவுகள் நம்மை ஏங்க வைக்கின்றன.


நமக்கு இருக்கும் இதே ஏக்கங்கள் தானே நம்மை விடப் பெரியவர்களுக்கும் இருக்கும். அவர்களை விட சிறு வயதில் உள்ளவர்கள் பெரிசு, கிழவி, கிழம் என்றெல்லாம் அழைக்கும் போது அவர்களுக்கும் அந்த வருத்தம் இருக்கத்தானே செய்யும். காலம் வேகமாக் ஓடுவதில் அந்த வருத்தத்தை மறைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வயதாகி விட்டதன் சலிப்பு ஒவ்வொரு முதியவருக்கும் இருக்கத்தான் செய்கிறது.


இப்போதெல்லாம் என்னை விடப் பெரியவர்களை வாங்க, போங்க என்று பொதுவாகத்தான் அழைக்கிறேன். இல்லையென்றால் உங்களை நான் எப்படிக் கூப்பிட வேண்டும்? என்று அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டுதான் கூப்பிடுகிறேன். அதில் அவர்களுக்கும் மகிழ்ச்சி, அவர்கள் விருப்பப்படியே அழைப்பதில் எனக்கும் மகிழ்ச்சி!

Friday, 6 August 2010

மல்லிகை: சில எச்சரிக்கைகள் உங்களின் கவனத்திற்கு!

மல்லிகை: சில எச்சரிக்கைகள் உங்களின் கவனத்திற்கு!

சில எச்சரிக்கைகள் உங்களின் கவனத்திற்கு!

இந்த எச்சரிக்கைகள் சிலருக்கு தெரிந்திருக்கலாம், பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிந்த சிலர் தெரியாதவர்களுக்குச் சொல்லுங்கள், தெரியாத பலர் இங்கே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

1.  நாம் வாங்கும் அனைத்துப் பொருள்களுக்கும் Expiry date உள்ளது   நமக்குத்தெரியும். அதுபோல் கேஸ் சிலிண்டருக்கும் உள்ளது. அது நம் பலருக்குத் தெரிவதில்லை. சிலிண்டரின் கைப்பிடிக்கு அருகில் குனிந்துப் பார்த்தால் C-08 என்று எழுதியிருக்கும். C - என்பது 3rd Quarter-ஐக் குறிக்கும். 08 என்பது வருடத்தைக் குறிக்கும்.
அதில்
A என்று இருந்தால் 1st Quarter (ஜனவரி - மார்ச் வரை), 
B எனில் 2nd Quarter (ஏப்ரல் - ஜூன் வரை),
C எனில் 3rd Quarter (ஜூலை - செப்டம்பர் வரை),
D எனில் 4th Quarter அதாவது (அக்டோபர் - டிசம்பர்) ஐக் குறிக்கும்.

இப்போது நம்முடைய சிலிண்டரில் B-09 என்று பெயிண்ட் பண்ணப்பட்டிருந்தால் அதை ஏப்ரலிலிருந்து ஜூன் 2009 வரைதான் உபயோகிக்க வேண்டும். அதில் expiry date முடிந்து விட்டால் கண்டிப்பாக dealer-ரிடம் கொடுத்து விட வேண்டும்.

2. நாம் வாங்கும் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், குழந்தைகளுக்குக் கொடுக்கும் லஞ்ச் பாக்ஸ் அனைத்தையும் கவனமுடன் வாங்குவது மிக முக்கியம். அதன் உபயோகத்தன்மையைக் கண்டுபிடிப்பது எப்படி?


பாட்டில்களின் அடியில் முக்கோணக் குறியீட்டுடன் நம்பர் இருக்கும். அந்த முக்கோணக் குறியீட்டில்

1 என்று இருந்தால், அது  PET பாட்டில்கள், மினரல் வாட்டர் பாட்டில்கள், ஃப்ரிட்ஜூக்குள் வைக்கும் பாட்டில்கள் வகையைச் சேர்ந்தது. சூடு இல்லாத இடங்களில் வைத்து உபயோகித்தால் 2 மாதங்கள் வரை உபயோகிக்கலாம்.


2 - ஸ்வீட் பாக்ஸ், ஹோட்டல்களில் உணவுக் கட்டித்தரும் டப்பாக்கள்.


3 - இதில் டயாக்ஸின் என்ற நச்சு வாயு உள்ளது. சூடான பொருளை இதில் வைக்கவே கூடாது.


4 - இது தண்ணீர் ஊற்றி ஃப்ரிட்ஜூக்குள் வைத்துப் பயன்படுத்த மட்டுமே ஏற்றது. இதை வாங்காமல் இருப்பது நல்லது.


5 - இந்த வகைப் பிளாஸ்டிக்குகள் ஜூஸ் உறிஞ்சும் ஸ்ட்ராக்கள், பேரீட்சை வைக்கும் டப்பாக்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. எல்லா வகைப் பொருள்களும் வைக்க ஏற்றது. இந்த நம்பரில் உள்ள பாட்டில்கள், டப்பாக்கள் தரமானது.


6 - யூஸ் அண்ட் த்ரோ பாட்டில்கள்.


நம்பர் எதுவுமின்றி வருவதை வாங்காமல் இருப்பது நல்லது.


குழந்தைகளுக்கான பால் பாட்டில் வாங்கும் போது 'BPA FREE' என்று குறிப்பிட்ட பாட்டிலையே வாங்கணுமாம்.
3. வீட்டிற்கு வெளியே ஒவ்வொருப் பொருளை வாங்கும் போதும் Expiry date பார்த்தே வாங்குவோம். ஆனால் புதிதாக வாங்கி வரும் மளிகைப் பொருள்களைப் பிரித்து அப்படியே மிச்சம் இருக்கும் டப்பாக்களில் கொட்டி விடுவதுண்டு. இது மிகவும் தவறு. Expiry date  முடிந்த அந்தப் பொருட்கள் அப்படியே அதில் கலந்து விடும். இதில் மிகவும் கவனம் தேவை.


4. நாம் வாங்கும் பால் பாக்கெட்டுகளிலும் expiry date உள்ளது. ஆனால் பால் வாங்கும் போது அதை நாம் கவனிப்பதேயில்லை. பால் பாக்கெட்டுக்களில் அன்றையத் தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தத் தேதியிலிருந்து ஒருநாள்தான் வைத்திருக்க வேண்டும். இதைக் கவனிக்காமல் வாங்கிய அனுபவம் எனக்கு உண்டு. அதைப் பார்க்காமல் பாலைக் காய்ச்சியதில் பால் திரிந்து விட்டது. வாங்கும் போதே தேதியைப் பார்த்து வாங்குவது நல்லது. இல்லாவிட்டால் கடையிலேயே ஓரிருநாள் வைத்திருந்தப் பாக்கெட்டுகளை நம்மிடம் தள்ளிவிடுவார்கள்.

5. வீட்டில் உள்ள குப்பைகளை மூடிய dustbin -ல் கவர் போட்டுத்தான் உபயோகிக்க வேண்டும். சிலர் வீட்டில் குப்பைத் தொட்டியைத் திறந்தேதான் வைத்திருப்பார்கள், என் அம்மா உள்பட. இது மிகவும் தவறு. அதிலிருந்துதான் கொசுக்கள் நிறைய வரும். dustbin -ல் கவர் போட்டு உபயோகிப்பதால் அதைக் கழுவுவதும் எளிது. எத்தனையோ தேவையில்லாத செலவுகளுக்கிடையில் இதற்காகவும் கொஞ்சம் செலவிடுவதில் தவறில்லை.

6. வெளியிடங்களில் கடைகளுக்கு செல்லும் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை! 

Trial Room  இல்லாதக் கடைகள் இப்போது இல்லை. இதில் ஆளுயரக் கண்ணாடிகள் இருக்கும். சில இடங்களில் அதைத் தவறாக உபயோகிப்பவர்கள் இருக்கிறார்கள். அது டபுள் மிரராக இருக்கும். அதாவது, நம் உருவம் கண்ணாடியின் மறுபக்கத்திலும் தெரியக்கூடிய வகையில் இருக்கும்.

இதை எப்படிக் கண்டுபிடிப்பது?
கண்ணாடியில் நம் விரலைத் திருப்பி ஒட்டி வைத்துப் பார்த்தால் சாதாரணக் கண்ணாடியில் நம்முடைய நகம் தெளிவாகத் தெரியும். ஆனால் டபுள் மிரரில் நம் நகம் தெளிவாகத் தெரியாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தக் கண்ணாடியில் பெண்கள் உடை மாற்றும் போது கவனமாக இருக்க வேண்டும். முடிந்த அளவு லைட்டை ஆஃப் செய்துவிட்டு மாற்றுவது நல்லது. இல்லையென்றால் நம் உருவம் மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்புண்டு.   கடையில் மட்டுமல்ல, வீட்டிலும் கண்ணாடி ஜன்னல்கள் இருப்பதால் இரவில் உடை மாற்றும் போது லைட்டை ஆஃப் செய்து விட்டு மாற்றுவது நல்லது.

ஆபத்துக்கள் நிறைந்த உலகில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்!

Tuesday, 3 August 2010

குட்டி தேவதைகள்

என் வாழ்க்கையில் எத்தனையோ குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் பல குழந்தைகள் ஒரு நிமிடப் பார்வையில் கடந்து சென்றவர்கள். சிலர் மனதில் அப்படியே தங்கி விட்டார்கள். ஆம்! அவர்கள் எல்லாம் எனக்கு குட்டி தேவதைகள்தான்! என்னால் மறக்கவே முடியாத முகங்கள் இவர்கள். இதோ இந்தக் குட்டித் தேவதைகளைப் பற்றி.........




ஸ்டெல்லா மேரி

இவள் என் சம வயதுக் குழந்தை. நான் 3வது அல்லது 4வது படிக்கும் போது என்னுடையத் தோழியாக இருந்தவள். அவளின் அந்தக் குழந்தை முகம் இன்றும் என் நினைவில் இருக்கிறது. இரட்டைப் பின்னலில் மிக அழகாக இருப்பாள். அவளுக்கு நான் யாருடன் பேசினாலும் பிடிக்காது. அவளிடமே பேச வேண்டும். அவளிடம் மட்டும்தான் விளையாட வேண்டும். எப்போதும் என் கூடவே ஒட்டிக் கொண்டிருப்பாள். அப்பாவுக்கு அரசு உத்யோகம் என்பதால் வேறு ஊருக்கு மாற்றாலாகிப் போய் விட்டோம். ஆறேழு வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் அதே ஊரில், நான் படித்த அதே ஸ்கூலில் அவளைப் பார்த்தேன். நன்றாக வளர்ந்திருந்தாள். அந்த சிறு வயது முகம் கொஞ்சம் கூட அவள் முகத்தில் இல்லை. "என்னை ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டேன். "ம்... இருக்கிறது" என்ற ஒற்றை வரியுடன் முடித்துக் கொண்டாள். அவள் நன்றாக மாறி விட்டாள். இந்த இடைவெளியில் அவளுக்கும், எனக்கும் வேறு வேறு நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். ஆனாலும் ஏனோ எனக்கு அவளின் குழந்தை முகம் மறக்கவே இல்லை.

மீரா

என் மனதை மிகவும் கவர்ந்தவள். நான் 8வது படிக்கும் போது 4 வயது குழந்தையாக அறிமுகமானாள். நான் ஸ்கூல் விட்டு வந்ததும் என்னைத் தேடி ஓடி வந்து விடுவாள். என் கூடவே சாப்பிடுவாள், என்னுடனேயே தூங்குவாள். நானும் அந்தச் சின்ன வயதிலேயே எல்லாத் தேவைகளையும் செய்வேன். "அக்கா, அந்தக் கதை சொல்லட்டுமா?", "இப்படிச் செய்யட்டுமா?" என்று அந்த வயதிற்கே உரிய மழலை மொழியில் பேசிக் கொண்டே இருப்பாள். அவளை என் கூடவே வைத்திருப்பதில் என் வீட்டில் உள்ளவர்களுக்கு அசவுகரியங்கள் இருந்ததால் என்னைத் திட்டுவார்கள். எங்கே அவளையும் திட்டி விடுவார்களோ என்று என் பக்கத்திலேயே வைத்துக் கொள்வேன். அவளுடைய அம்மாவுக்கு நான் என்றால் கொள்ளைப் பிரியம். "நீயே ஒரு குழந்தை. ஆனாலும் நீதான் என் குழந்தைக்கு முதல் அம்மா" என்று பெருமையுடன் சொல்வார். இப்போது அவள் நன்றாக வளர்ந்து விட்டாள். திருமணம் கூட முடிந்து விட்டது என்று கேள்விப்பட்டேன். வளர்ந்த பிறகு அவளைப் பார்க்கும் சந்தர்ப்ப்ங்கள் அமையவே இல்லை. ஆனாலும் ஏனோ குழந்தையாக மனதில் அப்படியே தங்கி விட்டாள்.


ஏஞ்சலின்

அப்பாவுக்காக கொடுக்கப்பட்ட குவார்ட்டஸில்தான் குடியிருந்தோம். அப்போது நாங்கள் இருந்த முதல் மாடியின் நேரெதிரே உள்ள வீட்டின் பால்கனியில் எட்டிப் பார்ப்பாள் ஏஞ்சலின். நான் பால்கனியில் உட்கார்ந்திருக்கும் பொழுது அவள் என்னைப் பார்த்து வெட்கப்பட்டு ஓடிவிடுவாள். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த பெற்றோரின் கலவை அவள். உண்மையிலேயே அவள் குட்டி ஏஞ்சல்தான். அவள் அம்மா, "அவள் யாரிடமும் பழகமாட்டாள், பேச மாட்டாள்" என்று என் அம்மாவிடம் சொல்லி வருத்தப்படுவார். அதனால் அவளை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். அவள் பால்கனியில் எட்டி, எட்டிப் பார்த்துவிட்டு ஓடிவிடுவாள். ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த என் அண்ணன் லீவில் வருவான். அவனும், நானும் பால்கனியில் பேசிக்கொண்டிருந்த போது ஏஞ்சலின் எட்டிப் பார்த்தாள். என் அண்ணன் "யார் இந்தக் குட்டிப் பொண்ணு?" என்று அவளுக்கு நிறைய சேட்டைகளைச் செய்துக் காண்பித்தான்.அவளுக்கு அண்ணனுடைய சேட்டைகள் மிகவும் பிடித்தது. ஏனோ அவனிடம் மட்டும் பேச ஆரம்பித்தாள். அவளுக்கு 31/2 வயதுதான். அண்ணா இல்லாத நேரத்தில் "பெகாஷ் அண்ணா (என் அண்ணன் பிரகாஷைத் தான் அப்படி சொல்வாள்) எங்க?, "பெகாஷ் அண்ணா எப்ப வருவாங்க? என்று என் அண்ணனைப் பற்றிக் கேட்பதற்காகவே என்னுடன் பேச ஆரம்பித்தாள். கொஞ்ச நாள்தான் பழகி இருப்பாள். அதற்குள் அப்பாவுக்கு டிரான்ஸ்பர் கிடைத்துவிட்டது. ஆனாலும் அந்தப் பால்கனியில் எட்டிப் பார்க்கும் அந்தக் குட்டி ஏஞ்சல் முகம் மனதில் இருந்து நீங்கவே இல்லை.



ரிஜுதா

என் உயிரில் கலந்து விட்ட என் குழந்தை.  நான் வாழ்வதற்கான அர்த்தத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பவள். ஒரு சிநேகிதியைப் போல் என்னைத் திட்டுகிறாள், சண்டை போடுகிறாள். தாயைப் போல் என்னைத் தேற்றுகிறாள். எந்த ஒரு கஷ்டமும் அவளைப் பார்க்கும் பொழுது தவிடு பொடியாகிறது. அவளுக்காகவே இன்னும் கஷ்டங்களைத் தாங்குவேன், என்றும் அவளுக்காகவே நிறைய ஆண்டுகள் வாழ்வேன். Riju " I love you ..da"



ஸ்ரீநிகிதா

என் அண்ணனின் மகள். இவளைப் பார்ப்பவர்கள் எல்லோரும் "இவள் ஏன் இப்படித் தேறாமல் இருக்கிறாள்?" என்றுதான் கேட்பார்கள். ஆனால் அந்த ஒல்லியான உடம்பில் செய்யும் சேட்டைகளில் தான் என்னை ரசிக்க வைக்கிறாள். மிகவும் பாசமானவள். இவள் என் மனதில் மருமகளாக இல்லை, மகளாகத்தான் நிறைந்திருக்கிறாள்.



நேஹா

பெயரிலேயே கவர்ந்து விடுகிறாள். அவள் பிறந்த மாதத்திலும் என்னைக் கவர்ந்து விட்டாள். கண்கள் மலரச் சிரிக்கிறாள், அழும்போதும் ரசிக்க வைக்கிறாள். அவளைப் பார்க்கும்போது சிரிக்க வைக்கவும் தோன்றுகிறது, அழுவதை ரசிப்பதற்காகவே சீண்டிப் பார்க்கவும் தோன்றுகிறது. Neha kutti,  u r so cute!



சிந்து (Riju's Friend)

சிரித்த முகத்துடன், ரிஜுவுக்கு மட்டுல்ல என்னையும் கூப்பிட்டு டாட்டா காட்டுவாள். ஸ்கூலுக்குப் போனால் எங்கிருந்தாலும் என்னைப் பார்த்து ஓடி வந்துவிடுவாள். நாலு வார்த்தையாவது பேசாமல் நகர மாட்டாள். வேனில் செல்லும்போது டாட்டா காட்டிக் கொண்டே செல்வது அழகு.



ப்ரார்த்தனா (Riju's Friend)

மறக்க நினைத்தாலும் முடியாத முகம். பேசவே மாட்டாள். சிரித்தே கவிழ்த்து விடுவாள்.


இவர்கள் எனக்குக் கிடைத்தக் குட்டி தேவதைகள் மட்டுமல்ல, என் குட்டிக் காதலிகளும் கூட!

Thursday, 29 July 2010

அன்றும், இன்றும் (ஆண்மனம்)

அன்று
"நீ பேசறத கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு"
இன்று
"நீ வாயைத் தொறந்தாலே எரிச்சலா இருக்கு"


அன்று
"உன் கூட இருந்தா நேரம் போறதே தெரியல"
இன்று
"உன் கூட இருக்கிற ஒவ்வொரு நேரமும் நரகமா இருக்கு"

அன்று
"உன் கையால சமைச்சத சாப்பிட கொடுத்து வச்சிருக்கணும்"
இன்று
"இத மனுஷன் சாப்பிடுவானா?"

அன்று
"வாழ்நாள் பூரா உன் கூடவே இருக்கணும் போல இருக்கு"
இன்று
"சீக்கிரம் உன் அம்மா வீட்டுக்குப் போ!"

முரண்பட்டது ஆண்மனம்!
புண்பட்டதென்னவோ பெண்மனம்தான்!

Tuesday, 27 July 2010

குழந்தை கற்றுத் தந்த பாடம்

கோபம்! சில மாதங்களுக்கு முன்பு வரை, நன்கு பழகியவர்களுடன் உரிமையுடன் கத்தியும், அதிகம் பழகாதவர்களுடன் மிக அமைதியாகவும் கோபத்தை வெளிப்படுத்தும் இயல்புடன் இருந்தவள் நான். ஆனால் அந்தக் கோபம் கூட சிறுபிள்ளைத்தனமானது என்று உணர வைத்தவள் என் குழந்தை.

ஏதாவது ஒரு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு அதில் இருக்கும் கதையை சொல்லித் தா என்று நச்செரித்துக்கொண்டே இருப்பாள். ஒருநாள் உடல் வலியும், தீராத தலைவலியும் சேர்ந்து என்னை பாடாய்படுத்த, அவள் செய்யும் சேட்டைகளை தாங்க முடியாமல் நன்றாக திட்டி முதுகில் ரெண்டு போடு போட்டேன். கொஞ்ச நேரம் அழுது கொண்டே இருந்தவள், சிறிது நேரம் கழித்து கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு என்னிடம் வந்தாள். "அம்மா, இந்த கதையை சொல்லித் தாம்மா" என்று கேட்டாள்.

தலைவலி மண்டையைப் பிளக்க, "எப்ப பாத்தாலும் கதை, கதைன்னு பாடாய்ப்படுத்துவ. பேசாம போ" என்றேன் கோபமாக. "அம்மா, ப்ளீஸ்மா... சொல்லித் தாம்மா" என்று கெஞ்சினாள். எரிச்சலுடன் "சரி வா" என்று அவள் கொடுத்த கதையை படிக்க ஆரம்பித்தேன்.

அந்தக் குழந்தையின் பெயர் வர்ஷா. அவளுக்கு தாய் இல்லை. அப்பாவிடம் வளர்ந்தாள். தாயில்லாததால் வர்ஷாவை மிகவும் கண்டிப்புடன் வளர்த்தார் அப்பா. ஒருநாள் வர்ஷா தனது பாடப்புத்தகத்தில் இருந்து ஒரு பேப்பரைக் கிழித்து, பென்சில் பாக்ஸில் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தவர், "பேப்பரைக் கிழிப்பியா...?" என்று கோபத்துடன் திட்டி புத்தகத்தை பிடுங்கி வைத்தார். சிறிது நேரத்தில் அப்பாவிடம் வந்த வர்ஷா, கண்களில் பயத்தோடு கலர் பேப்பர் ஒட்டப்பட்ட ஒரு பரிசுப் பொருளை தன் அப்பாவிடம் கொடுத்து, " ஹாப்பி ப்ர்த் டே டாடி" என்றாள். "தாங்க்யூ" என்று சொல்லியபடியே பரிசைப் பிரிக்க, அதற்குள் ஒரு காலியான பென்சில் பாக்ஸ்!

அவருக்கு வர்ஷாவின் இந்த ஏமாற்றும் விளையாட்டு பிடிக்கவில்லை. "யாரையும் ஏமாற்றி இப்படி விளையாடக்கூடாதுன்னு உனக்குத் தெரியாதா? வீட்ல இருக்கிற பழக்கம்தான் வெளியிலேயும் வரும்" என்று அவர் மீண்டும் கோபத்தில் வெடிக்க, அப்பாவின் இந்த ரியாக்க்ஷனை எதிர்பாராத வர்ஷாவின் கண்களில் மளமளவென நீர் வழிய... "அது காலி பாக்ஸ் இல்லை டாடி. அதுல உங்களுக்கு நான் 100 கிஸ்ஸஸ் வச்சிருக்கேன்! நல்லாப் பாருங்க!" என்று வர்ஷா அழுது கொண்டே சொன்ன போது, அவள் அப்பாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. தன் தவறை உணர்ந்தவர் தரையில் மண்டியிட்டு, "ஸாரிடா" என்றார்.


கதையைப் படித்து விட்டு நிமிர்ந்து பார்த்தேன் என் குழந்தையை. "என்னம்மா, எவ்வளவு நேரமா கதையைப் படிச்சிக்கிட்டே இருப்ப... சீக்கிரம் சொல்லித் தாம்மா.. சொல்லித் தர்ரியா?" என்று கேட்டாள் வெகுளித்தனமாக. என் குழந்தையின் பிஞ்சுக் கால்களில் முத்தமிட்டேன்.
"என்னம்மா... என் கால் உனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கா... முத்தம் கொடுக்கிற!" புரியாமல் கேட்டாள் குழந்தை.
"ஸாரிம்மா... செல்லம்.."
"சே....ரி....ம்மா.... அம்மா எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.." என்று என்னைக் கட்டிக் கொண்டு கொஞ்சினாள்.

இப்போது யார் மீது கோபம் வந்தாலும் இந்தக் கதையைப் படிக்கக் கொடுத்த என் குழந்தை முகம்தான் நினைவுக்கு வரும். அப்போது அந்தக் கோபத்தையும் எதிர்கொள்ள பழகிக்கொண்டேன் ஒரு சின்ன புன்னகையுடன்.