Tuesday, 7 September 2010

ஆண், பெண் சுதந்திரம்

சமீபத்தில் 'நான் மகான் அல்ல' படம் பார்த்தேன். அதில் நிறையக் காட்சிகள் பார்ப்பதற்கு கொடூரமாகத் தெரிந்தாலும் அவை அனைத்தும் இன்று நாட்டில் நடக்கக்கூடியதாகத்தான் இருக்கின்றன. படத்தில் வில்லன்களாக வரும் கல்லூரி மாணவர்கள் இதுபோன்ற தவறுகள் செய்யும் ஆண் பிள்ளைகளை அப்படியே தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். நான் அந்தப் படத்தின் விமர்சனங்களுக்குள் செல்லாமல் விஷயத்துக்கு வருகிறேன்.


போதைக்கு அடிமையாகி, பெண்களைக் கற்பழித்து, கொலை செய்யும் அளவிற்கு மாணவர்கள் செல்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு முழுமையானக் காரணம் பெற்றோர்கள் ஆண்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் அளவுக்கு மீறிய சுதந்திரம்தான்.

ஒரு வீட்டில் பெண்பிள்ளையை "இருட்டிய பிறகு ஏன் வெளியே செல்கிறாய்?" என்றுக் கட்டுப்படுத்தும் அதே அம்மாதான் ஆண்பிள்ளையை இரவு முழுவதும் வெளியே நண்பர்களுடன் தங்கிக் கொள்வதற்கும் அனுமதி கொடுக்கிறாள். ஏன் இந்த முரண்பாடு? அதனால் யாருக்கு என்ன பயன்?

ஆண்களைப் போல் பெண்கள் வெளியே சுதந்திரமாகத் திரிய வேண்டும் என்றில்லை. ஆனால் பெண்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகளை ஆண்பிள்ளைகளுக்கும் கொடுத்தால் இந்த சமூகத்திற்கு நல்லது.

நட்பு வட்டம் பெற்றோர்களின் கண்காணிப்பில் இருக்கும் வரைப் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் நண்பர்களுடன் வெளியே தங்குகிறேன் என்று ஒரு ஆண் சொன்னால் அது குடித்து கும்மாளம் போடுவதற்காகத்தானே தவிர வேறு எதற்காகவுமில்லை.

என் கணவர், அண்ணா, மாமா, சித்தப்பா, அப்பா என்று உறவினர்கள் அனைவரிடமும் இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்றுக் கேட்டால் அனைவரும் ஒன்றாக சொன்னது "நண்பர்கள் பழக்கிவிட்டார்கள்" என்பதுதான்.

குடி, போதை என்று அடிமையாகி கிடப்பவர்கள் ஒன்றாகச் சேரும்போது குடிக்காத இன்னும் இரண்டு பேரைக் குடிக்க வைத்துக் கெடுக்கிறார்கள். போதைத் தலைக்கேறினால் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது நினைவிலே இருப்பதுமில்லை. அதிலும் அந்தப் போதையில் ஊறிப்போன அனைவரும் சொல்லும் ஒரு மட்டமான டயலாக் "என்னோட லிமிட் எனக்குத் தெரியும்" என்பது.

இதற்கெல்லாம் காரணம் ஆண்களுக்கு பெற்றோர்கள் கொடுக்கும் அளவுக்கு மீறிய சுதந்திரம். அந்த அளவுக்கு மீறிய சுதந்திரத்தால், தவறான நட்புகளுடன் சேர்ந்து தானும் கெட்டு, இன்னும் நாலு பேரை சேர்த்துக் கெடுக்கிறார்கள், பெண்கள் வாழ்க்கையையும் சீரழிக்கிறார்கள். இதற்கு காரணமாக அம்மா என்னும் இன்னொரு பெண்ணேக் காரணமாக இருப்பது அதைவிட வேதனையிலும் வேதனை.

பெண்கள் தங்கள் நட்பு வட்டத்தில் ஒரு சின்னத் தவறு நடந்தால் கூட பயத்தில் உளறி விடுவார்கள். ஆனால் ஆண்கள் பெரிய தவறே என்றாலும் தன் நண்பனுக்காக என்று அனைத்தையும் மூடி மறைத்து விடுவார்கள். இது ஆரோக்கியமான விஷயமா?

ஆண்பிள்ளைகள் வைத்திருக்கும் இன்றையத் தலைமுறைப் பெற்றோரே! பெண்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் கட்டுப்பாடுகளில் சிலவற்றை ஆண்பிள்ளைகளுக்கும் கொடுத்து அடுத்த தலைமுறையைக் காப்பாற்றுங்கள்!

26 comments:

எல் கே said...

akilaa, inniku ethani ponnunga ippadi irukkanganu sollatuma... ethanai ponnunga bothaiku adimayagi irukkanga theriyuma... neenga solrathu palaya generation .. intha generation girls illa

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆண்கள் கேட்டு போவதற்கு அளவுக்கு மீறிய சுதந்திரமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது... அதே சமயம் மிகவும் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தாலும் ஆண்களும் சரி பெண்களும் சரி கேட்டுப் போக வாய்ப்புகள் அதிகம்... நம்மை எதனால் பெற்றோர்கள் இங்கு போக வேண்டாம் என்கிறார்கள்..? எதற்கு இதை பார்க்க வண்டாம் என்கிறார்கள்..? எதற்கு இவர்களுடன் சேர வேண்டாம் என்கிறார்கள்..? என்ற ஒரு எண்ணம் அவர்களை அத்தனையும் செய்து பார்க்க தூண்டுகிறது... இது போன்ற அடக்கு முறைகளால் தவறான பழக்க வழக்கங்களுக்கு சென்றவர்களில் ஆண்களும் இருக்கிறார்கள்.. பெண்களும் இருக்கிறார்கள்..

ஆனால் நண்பர்களுடன் வெளியில் சென்று தங்குவது குடித்து கும்மாளம் போடுவதற்கு தான் என்பதும், அதானல் கேட்டு போகிறார்கள் என்பதும் முற்றிலும் தவறான ஒரு கருத்து... கல்லூரியில் படிக்கும் காலங்களில் நண்பர்களுடன் தங்குவதுண்டு... அந்த சமயங்களில் படிப்பு.. ஆட்டம் பாட்டம்.. சில சமயங்களில் குடி என பொழுதுகள் புலரும்... இந்த கூட்டத்தில் குடிப்பழக்கம் இல்லாத நண்பர்களும் உண்டு..(நானும் ஒருவன்) அவர்களை யாரும் வற்ப்புருத்துவதில்லை... அவர்கள் யாரும் இன்று சீரழிந்து போனதாக தெரியவில்லை...

இன்றைய கால கட்டத்தில் இது போன்ற அடக்கு முறைகளாலோ.. இல்லை அளவுக்கு மீறிய சுதந்திரத்தாலோ தான் ஆண்களும் பெண்களும் கேட்டு போக வேண்டுமென்றில்லை.. அதற்கு தான் ஊடகங்கள் இருக்கின்றனவே... கட்டுப்பாடோடு கண்ணியமாக வந்து கொண்டிருந்த சின்னத்திரை சீரியல்களில் கூட இன்று கற்பழிப்பு காட்சிகள் சாதாரணமாகி விட்டன...

Sriakila said...

நன்றி LK!

உண்மைதான்! பெற்றோர்கள் கண்காணிப்பின்றித திரியும் மேல்தட்டுப் பெண்கள் வீட்டிற்குத் தெரியாமல் வெளியில் பார்ட்டிகளில் கலந்து கொண்டு தாங்கள் மட்டுமே கெட்டுப்போகிறார்கள். அவர்களை நல்ல பெண்கள், நம் வீட்டுப பெண்கள் லிஸ்டில் உங்களால் சேர்க்க முடியுமா? ஆனால் பொதுவாக எல்லா ஆண்களும் (நம் அப்பா, மாமா, கணவர் என்று எல்லாருமே) எல்லா விதமானப் பழக்கங்களையும் சுதந்திரமாக, தைரியமாகப் பழகிக் கொள்கிறார்கள். அந்தப் பழக்கங்களால் குடும்பத்துக்குள் பிரச்சினை இல்லாமல் இருக்கிறதா? அதனால் மற்றவர்கள், அதாவது அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா?

Sriakila said...

நன்றி ஜெயந்த்!

கெட்டுப்போவதற்கு மட்டுமல்ல, தவறுகள் நடக்காமல் இருக்கவும் சில கட்டுப்பாடுகள் தேவை என்றுதான் சொல்கிறேன். நீங்கள் சொல்லும் சின்னச் சின்ன பழக்கங்கள்தான் பெரியத தவறுகள் நடக்க காரணமாகின்றன. அந்த தவறுகள் அவனை மட்டும் பாதித்தால் ஒன்றுமில்லை, ஆனால் அவர்களைச் சுற்றியுள்ளவர்களைப் பாதிக்கும்போது... அதற்கு எல்லை மீறாதக் கட்டுப்பாடுகள் தேவைதானே! அதைத்தான் என் பதிவில் சொல்லியிருக்கிறேன்.

சௌந்தர் said...

ஆண் பிள்ளைக்கும் சில கட்டுபாடுகள் இருக்க வேண்டும்

நிலாமதி said...

இப்பொது பெற்றவரை மீறி நடப்பது தான்பாஷனாகிறது. அப்படி நடக்காவிடால் இன்னும் "அம்மாக் கோண்டு " என்கிறார்கள் . உங்ககாலம்வேறு எங்ககாலம்வேறு என்று கதை வேறு சொல்கிறார்கள்.

மாதவராஜ் said...

குழந்தைகளின் மீது பெற்றோர்களின் செல்வாக்கைவிட, சமூகத்தின் தாக்கமே அதிகம்.

ஜெய்லானி said...

மனகட்டுப்பாடு ஒன்னு இருந்துவிட்டால் போதும் அவனை/அவளை யாரும் ஒன்னும் செய்ய முடியாது .....!!!

அன்பரசன் said...

நானும் ஜெயந்த்-ன் கருத்தை ஆதரிக்கிறேன்..
வீட்டில் கிடைக்கும் சுதந்திரத்தால் ஆண் பிள்ளைகள் கெட்டு போகிறார்கள் என்பது முற்றிலும் ஒப்புக்கொள்ள இயலாத கருத்து..
அது அந்த தனிப்பட்ட பையனை பொருத்தது கெடுவதும் கெடாததும்..

Anonymous said...

அண்ணன் மாதவராஜ் அவர்களின் கருத்துக்கு உடன்படுகிறேன்!
இன்றைய இளைய தலைமுறை வீட்டிலிருக்கும் நேரத்தைவிட வெளியில் இருக்கும் நேரமே அதிகம்.
அதே போல் வீட்டிலிருக்கும் நேரத்தில் பாதி நேரம் சமூக ஊடகங்களின் பின்னலில் தானே இருக்கிறார்கள்!
// நண்பர்களுடன் வெளியே தங்குகிறேன் என்று ஒரு ஆண் சொன்னால் அது குடித்து கும்மாளம் போடுவதற்காகத்தானே தவிர வேறு எதற்காகவுமில்லை. //
உங்களுடைய இந்த கருத்தை நீங்கள் மறுபரிசீலனை செய்வீர்கள் என்று நம்புகிறேன்!

Sriakila said...

நன்றி மாதவராஜ் அவர்களே!

சமுகத்தின் தாக்கம் அதிகம் இருப்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் சமூகத்தின் தாக்கம் பெண்பிள்ளைகள் மேல் விழாமல் கட்டுப்படுத்தத் தெரிந்த பெற்றோர்களுக்கு ஆண்பிள்ளைகளையும் கட்டுப்படுத்தத தெரிந்திருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன். பெற்றவர்களுக்குத்தான் இது தெரிய வேண்டும்.

Sriakila said...

நன்றி அன்பரசன்!

தனிப்பட்ட பையன் கெட்டுப்போவதால் யாருக்கும் ஒன்றும் இல்லை. ஆனால் அவனால் அவனைச சார்ந்தவர்களுக்கும், சமூகத்திற்கும் பாதிப்பு வந்தால்? அதைத்தான் பெற்றோர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்கிறேன்.

Sriakila said...

நன்றி பாலாஜி!

இன்றைய இளைய தலைமுறை வீட்டிலிருக்கும் நேரத்தைவிட வெளியில் இருக்கும் நேரமே அதிகம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் எவ்வளவு நேரம் என்ற அளவுகோலை கொடுக்க பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

pinkyrose said...

பையன், பொண்ணுன்னு இல்ல ஸ்ரீ...
எல்ல இடதிலும் எல்லாமே இருக்கு
ஜஸ்ட் பெற்ரோர்கள் கட்டுப்பாடு விதிக்கிறவங்களா இல்லாம கைட் பண்றவங்களா இருந்த நல்லார்க்கும்னு எனக்கு தோணும்

Deepa said...

பெற்றோர் கொடுக்கும் அள‌வ‌ற்ற‌ சுத‌ந்திர‌த்தால் கெட்டுப் போகும் ஆண்பிள்ளைக‌ளை நானும் நிறைய‌க் க‌ண்டிருக்கிறேன்.

ஆனாலும் ஒரு வ‌ய‌சுக்கு மேல் (ஒரு வ‌ய‌சு அல்ல‌!) பிள்ளைக‌ளைக் க‌ட்டுப்ப‌டுத்துவ‌து பெற்றோரின் கைக‌ளில் இல்லை அகிலா. ரொம்ப‌க் க‌ஷ்ட‌ம்.

Deepa said...

// நண்பர்களுடன் வெளியே தங்குகிறேன் என்று ஒரு ஆண் சொன்னால் அது குடித்து கும்மாளம் போடுவதற்காகத்தானே தவிர வேறு எதற்காகவுமில்லை. //

:)))) அதே அதே!

arivuindia said...

ஹாய் ஸ்ரீகலா,
உங்கள் கருத்து ஓரளவிற்கு உண்மை, அனால் பெற்றோர்களின் கண்டிப்பு ஓரளவிற்குதான் முடியும். அதிகமான கண்டிப்புகூட தவராகபொய்விடும். நானும் நண்பர்களுடன் தங்கிருக்கிறேன். சிலர் குடிப்பார்கள் சிலர் தொடமாட்டார்கள், வர்ப்புருதல்களில் இருந்து விலகுவதற்கும் பக்குவம் வேண்டும். எனக்கு பிடிக்கவில்லை என்று நிறுத்திக்கொண்டால் நலம். அதைவிடுத்து நான் ரொம்ப நல்லவன் என்று சீன போட்டாலோ அல்லது அறிவுரை கூறினாலோ பாதிக்கப்படுவோம். எனதுகுழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்றுதான் கவலை

arivuindia said...

// நண்பர்களுடன் வெளியே தங்குகிறேன் என்று ஒரு ஆண் சொன்னால் அது குடித்து கும்மாளம் போடுவதற்காகத்தானே தவிர வேறு எதற்காகவுமில்லை. //

சிலர் குடிக்காமலே அந்தகூட்டதுடன் கூத்தடிப்பதும் உண்டு, சைடு டிஷ் தின்ரே பிள்ளை எகிரவைப்போம்.

mathi said...

நிறைய பேர் இப்படி கெட்டு போயிருகாங்க என்று கேள்வி பட்டு இருக்கிறேன் .
அதற்கு பெற்றோர்களை குறை சொல்ல முடியாது அகிலா ... எந்த பெற்றோரும்
அனுமதிப்பது இல்லை .கெட்டு போக நினைத்து திட்டம் போடும் மகன்களை
என்ன செய்ய முடியும் அவர்களால் .. சொல் பேச்சு கேட்காதவர்கள் கெட்டு போவார்களே !!
மனக்கட்டுப்பாடு இருந்தால் அவர்கள் பிழைத்து கொள்வர்

arivuindia said...

நானும் எனது நண்பர்கள் மூன்றுபேரும் வீடு எடுத்து தங்கி இருந்தோம். எங்கள் வீட்டில் மட்டும் நான் வெஜ் உண்டு மற்றவர்கள் வீடுகளில் சுத்த சைவம். அனால் வார இறுதிகளில் நண்பர்களின் வாழ்க்கை ஆரம்பமாகும் விதவிதமான பாட்டில்கள், நான் வெஜ் ஐட்டம்கள், நான் சைடு டிஷ்மட்டிம் கொஞ்சமாக எடுத்துக்கொள்வேன், நண்பனின் அம்மா வீட்டிற்கு வந்திருந்தார். அதிக வேலைகாரணமாக தாமதமாக சிவந்த கண்களுடன் செல்வேன். திரும்பி போஹும்போது நன்பனிடம் கேட்டாராம் அந்த பையனுக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் அதிகமோ என்று... எங்கள் நண்பர்கள் வட்டத்தில் பலநாள் காமெடி இதுதான்

Sriakila said...

Thanks for ur comments Deepa!

Sriakila said...

Thanks for ur comments Pinkyrose!

Sriakila said...

நன்றி மதி!

அந்த மனக்கட்டுப்பாட்டை பெண்பிள்ளைகளுக்கு கொடுக்கத் தெரிந்த பெற்றோர்களுக்கு ஆண் பிள்ளைகளுக்கு ஏன் கொடுக்கத் தெரியவில்லை என்றுதான் கேட்கிறேன். சமூகத்தின் தாக்கம் நம் பிள்ளைகள் மேல் விழத்தான் செய்யும், இந்த ஒரு விஷயத்தில் மட்டுமல்ல பல விஷயங்களிலும். இந்த தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள பெண் பிள்ளைகளுக்கு பல வழிகளையும் கற்றுக் கொடுக்கிறோம். ஆனால் ஆண் பிள்ளைகளுக்கு ஏன் கற்றுத்தர மறுக்கிறோம்? யோசிக்க வேண்டும் பெற்றோர்கள்! ஒரு தாயால் அது முடியும், தந்தை அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

Sriakila said...

வருகைக்கு நன்றி அறிவு!

//சிலர் குடிக்காமலே அந்தகூட்டதுடன் கூத்தடிப்பதும் உண்டு, சைடு டிஷ் தின்ரே பிள்ளை எகிரவைப்போம்//

நன்றாகச் சொன்னீர்கள் போங்கள்.

Ahamed irshad said...

தேவைதான் கட்டுபாடுகள்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்...

http://verumpaye.blogspot.com/2010/09/blog-post.html