Sunday, 3 April 2011

இருவீடு, இருவாசல்!!


அந்த நாளில் அப்பாவிடம்
எனக்கு இவ்வளவு வேண்டும்
என்ற செய்தியை மட்டும் கொடுத்துவிட்டு
நானாகவே பாக்கெட்டிலிருந்து 
உரிமையுடன் எடுத்துக்கொள்வேன்


இன்று எனக்காக செய்யும் 
ஒவ்வொரு செலவையும்
அப்பா கேட்கமாட்டார் என்பதால்
பாக்கெட்டில் வலுக்கட்டாயமாக வைத்துவிட்டு
அதன் பிறகே செய்தியை சொல்கிறேன்


ஏன் இந்த மாற்றம் என்று 
பல நேரம் யோசிக்கிறேன்....


மாற்றத்திற்கு காரணம்
என் கழுத்தில் இருக்கும் தாலியா?
இல்லை..நானே போட்டுக்கொள்ளும் வேலியா?


யதார்த்தங்கள் நிறைந்த வாழ்க்கை
பலநேரம் ஆச்சர்யப்பட வைக்கிறது.....


அந்த ஆச்சர்யத்தில் 
வந்து வந்து போவது
பெண்ணுக்கு மட்டும்
இருவீடு, இருவாசல்!!



Saturday, 26 March 2011

கொத்துங்க எஜமான்... கொத்துங்க!

"எங்க அப்பாவைக் கொன்ன அந்த நாலு பேரு யாரு?" இதுதான் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமா நாயகர்கள் தங்கள் அம்மாவையோ, ஆயாவையோ பார்த்து கேட்கும் கேள்வி. வில்லன்களின் கதையைக் கேட்டதும், 'ஒரு போங்கு புயலாகி வருதேய்ய்ய்ய்ய்ய் ஓஓஓஓ' என்று ஸ்பீக்கர்கள் காதைக் கிழிக்கும். ஆனால் வில்லனின் மகள் மட்டும் ஹீரோவிடம் கிறங்கி, மயங்கி, குத்தாட்டம் போடுவார்.


ரிவெஞ்ச் கதைகளில் வெரைட்டி காட்டியது 'அபூர்வ சகோதரர்கள்'. கோலிக்குண்டில் கொடூரக்கொலை, புலியை விட்டு குரல்வளையைக் குதறுவது, சர்க்கஸ் சிங்கத்தை வைத்து சட்னி ஆக்குவது என விதவிதமான கொலைகளை செய்வார் தம்மாத்துண்டு கமல்.


அம்மாவை கைவிட்டுப்போன அப்பாவை 'என்னம்மா கண்ணு செளக்கியமா?' என்று கேட்ட ரஜினிக்குப் பழைய படங்களில் ஆல்டைம் ட்யூட்டியே பழிவாங்குவதுதான். அப்பாவைக் கழுத்தறுத்தவன், தங்கச்சியைக் கற்பழித்தவன் என்று தீங்கு செய்யும் வில்லன்களை ஜெர்கின் அணிந்து பழி வாங்கினார் சூப்பர் ஸ்டார்.


எல்லா ஹீரோக்களும் சுயநினைவோடு பழிவாங்கியபோது சுற்றிச் சுற்றி பழிவாங்கிய 'கஜினி'யின் ரிவெஞ்ச் நிறையவே வித்தியாசம்.


ஆண்கள் எல்லாம் உயிரோடு பழிவாங்க, பெண்கள் ஆவியாக வந்து பழிவாங்குவார்கள். வெள்ளைச்சேலை, சாம்பிராணிப் புகை, மணக்கும் மல்லிகை இதுதான் ஆவிக்கு உரிய அடையாளம். சூப்பர் சிங்கர் ரேஞ்சுக்கு ஒரு பாட்டு பாடுவார்கள். அந்தப் பாடாவதி பாட்டுக்கே வில்லன்கள் தூக்கில் தொங்கலாம். அது சரி, ஆவிகள் மற்றவர்களை ப‌ழிவாங்குகிறதே...ஆவிகளால் பழிவாங்கப்பட்டு அகால மரணம் அடைபவர்கள் ஆவிகளாக மாறி யாரைப் பழிவாங்குவார்கள்?


இதுபோக, நண்பனைக் கொன்றவனை நாள் குறித்துப் பழிவாங்குவது, குடும்பத்தை அழித்தவனைக் குத்திக் கிழித்து பழிவாங்குவது, அத்திப்பட்டியை அழித்தவர்களை ஆள்வைத்துக் கடத்திப் பழிவாங்குவது என்று தனிப்பட்ட பிரச்சினைகளுக்காகவும், சமூகப் பிரச்சினைகளுக்காகவும் தொடரும் பழிவாங்கும் படலம்.


இந்தியாவில் பாம்புகள் படம் எடுத்ததை விட பாம்புகளைப் பற்றி படம் எடுத்ததுதான் அதிகம். குஜாலாக இருக்கும் பாம்புகளைக் குருவி சுடுவதைப் போல சுட்டுவிடுவார் வேட்டைக்காரன். பெண் பாம்பு பிழைத்துப் பழிவாங்கும். சிட்டி, பட்டி எல்லாம் தேடி வந்து வில்லனை போட்டுத்தள்ளும். கொத்துங்க எஜமான்...கொத்துங்க! 


நண்பனின் எதிரி எனக்கும் எதிரியே என்கிற 'சுப்ரமணியபுரமும்', சேர்த்து வைத்தவர்கள் பிரிந்து விட்டால் பிரித்து மேய்ப்பது என்கிற 'நாடோடிகள்', இன்றைய 'ஈசன்' வரை தொட்டுத் தொடர்கிறது தமிழ் சினிமாவின் பழிவாங்கும் பாரம்பரியம்!


இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கொத்துக்கொத்துன்னு கொத்துவாய்ங்களோ தெரியல....




(செய்திகள் விகடனிலிருந்து)

Saturday, 19 March 2011

எல்லா நாளும் நல்ல நாளே!


அதென்ன நல்ல நேரம், கெட்ட நேரம், நல்ல நாள், கெட்ட நாள்? அப்புறம் எதற்கு வாரத்திற்கு 7 நாட்கள், ஒருநாள் என்பது 24 மணி நேரம் என்றெல்லாம் வரையறுத்து வைத்தார்கள். நமக்கு எது நல்ல நாள், கெட்ட நாள் என்று அவர்களைத்தான் முதலில் கேட்க வேண்டும். 


உலகில் நடக்கும் அத்தனை நல்லவையும் எமகண்டம் என்று சொல்லப்படும் கெட்டநேரத்திலும் நடக்கிறது..அத்தனை கெட்டவையும் ஜோசியர் குறித்துக் கொடுக்கும் முகூர்த்த நேரத்திலும் நடக்கிறது. இது இயற்கைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். 


எத்தனையோ கெட்ட விஷயங்களிலிருந்து தான் ஏதோ ஒரு நல்ல விஷயம் பிறக்கிறது. அப்படியென்றால் அந்த கெட்டது நடக்கும் நாளும் உலகத்துக்கு எச்சரிக்கையாக மாறும் நல்ல நேரம்தானே!


'செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது என்று நினைத்து உருவாக்கப்பட்ட 'நல்ல நேரம், கெட்ட நேரம்' என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன.


இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின் படி, ஒரு மாதத்துக்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு தலைதான் சுற்றுகிறது.


வாரத்தில் செவ்வாய், சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது (10 நாட்கள்).


மாதத்தின் அஷ்டமி, நவமி நன்மைக்கு உகந்தது அல்ல (4 நாட்கள்).


'பாட்டி முகம்' நாளில் நல்லது செய்வது நல்லதில்லை (2 நாட்கள்).


ஒரு மாதத்தில் வரும் ராகுகாலம், எமகண்டம், குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 3/4 நாட்கள்).


தவிர, கெளரி பஞ்சாக்கத்தின் படி நன்மை செய்யத் தகாத நாட்கள் (2 நாட்கள்).


மொத்தத்தில் ஒரு மாதத்தின் 21 3/4 நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட?

(நன்றி: விகடன்)

Monday, 14 March 2011

எதை கேட்கணும்?


"பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி..தெரியுமா? அதனால அவங்க என்ன சொன்னாலும் கேட்கணும்..சரியா?"


"ஓ.. அப்படியா? சரி, கேட்டுக்கறேன்..அதனால தான் சகுனி பேச்சை துரியோதனனும், கூனி பேச்சை கைகேயியும் கேட்டாங்களோ..."


"ம்ம்க்கும்..அவுகளுக்குன்னு ஒரு சுயபுத்தி இருந்திருக்கணும்.."




இப்ப நான் பெருமாளை கேட்கறதா? இல்லை சுயபுத்தியை கேட்கிறதா? 


#என்னடா கொடுமை இது? என்னோட மூளைக்கு வந்த சோதனை!

Tuesday, 1 March 2011

நாளை உங்கள் பெண்ணும் இந்தக் கேள்வியைக் கேட்கலாம்!


மகள்: "அம்மா, என்னம்மா இவ்வளவு பாத்திரங்கள்.. எதுக்கும்மா இதெல்லாம்?"


அம்மா: "இந்த பாத்திரங்களெல்லாம் உனக்கு சீர் செய்யத்தான்.."


மகள் அத்தனை பாத்திரங்களையும் கலைத்துப் பார்த்தாள்..


மகள்: "இதென்னம்மா.. தோசைக்கல் கூட வைத்திருக்காயே.."


அம்மா: "ஆமாம். உன் புருஷனுக்கு தோசை செஞ்சு கொடுக்க வேண்டாமா?"


மகள்: "அப்படின்னா அவரால தோசைக்கல் கூட வாங்க முடியாதாம்மா?"


அம்மா: "அப்படியெல்லாம் பேசக்கூடாதும்மா.. இதெல்லாம் காலம், காலமாக நடக்கும் சம்பிரதாயம்"


மகள்: "ம்ம்.. சரிம்மா..இந்தப் பாத்திரங்களையெல்லாம் வைத்து நான் என்ன செய்ய?"


அம்மா: "என்னடி கேள்வி இது? உன் புகுந்த வீட்டில் வைத்து சமைப்பதற்கு பாத்திரங்கள் வேண்டாமா? அதற்குத்தான்...."


மக‌ள்: "ஏன் அவர்கள் வீட்டில் பாத்திரங்கள் இருக்காதாம்மா?"


அம்மா: "இருக்கும். இருந்தாலும் உனக்கென்று தனியாக எல்லாம் வேண்டாமா?"


மகள்: "எல்லாத்தையும் இப்போதே அவர்களும் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள், நீங்களும் தனியாக எனக்கென்று அத்தனையும் ஒதுக்கி விடுகிறீர்கள். அப்புறம் ஏன் கல்யாணத்துக்கப்புறம் என் மகனை மயக்கி தனியாக கூட்டிச்சென்று விட்டாள் என்று எல்லாரும் சொல்கிறார்கள் அம்மா? பக்கத்து வீட்டுல இருக்கிற ஜானகி அக்கா அழுதப்போ பாவமா இருந்துச்சும்மா..."


அம்மா: "!....!" 

Friday, 25 February 2011

பெயரின் மீது காதல்!


அதென்ன பெயரின் மீது காதல்? ஒவ்வொருவருக்கும் முதல் அடையாளமாக இருப்பது நம்முடைய பெயர்தான். அந்தப் பெயரில்தான் எத்தனை விதம்? 


பெற்றோர்கள் வைத்தப் பெயர், நண்பர்கள் வட்டத்தில் ஒரு பெயர், பெற்றோர் வைத்தப் பெயர் பிடிக்காமல் போய் தாங்களாகவே வைத்துக்கொண்ட பெயர் என்று பெயர்களின் மீது உள்ள காதல் இதுவரை மட்டுமல்ல.. இனிமேலும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.


அந்தப் பெயரால் வந்த சுவாரஸ்யங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.


ஸ்ரீஅகிலா! இது என்னுடைய ஜாதகப்பெயர். ஆனால் இந்தப்பெயரை என்னுடைய சர்டிஃபிகேட்டில் கொடுக்காமல் வெறும் அகிலா என்று மட்டுமே கொடுத்தார்கள். 'அகிலா' இதன் முதலெழுத்து A என்று ஆரம்பிப்பதால் க்ளாஸ் ரூமில் முன்னாடி உட்கார வைத்து விடுவார்கள். (கொடுமை! க்ளாஸில் தூக்கம் வந்தால் தூங்கவே முடியாது) எக்ஸாம் ஹாலிலும் முதல் பெஞ்சில் உட்கார வைத்து ஒரு பிட்டு கூட அடிக்க முடியாமல் செய்து விடுவார்கள். 



வீட்டில் கூப்பிடுவது 'பேபி'என்றாலும் நல்லவேளை அந்தப்பெயரையே எனக்கு வைத்து விடவில்லை. (வைத்திருந்தால்..நான் பாட்டியான பிறகு 'பேபி பாட்டி' என்றுதான் கூப்பிட்டிருப்பார்கள். ஷ்ஷ்! கற்பனை செய்யவே முடியவில்லை)  


கண்கள் பெரிதாக இருந்ததால் என்னை 'முட்டக்கண்ணு' என்று கூப்பிட்டவர்கள் ஏராளம். அப்படி கூப்பிடுபவர்களை அதே முட்டைக்கண்ணை வைத்து முறைத்து விட்டு சென்றுவிடுவேன். அந்தக் கண்ணைக் கொடுத்ததற்காக கடவுளையும் திட்டியிருக்கிறேன். அந்த தாழ்வு மனப்பான்மை, அந்தக் கண்களுக்காகவே என்னை ஸ்கூலில், நடனத்தில் சேர்த்துக் கொள்ளும் போதும், அந்தக் கண்களை வர்ணித்து லவ்லெட்டர் வந்தபோதும் தானாக விலகிப்போனது.


நண்பர்கள் குழுவில் என்னை 'அகில், அகில்ஸ்' என்றெல்லாம் சுருக்கி கூப்பிடும்போது அந்தப் பெயர் எனக்கு ரொம்பவும் பிடித்துப்போனது. அதன் அர்த்தம் தெரிந்தபோது அதைவிட அந்தப்பெயரின் மீது காதல் வந்தது.


என் கணவரும் அடிக்கடி சொல்லுவார், "எனக்கு முதலில் ராஜாஜி என்றுதான் பெயர் வைக்கப்பார்த்தார்கள், ஆனால் நல்லவேளை 'ராஜ்குமார்' என்று வைத்து விட்டார்கள். தப்பித்தேன்!" என்று சொன்னார். பொதுவாக தேசத்தலைவர்களின் பெயர்களை வைத்துக்கொள்ள யாருக்கும் விருப்பமில்லை என்பது தான் உண்மை. அப்படி வைத்தாலும் அதையும் சுருக்கி ஸ்டைலாக வைத்துக்கொள்வது பலருக்கும் பிடித்தமான விஷயம். 


பிடிக்காத பெயரைப் பெற்றோர்கள் வைத்துவிட்டால் அதனால் வரும் தாழ்வு மனப்பான்மையும் அதிகம் தான். அனைவரும் கிண்டல் செய்வதாலேயே அந்த எண்ணம் வருகிறது என்று நினைக்கிறேன். 


வீட்டில் பெண், மாப்பிள்ளை பார்க்கும் நேரத்தில் கூட இந்தப் பெயருக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்தப் பெயருக்காகவே பல வரன்களைத் தட்டிக்கழித்தவர்களும் ஏராளம். (அதுசரி அர்ச்சனா என்று வைத்தால் பிடிக்கும், அருக்காணி என்று வைத்தால் பிடிக்குமா?)


இப்போது அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்டைலாக பேர் வைப்பது கூட அதன் மீது உள்ள காதலால் தான். என் மகள் பிறந்த போதும் பெயர் பிரச்சினை தலை தூக்கியது. பெரியவர்கள் இப்படித்தான் வைக்க வேண்டும் என்று ஆரம்பித்தார்கள். நட்சத்திரப் பெயர்தான் வைக்க வேண்டும் என்றும் சண்டை போட்டார்கள். நாங்கள் யாருக்கும் இசைந்து கொடுக்கவில்லை. 


அவரவர்களுக்கு எப்படி பிடிக்கிறதோ அப்படி கூப்பிட்டுக்கொள்ளுங்கள். நாங்கள் இப்படித்தான் வைப்போம், சர்ட்டிஃஃபிகேட்டிலும் நாங்கள் வைக்கும் பெயர்தான் இருக்கும் என்று உறுதியாக இருந்தோம். 


அப்படி ஆசையாக என் மகளுக்கு வைத்தப் பெயர்தான் 'ரிஜூதா'. அவள் வளர்ந்து வரும் போது அது நல்லப் பெயராகவும், கொஞ்சம் ஸ்டைலாகவும்  இருக்க வேண்டும் என்றும் இந்தப்பெயரை வைத்தோம்.


ஆனால் அவளுக்கும் 'ரிஜூதா' என்ற முழுப்பெயர் ஸ்கூலில் தான் கூப்பிட வேண்டும். வீட்டிற்கு வந்தால் ரிஜூதான். இல்லாவிட்டால் ரகளைதான்.  அவளை வெறுப்பேற்ற வேண்டும் என்றால் ரிஜூதா என்று கூப்பிட்டால் போதும். சிறு குழந்தைகளுக்கும் அவர்களின் பெயர் மீது உள்ள காதல் இங்கிருந்தே தொடங்கி விடுகிறது.


பதிவுலகத்துக்கு வந்தபிறகு முதலில் கவர்ந்ததும் பலருடைய பெயர்கள் தான். எத்தனையோ பேருக்கு தங்களுடைய பெயர்களால் வந்த சீண்டல்களும், சுவாரஸ்யங்களும் நிறைய இருக்கும். அதைப் பலரும் பகிர்ந்து கொள்ளலாமே, அதற்காக இதை தொடர்பதிவாக கொண்டு செல்லலாம் என்று நினைக்கிறேன்.


உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களுடைய பெயரால் வந்த சுவாரஸ்யங்களை, கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். படிப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். 


இந்த தொடர்பதிவுக்கு நான் அழைப்பது; (விருப்பமிருந்தால்)


சந்தன முல்லை  (இந்தப்பெயர் எனக்கு மிகவும் பிடித்திருப்பதால்)


Tuesday, 15 February 2011

தீரவில்லையா ஆண்பிள்ளை மோகம்!


சமீபத்தில் சிநேகிதி ஒருவரிடம் தொலைபேசியில் பேசினேன். அவ‌ருக்கு இரண்டாவதும் பெண் குழந்தையாக பிறந்து ஒரு வருடம்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் அவரின் இருவீட்டுக் குடும்பத்தாரும் சேர்ந்து ஆண்பிள்ளை வேண்டும் என்ற ஆசையால் தொந்தரவு செய்வதை என்னிடம் தொலைபேசியில் சொன்னார்.


இரண்டாவது சிசேரியன் செய்யும்போதே குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனையும் சேர்த்து செய்திருக்கலாமே என்று கேட்டேன். ஆனால் அவர், அதற்கு குடும்பத்தார் யாரும் சம்மதிக்கவில்லை என்று வருத்தப்பட்டார். இப்போதே இரண்டு பெண்குழந்தைகள் ஆகிவிட்டது. இவர்களை வள்ர்ப்பதற்கே எனக்கு நேரம் சரியாக இருக்கும். இன்னும் 'ஆண்பிள்ளை' ஆசையை சொல்லி வேறு தொந்தரவு செய்கிறார்கள். இவர்களை எதுவும் செய்யமுடியாமல் நான் 
தவிக்கிறேன் என்று சொன்னார்.


இப்போதே ஜனத்தொகை நூறு கோடியை எட்டிவிட்ட நிலையில் ஆண்பிள்ளை மோகம் இன்னும் தீராமல் இருப்பதை நினைத்து வருந்துகிறேன். ஆண்பிள்ளை பிறந்தால் எதை அடைந்து விடுகிறார்கள்? பெண்பிள்ளை பிறப்பதால் எதை இழந்துவிடுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.


ஒரு குடும்பத்தில் முதலில் பிறப்பது ஆணாக இருக்க வேண்டும் என்றுதான் பொதுவாக பலரும் நினைக்கிறார்கள். அது பெண்ணாக பிறக்கும்போது அடுத்தது ஆணாக இருக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. அனைவருக்கும் ஆண் ஒன்று, பெண் ஒன்று இருக்க வேண்டும் என்று ஆசைதான். அது அமையாமல் போனால் ஏன் வருத்தப்படுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. அதில் சின்ன சலிப்பும் கூட தொற்றிக்கொள்கிறது.


ஆண்பிள்ளை என்றால் வரவு, பெண்பிள்ளை என்றால் செலவு என்ற காலமெல்லாம் முந்தைய தலைமுறையோடு போய்விட்டது. இன்று நாட்டில் இருக்கும் விலைவாசியில் ஆண், பெண் பாகுபாடில்லாமல் தான் செலவு செய்ய வேண்டியதிருக்கிறது. என்னைப்போலவே என்னுடைய பெண்ணும் கஷ்டப்பட வேண்டாம் என்றுதான் பல தாய்மார்கள் நினைக்கிறார்கள். அந்தக் கஷ்டத்தை நம்மைவிட பலமடங்கு சக்தியுடன் எதிர்கொள்ள பழக்கப்படுத்துவது தான் பெற்றோர்களின் கடமை.


படுத்த படுக்கையாகிவிடும் கடைசிக்காலத்தில் (நிர்வாணக் கோலத்தில் கிடந்தால் கூட) நம் தாய், தந்தை, மாமனார், மாமியார் என்று அனைவரையும் அரவணைக்கும் பக்குவம் ஒரு பெண்ணுக்கு இயற்கையாகவே வந்துவிடும். இந்த மன‌நிலை ஆணுக்கு வருவது கடினம். அதையும் மீறி அவர்கள் செய்ய வேண்டும் என்றால் அதற்கு அவனுடைய மனைவியோ, அக்காவோ, தங்கையோ அவ‌ர்களின் துணை தேவை. இது தெரியாமல் பல பெற்றோர்கள் என் பிள்ளை வந்து கொள்ளி வைத்தால் தான் என்கட்டை வேகும் என்று புலம்புவார்கள்.


அந்த புலம்பல்களுக்குப் பின்னால் கண்டிப்பாக ஒரு பெண்ணின் அரவணைப்பு இருக்கும். அது மகளாகவோ, மருமகளாகவோ, பேத்தியாகவோ அல்லது ஒரு நர்ஸாகவோ கூட இருக்கலாம்.  


அந்த அரவணைப்பைத் தரும் பெண்பிள்ளையை பெற்றெடுத்ததற்காக சந்தோஷ‌ப்படுங்கள். என்னைப் பொறுத்தவரை, ஒரு பெண்குழந்தையை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள், இரண்டு பெண்குழந்தைகளை பெற்றவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.


ஆண்குழந்தைகளை வரவேற்போம்! 
பெண்களை மதிக்க கற்றுக்கொடுப்போம்! 
பெண்குழந்தைகளையும் வரவேற்று 
பெண்ணை பெற்றெடுத்ததற்கு பெருமைப்படுவோம்!

Thursday, 20 January 2011

வாழ்க்கைப் பாடம்!

சிறுவயதில் அம்மா ஆக்ரோஷமாக அடித்துத் திட்டும்போது
நினைத்துக் கொண்டேன்
அம்மா கோபப்படும்போது அசிங்கமாக இருக்கிறாள்
நான் அப்படி இருக்க மாட்டேன்
எல்லாரிடமும் பொறுமையாகப் பேசி அழகாக இருப்பேன் என்று.

சிறுவயதில் அண்ணன் அடித்தவுடன் 
வலி தாங்காமால் அழும்போது நினைத்துக் கொண்டேன்
யாரையும் இப்படி அடிக்கக் கூடாது அவர்களுக்கும் 
இவ்வளவு வலிக்குமே என்று.


கொஞ்சம் வளர்ந்தவுடன் ஏதோ ஒரு நேரத்தில் 
அப்பாவும், அம்மாவும் சண்டைபோட்டு 
வார்த்தைகளை வீசி வருந்தும் போது 
மனதில் நினைத்துக் கொண்டேன்
யாரிடமும் காயப்படுத்தும் வார்த்தைகளைப் 
பேசக்கூடாது என்று.


படிக்கும் வயதில் சாப்பாடு பிடிக்கவில்லை என்று 
டிபன் பாக்ஸில் உள்ளதை மொத்தமாகக் கொட்டிவிட்டு 
மெத்தனமாக திரும்பி வரும்போது
யாரோ "அம்மா, சாப்பிட்டு மூணு நாளாச்சு..
ஏதாச்சும் தர்மம் பண்ணும்மா" என்று சொல்வது 
காதில் விழ அப்போதே மனதில் நினைத்துக் கொண்டேன்
சே! இந்த சாப்பாட்டை வீணாக்குவது 
எவ்வளவு தவறு என்று.


அவசரத்தில் ஒரு பேனா, பென்சிலைக் கூட 
சக தோழிகளுக்குத் தர மனமில்லாமல் 
உதாசீனப்படுத்தும் மற்ற தோழிகளைப் பார்த்து
மனதில் நினைத்துக் கொண்டேன்
நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்குக் 
கொடுக்க வேண்டும் என்று.


யாராவது ஒருவரைப் பற்றி குறை சொல்லிப் 
புலம்புவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு 
அதை அவர்களிடமே எடக்குமடக்காகப் போட்டுக்கொடுத்து மாட்டிவிடும் 
என் கணவரைப் பார்த்து மனதில் நினைத்துக் கொண்டேன்
யாரைப்பற்றியும் குறை சொல்லக்கூடாது என்று.


கெட்ட வார்த்தை பேசுவதால் கடுமையாகக் கண்டித்து விட்டு வருத்தப்படும்போது இனி அப்படி பேச மாட்டேன்மா 
என்று உடனே கோபத்தை மறந்து கட்டிக்கொள்ளும்
குழந்தையின் இயல்பைப் பார்த்து 
மனதில் நினைத்துக் கொண்டேன்
யாருடையக் கோபத்தையும் உடனே மறந்து விடும்
இந்த குழந்தை மனதுடன் இருக்க வேண்டும் என்று.




நான் வாழ்க்கையில் பக்குவப்பட 
இத்தனை பேர் உதவியிருக்கிறார்களே
என்று ஆச்சர்யப்படும் வேளையில்
நான் வாழ்நாள் முழுவதும் பக்குவப்பட 
இன்னும் எத்தனைப் பேரை
சந்திப்பேன்? காத்திருக்கிறேன் ஆவலுடன்!



Tuesday, 18 January 2011

தேர்தல் பண்பாடு

நம்ம ஊர் அரசியலைப் பொறுத்தவரை, ஒரே குடும்பத்தில் உள்ள அண்ணன், தம்பி வேறு வேறு கட்சியில் இருந்தால் அதுவே குடும்பத்துக்குள் சண்டையாக மாறி அடிதடியில் முடிந்துவிடும் அளவுக்குப் போய்விடும்.


நம்ம ஊர் அரசியல் இப்படிப்பட்ட நிலையில் தான் இருக்கிறது.


ஆனால் இங்கிலாந்தில் எப்படித் தெரியுமா?


அங்கே ஒரே மேடையில் போட்டியிடுகிற இரு வேட்பாளர்களும் பேசுவார்களாம், பட்டிமன்றம் மாதிரி.


ஒருமுறை இது போன்ற ஒரு கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு வேட்பாளர் மக்கள் தனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கானக் காரணங்களை வரிசையாகச் சொல்லி, "ஆகவே எனக்கு வாக்களியுங்கள்" என்ற வேண்டுகோளோடு பேச்சை முடித்துக் கொண்டு தன் இருக்கைக்கு சென்றுவிட்டார்.


அதுவரை போட்டி வேட்பாளர் அங்கு வந்து சேரவில்லை. மக்களோடு முதலில் பேசிய வேட்பாளரும் காத்திருந்தார். அவர் வந்து சேர தாமதமாகியதால் முதலில் பேசியவர் ஒலிவாங்கியின் முன் வந்து நின்று பேச ஆரம்பித்தார். எப்படித் தெரியுமா?


"என்னை எதிர்த்துப் போட்டியிடுகிற வேட்பாளர் ஏனோ இன்னமும் வந்து சேரவில்லை. அதன் காரணமாக அவர் தனக்காக ஓட்டு கேட்கும் வாய்ப்பை இழந்து நிற்கிறார். அதனால் அவர் சார்பாக நான் பேச விரும்புகிறேன். அவர் தரப்பு நியாயங்களையும் நானே சொல்கிறேன்" என்று தொடங்கி.. எதிர்தரப்பு வேட்பாளருக்காகவும் இவரே பேசி முடித்திருக்கிறார்.


தேர்தல் பண்பாடு என்பது இப்படித்தானே இருக்க வேண்டும்.


அதுமட்டுமல்ல, அங்கு ஓட்டுக் கேட்கும்போதே வெற்றியா? தோல்வியா? என்பதைக் கணித்துவிட முடியுமாம்.


ஒரு வேட்பாளர் வீட்டுக்கு முன்னால் நின்று, "எனக்கு ஓட்டுப் போடுங்கள்" என்று கேட்டால் "அதுக்கென்ன..பார்த்துச் செய்யறோம்" என்று வாசலிலேயே அனுப்பி வைத்து விடுவார்களாம். இப்படி வாசலிலேயே அனுப்பி வைப்பவர்களின் ஓட்டு நிச்சயம்.


வேறு சில வீடுகளில் வேட்பாளரை வீட்டுக்குள்ளே கூப்பிட்டு உட்கார வைத்து காபி கொடுத்து அனுப்புவார்களாம். இந்த ஓட்டு நிச்சயமில்லாததாம். இந்த உபசரிப்பு, ஓட்டுப்போட போவதில்லை..இதையாவது செய்வோம் என்ற அனுதாபத்தில் தான் அப்படி நடந்து கொள்வார்களாம்.


தேர்தல் பண்பாடு என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்.


(செய்திகள்: தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் எழுதிய 'சிறகை விரிப்போம்!' எனும் நூலிலிருந்து)


நம்ம ஊர் அரசியல் நிலவரத்தையும் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் அய்யோ..யோசிக்கவே முடியவில்லை. நம் ஊரில் ஓட்டுக் கேட்கும் விதமே தனிதான். நம்ம ஊர் அரசியல்வாதிகள் ஓட்டுக்காக எந்த அளவுக்கு இரங்கிப் போகிறார்கள். அரசியல் ஒரு சாக்கடை என்பது உண்மைதானோ!


இங்கே அரசியல் திருடர்களில் கொஞ்சமாகத் திருடுபவன் யாரோ? என்று தேடும் நிலையில் இருக்கிறார்கள் மக்கள்.



















Tuesday, 11 January 2011

செய்வினை....தகடு....மந்திரம் எல்லாம் தந்திரம்

கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன் பாளையத்தில் 'ஹெர்பல் கிளினிக்' நடத்தி வருபவர் டாக்டர் முகுந்தன். இவர் மூலிகை மருத்துவம் பற்றி அறிந்தவர். பூமியில் உள்ள எண்ணில் அடங்காத மூலிகைகளின் பயன்களைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் டாக்டர் முகுந்தன், தீய வழிகளுக்கு மூலிகைகள் பயன்படுத்தப்படுவதை ஆய்வு செய்து வருகிறார்.

அதைப்பற்றிய விழிப்புணர்வை மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் ஏற்படுத்த... தன் ஆய்வில் அறிந்த விஷயங்களை ஒரு தமிழ் நாளிதழில் பகிர்ந்து கொண்டார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

அவர் கூறிய விளக்கங்கள் இதோ உங்களுக்காக;

"மந்திரம் பண்றேன், செய்வினை வைக்கிறேன், தகடு வைக்கிறேன்னு சொல்லி மாந்திரீகம் பண்ணக் கூடியவன் பல மந்திரங்களை ஓதி, பூஜை போட்டுட்டு கடைசியா, ஒரு பொட்டலத்துல ஏதோ பொடியையோ, தீர்த்தத்தையோ நிச்சயம் தருவான். அது வேறொண்ணுமில்ல...சாட்சாத் மூலிகை தயாரிப்புதான்! அதாவது, தாவரங்கள்ல மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் இருக்கிற மாதிரி, விஷத்தன்மை வாய்ந்த மூலிகைகளும் நிறைய இருக்கு.

வசிய மருந்து வைக்கிறவங்க அதைத் தேடிப்பிடிச்சு பொடி, தீர்த்தம்னு ரெடி பண்ணி, அதை தெரிந்தவர்கள் மூலமா உணவுல கலந்து கொடுப்பாங்க. மூலிகையோட நச்சுத்தன்மை ரத்தத்தில் கலந்து, தன்னோட ஆட்டத்தை துவக்கும். எதிர்மறை தாவரங்களோட காம்பினேஷனை தெரிந்து வைத்திருப்பதுதான் இவர்களது பலம. குறிப்பிட்ட இலை, வேர், முள்ளுனு தேடிப்பிடிச்சி பொடி பண்ணி வெச்சுக்கிட்டு, அதைப் பயன்படுத்தி புகையைக் கிளப்பி 'பிளேபாய்' சாமியார்கள் பெண்களை நினைவிழக்க செய்து விடுவார்கள்.

இப்படி மருந்துக் கொடுக்கப்பட்டவங்க இயல்புக்கு விநோதமா நடந்துக்கறதைத்தான் 'வசியம் வச்சுட்டாங்க' அப்ப்டின்னு சொல்றாங்க. இதெல்லாமே முழுக்க, முழுக்க உடல் சார்ந்த பாதிப்புகளே தவிர அமானுஷ்யமோ, தெய்வத் தன்மையோ துளியும் கிடையாது. கிட்டத்தட்ட ஃபுட் பாய்சன் போலத்தான்.

பெரும்பாலான ம்ருந்துகள் ஜீரணமாகி ரத்தத்துல கலந்த பின்னாலதான் அதோட வேலையைக் காட்டும். இதோட பாதிப்புகள் நீண்ட நாட்கள் நீடிக்கும். இப்படியான தொல்லைககு ஆளாகி உடல்நலமோ அல்லது மனநலமோ பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்த சிகிச்சையும், கவுன்சிலிங்க்கும் தேவை."


(நன்றி!: விகடன்)

இது போன்ற தொல்லைகளில் சிக்கி மீள முடியாமல் இருப்பவர்கள் முக்கியமாகப் பெண்கள். பெண்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு கஷ்டம் என்று வரும்போது, வீட்டில் உள்ளவர்களே அப்பெண்ணை மாந்திரீகம் செய்பவர்களிடம் கூட்டிக்கொண்டு செல்வது ரொம்பவும் கொடுமை. படித்தவர்களும் இந்தப் படுகுழியில் விழுவது எப்படி என்றுதான் தெரியவில்லை.



இதைப் படித்த பிறகும் விழித்துக்கொள்ளாவிட்டால் வினை நமக்குத்தான்!

Friday, 7 January 2011

ஒரு பெண்ணின் பரிதாபக் கதை

அவள் பெயர் ராதா. அழகான அம்மாவுக்கும், செல்லமான அப்பாவுக்கும் பிறந்த மகள். 4 வயதுக் குழந்தையாக இருந்த போது ஒருநாள் அவள் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் அவளுடைய அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சண்டை. வாக்குவாதம் முற்றி, அவளுடைய அம்மா கணவனைப் பயமுறுத்துவதற்காகத் தன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். விஷயம் விபரீதமாக முடிந்து அவரை ஆஸ்பிட்டலில் சேர்த்தனர். இரண்டொரு நாளிலேயே அந்தம்மாவின் கதை முடிந்து விட்டது. ஒன்றும் அறியாத அந்தப் பிஞ்சுக் குழந்தை 'அம்மா, அம்மா' என்று அழுது அழுது ஓய்ந்து போனது.

ராதா கொஞ்சக் காலம் அவளுடைய அப்பாவுடனும், பாட்டி வீட்டிலும் வளர்ந்து வந்தாள். பாட்டி வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருந்த அவளுடைய சித்தி, மாமா, அத்தை போன்ற உறவினர்கள் சின்ன சின்ன எரிச்சலையும், அவ்வப்போது கோபத்தையும் அவள் மேல் காட்டிக் கொண்டிருந்தனர். சில வருடங்களுக்குப் பிறகு அவள் அப்பா வேறு திருமணம் செய்து கொண்டார். அதுவரை அம்மா, அம்மா என்று ஏங்கித்தவித்த ராதா புது அம்மா வரப்போவதை ஆசையாக எதிர்பார்த்தாள்.

புது அம்மா வந்து தன்னை ஆசை, ஆசையாகப் பார்த்துக் கொள்வாள் என்று எதிர்பார்த்திருந்த ராதாவுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. புது அம்மாவின் உத்தரவுப்படி வீட்டில் உள்ள அத்தனை வேலைகளையும் ராதாவே செய்தாள். வீட்டில் ஒரு மூலையில் இடம் கிடைத்த அந்தப் பெண்ணுக்கு, அந்தம்மாவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தவுடன், வீட்டுத் திண்ணை அவளுக்குப் படுக்கை அறையாக மாறியது.

அதுவரை மாற்றாந்தாயின் கொடுமைகளைக் கேள்விக் கேட்கத் திராணியில்லாத ராதாவின் அப்பா அவள் மேல் மேலும் எரிச்சல் பட்டு அவளுடையப் பாட்டி வீட்டுக்குத் துரத்தி விட்டார். பாட்டி வீட்டுக்குப் போனால் அந்த வீட்டிலிருந்த அம்மாவின் உறவினர்கள் அவளைப் பாடாய்படுத்தினார்கள். ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே இரு வீட்டு உறவினர்களும் அவளைக் காசில்லாத வேலைக்காரியாக வைத்திருந்தார்கள்.

இப்படியே எந்தப் பள்ளிக்கூடத்திற்கும் போகாமல் வீட்டு வேலை செய்து, மாற்றாந்தாய்க்குப் பிறந்த தன் தம்பிகளைக் கவனித்துக் கொண்டு அவளது வாழ்க்கை ஓடியது. அப்பாவின் கூடப்பிறந்த அக்கா, தங்கைகள் போன்ற உறவினர்கள் யாராவது அவளைப் பார்க்க வந்தால், "என்னை உங்கள் வீட்டு மருமகளாக்கிக் கொள்கிறீர்களா? நான் நல்லா வேலை செய்வேன் அத்தை. உங்கள் மேல் ரொம்ப அன்பா இருப்பேன். உங்களை நல்லாப் பார்த்துப்பேன்" என்றெல்லாம் கேட்டாள்.

எல்லோருக்கும் அவள் மேல் பரிதாபப்பட்டுக் காசு கொடுத்து விட்டு வரத் தெரிந்ததே தவிர அவளை மருமகளாகிக் கொள்ளும் துணிவில்லை. அவளை அந்த இடத்திலிருந்து தங்கள் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வரவும் தைரியமில்லை. அனைவருக்கும் வேறு வேறு வாழ்க்கை அதில் இவளை வேறு கூடவே வைத்துக்கொண்டு பிரச்சினையாக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.

உண்மையில் ராதா ரொம்பவும் அழகு. யார் வந்தாலும் அன்பாகப் பேசக்கூடியவள். அவள் உடம்பில் மாற்றாந்தாயான சித்தி கொடுத்த தீக்காயங்கள் ஏராளம்.

அன்புக்காக ஏங்கிக் கொண்டிருந்த ராதாவுக்கு அவள் பாட்டி வீட்டில் இருந்த தன் முறை மாமன் ஒருதலையாகக் காதலித்தான். ராதா அவன் காதலை ஏற்றுக்கொள்ள முடியாமல் மௌனமாகவே இருந்தாள். அவளுக்கும் அவனை ரொம்பப் பிடிக்கும். தன் மேல் அன்புக் காட்டக் கிடைத்திருக்கும் முதல் ஜீவன் என்று மனதிற்குள் மகிழ்ந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் "உன்னை என்னால் மறக்க முடியாது, உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்ய மாட்டேன்" என்று உறுதியாக அவளிடம் கூறினான்.

திருமண விஷயத்தில் தன் மனதில் பட்டதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்தாள். அதற்குள் அந்த முறைப்பையன் தனக்கும், அவளுக்கும் கல்யாண ஏற்பாடுகளை செய்யுமாறு வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டான். எவ்வளவோ வேண்டாம் என்றும் சொல்லியும் அவன் கேட்கவே இல்லை. கல்யாண விஷயத்தில் தன் அப்பாவின் தயவை எதிர்பார்த்ததில் அவரும் கைவிரித்து விட்டார்.

கல்யாண ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போதே ராதா ரொம்பவும் பயந்து போனாள். இந்தத் திருமணம் நடந்தால் இதே வீட்டு சூழ்நிலையும், கொடுமைகளும் தன்னை வாழ்நாள் முழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற எண்ணங்கள் மனதில் பாரமாக அழுத்த, இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று முடிவெடுத்து விஷம் சாப்பிட்டுத் தன் கதையை முடித்துக் கொண்டாள் அந்தப் பரிதாபப் பெண். அவள் இறந்த ஒரு வாரத்திலேயே ராதாவைக் காதலித்த முறைப்பையனும் சயனைடு சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.

இரண்டு உயிர்களையும் பலி வாங்கியதில் வீடே நிசப்தமாகிப் போனது. தன் மகள் இறந்த அதிர்ச்சியில் ராதாவின் அப்பா கொஞ்சம், கொஞ்சமாக மனநிலை சரியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டார். கொஞ்ச நாள் வீட்டை விட்டுக் காணாமல் போவதும், கொஞ்ச நாள் கழித்து திரும்ப வருவதுமாக இருந்தார். ஒருநாள் தன் குடும்பத்தை விட்டுக் காணாமல் போய்விட்டார்.

இன்று அவர் பழநியில் ஏதோ ஓர் இடத்தில் மனநிலை சரியில்லாதப் பிச்சைக்காரராக இருப்பதாகக் கேள்வி. தற்போது அவர் உயிருடன் இருப்பாரா என்பது கூட சந்தேகமே.

எத்தனையோக் கனவுகளுடன் சுற்றித் திரிய வேண்டிய ஒரு பெண், குழந்தையாக இருந்த போது தன் அம்மா செய்த முட்டாள்த்தனத்தால் இன்று இல்லாமல் போய்விட்டாள். இது போன்ற முட்டாள்த்தனங்களை செய்யும் ஒவ்வொருவருக்கும் இந்தக் கதை ஒரு பாடமாக இருக்கட்டும்.

Friday, 31 December 2010

புதுவருஷத்துக்கு என்ன செய்யலாம்?

இதோ இன்னும் சிறிது நேரத்தில் புது வருடம் பிறக்கப்போகிறது. புது வருடம் எனக்கு எப்பவும் ஸ்பெஷல் தான், அன்று என் அண்ணனின் பிறந்த நாளும் கூடவே வருவதால்.

ஒவ்வொரு புது வருஷம் பிறக்கும் போதும் இந்த வருஷத்திலிருந்தாவது இந்த இந்தப் பழக்கத்தை விட்டு விட வேண்டும் எனற எண்ணம் நம் எல்லோருக்கும் இருக்கும். 



ஆனால் அதைக் கொஞ்சமாக முயற்சி செய்து பார்க்கவே சில மாதங்கள் தேவைப்படும். அதான் அடுத்த வருஷம் இருக்கே என்று அப்பப்போ மனதுக்குள் ஒரு அலாரம் வேறு அடித்துத் தொலைக்கும் (கெட்ட மனசாட்சி...சே!) 


அந்த அலாரத்துடன் ஒரு சில மாதங்கள் ஓடும். அந்த அலாரம் நன்றாக ஆணி அடித்து உட்கார்ந்துக் கொண்டு, நீ இத செஞ்சா உன்னோட இமேஜ் என்ன ஆவது? என்று நம்மை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கும். 


அதில் சில மாதங்கள் போய்விடும் போது அடுத்த வருஷத்தில நாம இதக் கண்டிப்பா ஃபாலோ செய்யலாம் என்று சமர்த்தாக மனசாட்சி படுத்துக்கொள்ளும்.

புதுவருஷம் எதுக்குப் பயன்படுதோ இல்லையோ இதுக்குத்தான் ரொம்பவும் யூஸ் ஆகுது. ஓகே.. இந்தப் புது வருஷத்தில இருந்து யார் யார் எந்தெந்தப் பழக்கத்த விடணும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க...

1. கூட இருக்கறவங்க அழுதுக்கிட்டோ, திட்டிக்கிட்டோ இருக்கும் போது ஏன் இப்படி என்னைய பாடாய்படுத்திறீங்கன்னு அபத்தமா கேள்வி எல்லாம் கேட்காம, ஏதாச்சும் பெரிசா ஆயிடப்போகுதுன்னு ஒரு டம்ளர் தண்ணிக் கொடுத்து கூல் பண்ணுங்க. தண்ணிக் கொடுத்தா தெம்பா உட்கார்ந்து அழவோ, திட்டவோ செய்வாங்கன்னு விபரீதமா யோசிச்சுத் தொலைக்காதீங்க.


2. but ஆனால், so அதனால (ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு யாராச்சும் சொல்லுங்க), ஆங்ங்.... like 
ஆங்ங்.... like  இந்த மாதிரி இங்கிலீசுல பீட்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு விடுறவங்க கொஞ்சமாவது அதக் கேட்கறவங்க நெலைமைய நினைச்சுப் பாருங்க...

3. நைட்டியோட மெயின் ரோடு வரைக்கும் போறப் பெண்களும், ஷாட்ஸ் போட்டுட்டு பைக் ஓட்டிட்டுக் கெட்ட அலப்பறய விடுற ஆண்களும் இந்த வருஷத்திலாவது அதை மாத்திக்கிட்டா மக்களுக்கு நல்லது.


4. ரொம்ப சூப்பரா சமைக்கிறவங்க எல்லாம் வெங்காயம், தக்காளி எல்லாம் போடாத சுமாரான சமையலைப் பழகிக்கறது வீட்டுக்கு நல்லது.


5. மிஸ்டு கால் கொடுத்தேப் பழக்கப்பட்டவங்க இனிமேலாவது கால் பண்ணிப் பேசணும்னு நினைங்க.


6. குழந்தைங்க சொல் பேச்சுக் கேட்டு அவங்களப் பெத்தவங்க கொஞ்சம் அவங்ககிட்ட மரியாதையா நடந்து, பெற்றோர்கள் சங்கத்தோட மானத்தக் காப்பாத்துங்க.


7. முப்பது வயசுக்கு மேல இருக்கறவங்க உங்க சம்பளத்தில இருந்து ஒரு பகுதியை உங்களோட ரெகுலர் மெடிக்கல் செக்கப்புக்கு ஒதுக்கி, டாக்டர்ஸ்-க்கு வாழ்வு கொடுங்க. 


8. இனிமேலாவது டாய்லெட்டுக்குப் போகும்போதும், புத்தகத்தை கூடவே எடுத்துக்கிட்டுப் போய் 'நீங்க பெரிய புத்தகப்புழு' , 'பெரிய அறிவாளி' அப்படியெல்லாம் சொல்லவச்சு மத்தவங்க வாய நாறடிக்காதீங்க.


9. மத்தவீட்ல நடக்கிற பஞ்சாயத்தப் பார்க்கிறதுக்கு முன்னாடி, நம்ம வீட்டுப் பஞ்சாயத்தக் கொஞ்சம் மனசில வச்சுக்கோங்க.


10. கடைசியா மனசுக்குள்ளேயே வச்சிருக்கிற அன்பையும், பாராட்டையும் நம்ம கூட இருக்கறவங்களுக்கு அள்ளி, அள்ளிக் கொடுங்க.



HAPPY NEW YEAR 2011!

Monday, 6 December 2010

எனர்ஜி!

என் வாழ்வின் 

அத்தனைக் கஷ்டங்களும்
அத்தனைத் துயரங்களும்
அத்தனைக் கோபங்களும்
அத்தனை வலிகளும்
அத்தனை ச‌லிப்புகளும்


உன் ஆறுதலான ஒற்றை வார்த்தையில் அடங்கிப் போய்விடுகிறதே!


அது உன் மனதில் இருந்து வராமல் 
வெறும் வாய் வார்த்தையாக வந்தாலும் கூட‌


அதுவே என் ஒவ்வொரு நாளின் எனர்ஜிப் பக்கமாய் மாறும் 
எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல்...

Tuesday, 30 November 2010

பெண் மனசு - தொடர்பதிவு

வெறும்பய ஜெயந்த் 'பெண் மனசு' என்ற தலைப்பில் பெண் குரலில் பாடியப் பாடல்களின் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்த ஜெயந்த்துக்கு நன்றி!

பெண் மனதில் எனக்குப் பிடித்தப் பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இதைத் தொடர்கிறேன்.


பாம்பே ஜெயஸ்ரீயின் வசீகரக் குரலில் இளையராஜாவின் அற்புதமான இசையில் உருவானப் பாடல். 


நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென..

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம் நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்


இந்த ஒரு பாடலுக்காகவே நின்னைச் சரணடைந்தேன் என்று இளையராஜாவின் காலில் விழுந்து விடலாம். பாடலின் ஒவ்வொரு வரியும் மனதை விட்டு நீங்காதவை என்றும்.



சித்ரா பாடிய இந்தப்பாடல் காதலனை நினைத்துப் பாடும் ஒரு அழகானப் பெண்மனதைக் கொண்டுவந்துவிடும்.


சோர்ந்து போகும் மனதுக்கு ஆறுதலாக அமையக்கூடியப் பாடல். ஸ்ரேயா கோஷல் அழகாகப் பாடியிருப்பார்.

4. காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள் - மங்கை ஒரு கங்கை

சுதந்திரமான மனதுடன் இயற்கையை ரசிக்கும் பெண் மனம். ஜானகியின் குரலில் வரும் அற்புதமான வரிகள்...

"அதோ அந்தப் புதுமலர் நானாகும் போது
அதை விட பெரும் சுகம் நான் காண்பதேது.. "

பாடல் வரிகளில் நாமும் இயற்கையோடுக் கலந்து விடலாம். இந்தப் பாடலுக்கான லிங்க் எங்கு தேடியும் எனக்குக் கிடைக்கவில்லை.


சித்ராவைத் தவிர இந்தப் பாடல் வேறு யார் பாடியிருந்தாலும் அது இனிக்குமா?  தெரியவில்லை. தன் காதலை ஏற்றுக் கொள்வதற்காகக் காதலனிடம் வேண்டும் பெண் மனம்.


குழந்தைகளுடன் குதூகலமாக இருக்கும் போது மனதிற்கு எவ்வளவு சந்தோஷம்!

"சிங்காரப் பிள்ளை என்றால் கண்ணார உன்னைக் கண்டால் சந்தோஷம் நெஞ்சில் பொங்குதம்மா..."

 சித்ரா பாடிய இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் நானும் குழந்தையோடு குழந்தையாக மாறி விடுவதுண்டு.


ஜானகி பாடிய இந்தப்பாடலில் கணவனை இழந்தப் பெண்ணின் உணர்வுகளை, பாடல் வரிகளுடன் நாட்டியத்திலும் அழகாக வெளிப்படுத்தியிருப்பார் நடிகை ரேவதி.


இந்தப் பாடலைப் பாடும் பெண்ணின் மனதையும், பெண்ணின் குரலையும்  உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா?


இசைக்கு அடிமையானப் பெண்ணின் மனம். ஜானகி அழகாகப் பாடியிருப்பார்.


அழகான வாழ்க்கையைக் கொண்டுவரும் பெண் மனம். சுதா இரகுநாதன் பாடியது. எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் இது.

இன்னும் நிறையப் பாடல்கள் பெண் மனதில், பெண் குரலில் இருக்கிறது. உங்களுக்காக எனக்குப் பிடித்தப் பத்துப் பாடல்களை மட்டும் பதிவில் கொடுத்திருக்கிறேன்.

எனக்குப் பிடித்த இந்தப் பாடல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும்  என்று
நினைக்கிறேன்.

Wednesday, 24 November 2010

அய்யோ! குழந்தைகளின் குத்தாட்டம்

வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஒரு 5 நிமிட இடைவெளியில் வேறு ஒரு சேனலில் குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. அந்த நடனப் போட்டியில் குழந்தைகள் ஆடிய ஆட்டம்.. அடடா! அது ஆட்டமே அல்ல, குத்தாட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தக் குத்தாட்டத்தில் கூட குழந்தைகளின் மழலைத்தனமும், நளினமும் இல்லை.

அவர்களின் வயதைத் தாண்டிய விரசமான பாடல் வரிகளுடன் அவர்கள் ஆடிய விதமும், அந்தப் பாடல் வரிகளுக்குக் காட்டிய எக்ஸ்ப்ரஷ
ன்களும் பார்க்க சகிக்க முடியவில்லை. ஒரு ஆறு, ஏழு வயதுக்கே உரியக் குழந்தைத்தனம் அவர்களிடம் காணாமல் போயிருந்தது.

இதில் குழந்தைகளிடம் உள்ளக் குறைகளை விடப் பெற்றோர்களின் குறைகளேப் பெரிதாகத் தெரிந்தது. இது போன்றப் பாடல்களைத் தேர்வு செய்து, அதற்கு நடனப் பயிற்சியும் கொடுத்து, அதை ரசிக்கவும் ஒரு பெற்றோரால் எப்படி முடிகிறது என்றுதான் தெரியவில்லை.

இது போன்ற நடன நிகழ்ச்சிகளில் அவர்கள் அணியும் உடை அதை விடக் கொடுமை. 'கொழுக், மொழுக்' என்று இருக்கும் குழந்தைகளுக்கு கூட அவர்கள் உடலமைப்புக்கு ஏற்ற உடைகளை அணியாமல்.... என்னக் கொடுமைங்க இது?

சின்னப் பய..புள்ளைங்க எல்லாம் இப்படி கெளம்பிடுச்சுகளே.. நெனைச்சாலே ரொம்ப வேதனையான ஃபீலிங்காத்தான் இருக்கு. ஒருவேளை குழந்தைகளுக்கு எதிராக நாட்டில் நடக்கும் அத்தனை வக்கிரங்களுக்கும் ஆரம்பப்புள்ளி இங்கதான் இருக்கோ?

போட்டியின் இறுதியில் நடுவராக உட்கார்ந்திருப்பவர்கள் கொடுத்தக் கமெண்ட்ஸ் என்னத் தெரியுமா? "உங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆச்சு. சூப்பர்!"

கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி-ங்கிறாங்களே....அப்படின்னா என்ன?

கடவுள் சாட்சியா, அக்னி சாட்சியா, பெற்றோர்கள் சாட்சியா, உறவினர்கள் சாட்சியா மற்றும் எல்லோருடைய சாட்சியா (ஷ்ஷ்..அப்பா! ப்ளாக்ல எழுத ஆரம்பிச்சாலே ஒரு வார்த்தைக்கு எத்தனை பில்டப் கொடுக்க வேண்டியதிருக்கு..) ஒருத்தருக்கொருத்தர் கையைப் புடிச்சுக் குடும்பம் நடத்தறக் கணவன், மனைவிக்கு அமையாத கெமிஸ்ட்ரி, டான்ஸ் ஆடற சின்னக் குழந்தைங்களுக்குக் கூட அமையறதா சொல்றாங்களே... அதென்ன கெமிஸ்ட்ரி?

விவரம் தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்கப்பா!




Sunday, 14 November 2010

அவசரச் சட்டமும், அவசியமானப் பாதுகாப்பும் வேண்டும்

இரண்டு வாரங்களுக்கும் மேல் பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை. கோவையில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு குழந்தை மீது அதிக கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது. குழந்தையை தினமும் ஸ்கூலுக்கு அனுப்பும் போது கூடவே இருந்து கூட்டிக்கொண்டு வர வேண்டிய கட்டாயம். அதை எத்தனை நாள் தொடர முடியும்?


வேன் டிரைவரிலிருந்து அவருக்கு உதவியாக இருக்கும் ஆள் வரை அனைவர் மீதும் ஒரு சந்தேகப்பார்வையுடன் தான் இருக்க வேண்டியதிருக்கிறது. யாராவது குழந்தையுடன் சிரித்துப் பேசினால் கூட இவன் எப்படிப்பட்டவனாக இருப்பானோ என்ற பயம் என்னையுமறியாமல் தொற்றிக்கொள்கிறது. இந்த பயம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் எல்லாப் பெற்றோர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அவள் படிக்கிறாளோ இல்லையோ பாதுகாப்பாக வீட்டுக்கு வந்தால் போதும் என்கிற மனநிலையில் தான் இருக்கிறார்கள்.


கோவையில் நடந்தக் கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு, அனைவரது மனதிலும் ஆவேசங்களும், வருத்தங்களும் இருந்தது. அந்த ஆவேசங்களும், வருத்தங்களும் ஒரு என்கவுன்ட்டரில் முடிந்து விட்டது. ஆனால் குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது நம் நாட்டில்? ஒரு என்கவுன்ட்டரினால் மட்டுமே குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் முடிந்து விடுமா?


எல்லாத் தவறுகளையும் சுதந்திரமாக செய்ய முடிகிற வெளிநாட்டில் கூட குழந்தைகள் மீது கை வைத்தால் அதற்கானத் தண்டனை மிகக்கொடூரமாகத்தான் இருக்கிறது. ஆனால் சின்னஞ்சிறு பட்டாம்பூச்சிகளாய் சுற்றித்திரியும் நம் குழந்தைகள் பாதுகாப்பில்லாத ஒரு உலகத்தில் தான் வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும் போது கோபப்படாமல் இருக்க முடியவில்லை.


குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்கக் கடுமையானச் சட்டம் கொண்டுவராத வரை, பெற்றோர்கள் மனதில் உள்ள பயம் நீங்கப்போவதில்லை.


இத்தனைப் பிரச்சினைகள் நாட்டில் தலைவிரித்தாடும் போது, இரண்டு கிரவுண்டு நிலம் வழங்குவதற்காக சட்டசபையில் வாதிடுவோருக்கு முதலில் ஒரு என்கவுன்ட்டர் நடத்தினால் நாடு உருப்படும்.

Wednesday, 27 October 2010

தனிமையில் இளையராஜா

இந்த உலகத்திலேயே நீ வெறுக்கும் முதல் விஷயம் எது என்று யாராவது என்னிடம் கேட்டால் உடனே என்னிடமிருந்து வரும் வார்த்தை தனிமை என்பது தான்.

நான் அறிந்தவரை, தனிமை பலருக்கும் பிடித்தமான விஷயமாகத்தான் இருக்கிறது. தனிமையில் இருக்கும் போது தான் எனக்கு கவிதை எழுத வருகிறது, நிதானமாக யோசிக்க முடிகிறது என்றெல்லாம் பலபேர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்கும் போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.



நான் தனிமையில் இருக்கும் போது என்றைக்கோ பார்த்த திகில் படங்களும், ஏதோ ஒரு நாளில் யாரிடமோ போட்ட சண்டையும் தான் நினைவுக்கு வரும். கூடவே வாழ்க்கையில் ஏற்படும் சலிப்புகளும் அதனால் ஏற்பட்ட சங்கடங்களும் கூட மனதைப்போட்டு அழுத்தும். என்னைப் பொறுத்தவரை, தனிமை மனதில் பாரத்தை மட்டும் தான்  கொடுக்கிறது,


நான் கொடுமையாக நினைக்கும் அந்தத் தனிமையில் கூட எனக்கு கேட்கப் பிடிக்கும் ஒரே விஷயம் இசை மட்டும் தான். அதுவும் இளையராஜாவின் பாடல்கள் என்றால் மனதில் ஏற்படும் ஒருவிதமான சுகம் இருக்கிறதே. ஆஹா! அதை வார்த்தையால் சொல்லவே முடியாது. அவருடைய பாடல்களைக் கேட்டுக்கொண்டே வேலை செய்யும் போது எந்த வேலையும் எனக்கு கஷ்டமாகத் தெரிந்ததில்லை. சொல்லப்போனால் மிகவும் சீக்கிரமாகவே அந்த வேலையை முடித்துவிட முடியும்.


அந்த இசையே 'டொம் டொம்' என்ற சத்தத்துடன் (இப்போது வரும் குத்துப்பாடல்கள் போல்) இருந்தால் தனிமையில் அந்த இசையேப் பெரும் தலைவலிதான்.

பள்ளிப்பாடங்களைப் படிக்கும்போது கூட, அனைவரும் தனியாக உட்கார்ந்து படித்தால் தான் மண்டையில் ஏறும் என்றெல்லாம் சொன்னதுண்டு. ஆனால் என்னால் அப்படி படிக்கப் பிடித்ததே இல்லை. தனியாக உட்கார்ந்து புத்தகத்தை விரித்தாலே என்னுடைய சிந்தனை வேறு பக்கம் போய்விடும். அப்போது இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டேப் படித்தால் தான் அந்தப் பாடம் என் மண்டையில் சீக்கிரம் ஏறும்.

அப்படிப் பாடல்களைக் கேட்டுக்கொண்டேப் படிக்கும்போது நான் தனிமையில் இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லை. செய்யும் வேலையும் கஷ்டமாகத் தெரிந்ததில்லை. தூங்கும் போது கூட இரவு பத்து மணிக்கு மேல் ஃஎப்.ஃஎம்மில் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருப்பேன். அப்போது அன்றாடம் மனதில் ஏற்படும் வலி கூட இல்லாமல் போகிறது. அவருடைய மெலடிகளால் மனதில் ஒரு துள்ளல்.


எப்போது டாம் அண்ட் ஜெர்ரி போல் முட்டிக்கொண்டிருக்கும் நானும், என் கணவரும் ஒத்துப்போகும் ஒரே விஷயம் இளையராஜாவின் பாடல்களைக் கேட்பதில் மட்டும்தான். எங்கள் இருவருக்கும் சண்டை முத்திப்போனால் அப்போது உடனே எங்கள் இருவருக்கும் பிடிக்கும் இளையராஜாவின் பாடல்களைப் போட்டுவிடுவேன். உடனே இருவரும் சண்டையை மறந்து அந்தப் பாடல்களைக் கேட்பதில் மும்முரமாகிவிடுவோம்.

என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இளையராஜாவின் மெட்டுக்கள் மருந்தாகவே அமைந்திருக்கிறது.

இப்போது வரும் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சீக்கிரமே சலிப்பையும் தந்து விடுகிறது, சில நேரங்களில் சில பாடல்கள் தலைவலியையும் சேர்த்துக் கொடுத்துவிடுகிறது. மனதில் நிற்கும் பாடல்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.


தனிமையிலே இனிமை காண முடியுமா? என்று கேட்டால் என்னுடையத் தனிமையில் இளையராஜாவின் பாடல்களால் மட்டுமே இனிமையைக் காண முடியும்.
 
 

Tuesday, 12 October 2010

மூன்று பெண்கள்; மூன்று வேறு கதைகள்

முதல் கதை


இவளுக்கு திருமணமாகி எட்டு வருடங்களாக குழந்தை இல்லாதக் காரணத்தால் குடும்பத்தில் பிரச்சினை. யாரிடம் என்ன குறை? அதை தீர்ப்பதற்கு என்ன வழி என்ற சிந்தனையெல்லாம் இல்லை. அதனால் பிரச்சினை முத்திப்போனதில் அவள் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாள். தற்கொலை செய்யும் அளவுக்கு மனதைக் காயப்படுத்திய வார்த்தைகள் என்ன என்பது எங்கள் யாருக்கும் இன்னும் விடை தெரியாத கேள்வி? இத்தனைக்கும் அவள் மிகவும் பொறுமைசாலி. எங்களுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்து, ஒரே ரூமில் கிண்டல் பேசி, விளையாடி, சிரித்து மகிழ்ந்த எங்கள் தோழி இன்று உயிருடன் இல்லை. எங்கள் நட்பு வட்டத்தில் முதலில் திருமணம் செய்தவளும் இவள்தான். குடும்பத்தில் அவளுக்கு நிறைய மனக்கசப்புகள் இருந்ததாக மற்றத் தோழிகள் சொன்னார்கள். அவள் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல.. அவள் கணவனே அவளைக் கொலை செய்திருப்பான் என்று அனைவரும் சொன்னார்கள். என்னால் அப்படி யூகிக்க முடியவில்லை. இழப்பு இரண்டு பக்கமும்தான். மனம் விட்டு பேச முடியாமல் இருந்தாளா? பேசியும் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க வழி தெரியாமல் மனதிற்குள்ளேயே குழம்பிக் கொண்டிருந்தாளா? தெரியவில்லை. ஆனால் கல்லூரி படிக்கும் வயதில் எத்தனையோ கனவுகளுடன் சிரித்து விளையாடிய தோழி இன்று இல்லையே...


இரண்டாவது கதை

ஆயிரம் கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் திருமணம் செய்து கொண்டவள் திருமணமாகிய மூன்றே மாதத்தில் வரதட்சணை என்ற பெயரில் கஷ்டத்தை அனுபவித்தாள். அதுவும் மாமனார், மாமியாரால் அல்ல.. தன் கணவனாலேயே அந்தக் கஷ்டத்தை அனுபவித்த போது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

தன் மனைவியின் அண்ணங்கள் இருவருக்கும் சொந்த வீடு இருந்ததைப்போல, தனக்கும் ஒரு வீடு கொடுப்பார்கள் என்று கனவுக்கோட்டை கட்டிக்கொண்டு வந்த மாப்பிள்ளை அது இல்லாமல் போகவே அவளை கொஞ்சம், கொஞ்சமாக டார்ச்சர் செய்ய, தாங்க முடியாமல் திருமணமாகிய ஒன்பதே மாதத்தில் விவகாரத்தாகி விட்ட்து. அத்தனைக் கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டுதான் இருந்தேன். அவனுடன் வாழத்தான் ஆசைப்பட்டேன். அவன் கொடுத்தக் கஷ்டத்தைத் தாங்க முடியாமல் அம்மா வீட்டுக்கு ஓடிப்போய் ஏதாவது வாங்கி வருவேன் என்று நினைத்திருந்தான். ஆனால் நான் அதையெல்லாம் வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவனுக்கு பேலன்ஸாக இருந்ததால் அவனால் பொறுக்க முடியவில்லை. கடைசி வரை என்னுடன் வாழவே வாய்ப்புக் கொடுத்தேன். ஆனால் அந்த வாழ்க்கையைத் தக்க வைத்துக்கொள்ள அவனுக்குத் தெரியவில்லை.

கோர்ட்டில் கூட நான் கொண்டு வந்த அத்தனை சீர் வரிசையையும் கொடுத்து விட்டுப்போ, இதெல்லாம் எனக்கு உபயோகமாக இருக்கும் என்று லிஸ்ட் போட்டுக்கொடுத்தான். உயிருள்ள ஜீவனை உணராமல் உயிரில்லாதப் பொருட்களைத் தேடிய அவனிடம் அத்தனையையும் பிடுங்கி, அவன் கண் முன்னாலேயே அனாதை இல்லத்துக்கு எழுதிக் கொடுத்து விட்டு வந்தேன் என்று சொன்னாள். அவள் தன் வாழ்க்கையில் நடந்த அத்தனைக் கஷ்டங்களையும் காமெடிக் கதைகளைப் போல சொன்னாள். நான் ஒன்றும் சொல்ல்வில்லை..அவளை அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தேன். எனக்கு மிகவும் நெருக்கமான இன்னொரு தோழி இவள்.


மூன்றாவது கதை

திருமணமாகி 9 வருடங்கள் முடிந்து, இரண்டு குழந்தைக்கும் தாயாகி விட்டாள். ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் வந்த ஒரு 8 வயது ஆண் பிள்ளைக்குத் தாயான விவகாரத்தான பெண் என் கணவனையும் அவளுடன் சேர்த்துக் கொண்டாள் . அவளும் என் கணவருடன் தான் வேலை செய்கிறாள் என்று சொன்னாள் என் தோழி. இன்று என் கணவர் அவளை விட்டு வர முடியாமல் இருக்கிறார். நம் குழந்தைகளுக்காக வாருங்கள் என்று கூப்பிட்டாலும் முடியவில்லை. என்னை விட்டு விலகிப் போனதற்கு அவர் சொல்லும் காரணம், என் அம்மாவைப் பார்த்துக் கொள்ளவில்லை.. என்னையும் நீ சரியாக கவனிக்கவில்லை.. அவள் என்னை அன்பாக பார்த்துக் கொள்கிறாள்..நம் குழந்தைகளைப் பிரிவது எனக்கு கஷ்டம் தான். ஆனால் அந்தக் கஷ்டத்தைத் தாங்கிக் கொள்வேன் என்று சொன்னதாகச் சொன்னாள் என் தோழி. இன்று இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறாள்.






இந்த மூன்று திருமணங்களும் பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் தான். மூன்று பெண்களும் பெற்றோர்கள் சரியாக விசாரிக்கவில்லை என்று சொன்னார்கள். பெற்றவர்கள், "பார்க்கும்போது அவன் நல்லவனாகத்தான் தெரிந்தான். ஆனால் அவன் மனதுக்குள் எப்படி இருக்கிறான் என்று எங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றார்கள்.

அவர்கள் சொல்வது ஓரளவிற்கு உண்மைதான் என்றாலும் தங்கள் பிள்ளைகளுக்கு முதல் திருமணமாக அல்லாமல், அந்த திருமணம் முடிந்தோ, முறிந்தோ போனபின் நடக்கும் மறுமணமாக இருந்தால் ரொம்பவும் கவனமுடன் இருக்கிறார்கள். பார்த்து பார்த்து நாலாப்பக்கமும் விசாரிக்கிறார்கள். தாங்கள் பார்க்கும் பெண்ணோ/பையனோ ஜாதி, மத பேதமில்லாமல், பணத்திற்கு ஆசைப்படாமல், தங்கள் பிள்ளைகளை நன்றாக பார்த்துக் கொள்வார்களா? என்றெல்லாம் துருவித் துருவி விசாரித்து விட்டுத்தான் செய்கிறார்கள். இரண்டாவது திருமண பந்தத்தில் காட்டும் அக்கறை ஏன் முதல் திருமணத்தில் இருப்பதில்லை என்பதுதான் பெற்றவர்களிடம் நான் வைக்கும் கேள்வி.

குடும்பத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் மனதை அழுத்தத்தான் செய்கிறது. நல்லப் பெண்களை ஆண்களுக்கு புரிந்து கொள்ளத் தெரியவில்லை, அன்பான ஆண்களை பெண்களால் அனுசரித்துப் போக முடியவில்லை.

அம்மாவிடம் உள்ள குறைகளைப் பொறுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு மனைவியின் சின்னச் சின்னக் குறைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்பாவிடம் உள்ள குறைகளைப் பார்க்காமல் அவரை அன்பான அப்பாவாக ஏற்றுக் கொள்ளும் பெண்களுக்கு தன் கணவருடைய குறைகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள், எத்தனைக் குழப்பங்கள், எத்தனை விதமான கோபங்கள், அந்த அடக்க முடியாதக் கோபத்தினால் வரும் வார்த்தைகள்.. அந்த வார்த்தைகள் மனதை ரணமாக்கி கிழிக்கும் போது மனது மரத்துப்போய் தற்கொலை வரை போய்விடுகிறது. இதில் பெரும்பாலும் சிக்கித் திணறுவது பெண்கள்.


ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஆண்களும், பெண்களும் வேறுபட்டுத் தெரிகிறார்கள். அது எத்தனைக் கோபக்கார மனைவியாக இருந்தாலும் கணவனுக்கு ஒரு சிறு தலைவலி, காய்ச்சல் என்று வந்தால் அவர்கள் அந்தக் கோபத்தை மறந்து அவரை தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் எத்தனை மென்மையான ஆணாக இருந்தாலும் மனைவி மேல் உள்ள ஒரு சிறியக் கோபத்தால் அவள் விழுந்தே கிடந்தால் கூட என்ன என்று கேட்காமல் இருக்கிறார்கள். அதற்காக எல்லா ஆண்களும் கொடுமைக்காரர்கள் என்று சொல்லவில்லை. அன்பான கணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் கோபம் வந்தால் கொஞ்சமாகவேனும் விட்டுக்கொடுத்துப் போக ஈகோ தடுக்கிறதே... ஏன்?

நம்மைப் போலவே அவனுக்கும் அல்லது அவளுக்கும் உடம்பும், மனதும் வலிக்கும் என்று ஆறறிவுள்ள மனித மனம் நினைத்துப் பார்த்தால் எத்தனைப் பிரச்சினைகளை இல்லாமல் செய்யலாம். அதிலும் குடும்பத்தில் உள்ளவர்கள் கடுமையான வார்த்தைகளை, அதாவது 'செத்துத் தொலை' என்பது போன்ற மனதைப் புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசாமல் இருந்தாலே போதும்.


மூன்று பெண்களின் கதையால் மனதில் ஏறிய பாரத்தை இறக்கி வைக்கத்தான் இந்தப் பதிவு.

இந்தப் பதிவைப் படிக்கும் ஆண்களும், பெண்களும் ஒரு நிமிடமாவது வீட்டிலுள்ள நல்ல மனங்களை நினைத்துப் பார்த்தால் அதுவே போதும்.








Thursday, 23 September 2010

ச்சும்மா!!

அடுத்தக் குழந்தை எப்போ என்று அனைவரும் கேட்பதாகச் சொன்ன என் அருமை கணவனே!

இன்னுமா உனக்குப் புரியவில்லை?
நம் பிள்ளையோடு உன்னையும் சேர்த்து வளர்க்கிறேன் என்று

Wednesday, 22 September 2010

சைக்கிள்!

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அவன் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். தினமும் ஒருமணி நேரம் சைக்கிள் ஓட்டிப் பழகிப் பார்க்கும்போது அவன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பான்.


சைக்கிளை அரைகுறையாக ஓட்டும்போதெல்லாம் தட்டுத்தடுமாறி விழுந்துகொண்டே இருந்தேன். நான் விழுவதைப் பார்த்த அவன் கிண்டலாகச் சிரித்தான். சே...திமிர்பிடித்தவன்! மனதில் நினைத்துக்கொண்டு அதற்கு மேல் சைக்கிளை ஓட்ட விருப்பமில்லாமல் போய்விடுவேன்.

ஸ்கூல் பஸ்ஸைப் பிடிக்க ஓடிவரும் போதும் இரண்டு முறை தொப்பென்று விழுந்திருக்கிறேன், அதுவும் அவன் முன்னாலேயே. "சைக்கிள் தான் வீக்-ன்னு நெனைச்சா காலுமா வீக்" நண்பர்களிடம் கேட்டுக்கொண்டு சிரித்தான். எல்லாம் நேரம்! எப்பப் பார்த்தாலும் இவன் முன்னாலேயே விழுந்து தொலைக்கிறோமே.. திமிர்பிடித்தவன் எப்படி சிரிக்கிறான்? நினைக்கும்போது எரிச்சலாக இருந்தது.

ஒருநாள் ஸ்கூல் லீவில் இருக்கும்போது ப்ரெண்ட் வீட்டுக்குப் போவதற்காக அரைகுறையாக ஓட்டத்தெரிந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். ஓட்டும்போது சைக்கிள் நேராகப்போகாமல் கொஞ்சம் கோணலாகப்போனது. எதிலாவது இடித்துவிடுவேனோ என்று நினைக்கும் நேரத்தில் சைக்கிளை விட்டு இறங்கி விடுவேன். அப்படியே கொஞ்ச தூரம் சைக்கிளைப் பிடித்து உருட்டிக்கொண்டே போவேன். அப்புறம் அதில் ஏறி உட்கார்ந்தால் கொஞ்சம் சுமாராக, நேராக ஓட்ட முடிந்தது.

அப்பாடா! ஒருவழியாக ஓட்ட முடிந்ததே.. இனி கொஞ்சம் நிம்மதியாக, மெதுவாகப் போகலாம்....

சைக்கிளில் மெதுவாகப் போய்க்கொண்டிருக்கும்போது, எதிரில் சைக்கிளில் ...யாரது? ஆ.. அவனேதான்! அந்தத் திமிர்பிடித்தவன் இங்கேயும் வந்துவிட்டானா? இப்போது நேராகப் போய்க்கொண்டிருந்த சைக்கிள் கொஞ்சம் அலம்பல் செய்தது. கவனமாக ஓட்ட வேண்டும். இவன் முன்னால் விழுந்து விடக்கூடாது..நினைத்துக் கொண்டிருக்கும்போதே என் சைக்கிள் மேல் மோதியே விட்டான். சைக்கிளோடு விழுந்தேன். பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தார்கள். அதில் ஒரு அம்மா என்னைத் தூக்கிவிட்டு, "பாப்பா, பாத்துப்போம்மா..." என்றார். உடனே அந்தம்மாவின் அருகில் இருந்தப் பெரியவர், "ஏம்ப்பா.. பொம்பளப்புள்ள அப்படி இப்படி வந்தாலும் நீ பார்த்துப் போகமாட்டியா? என்னப் புள்ள நீ" என்று அவனைப் பார்த்துக்கேட்டார்.

கையைக் காலை உதறிக்கொண்டு மறுபடியும் சைக்கிளில் ஏறும்போது, "ஏய்.. நில்லு.. உங்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று சொன்னான் அவன். நான் அவன் பேச்சைக் காதில் வாங்கவேயில்லை. பெரிய இவன்! தள்ளிவிட்டுட்டு பேசணுமாம்... ஒருமுறை முறைத்துவிட்டு சைக்கிளில் கொஞ்சமாக வேகத்தைக் கூட்டி ஓட்ட ஆரம்பித்தேன்.

சைக்கிள் ஓட்டும்போதெல்லாம் எப்படித்தான் மோப்பம் பிடித்து வந்துவிடுகிறானோ. ஒருவழியாத் தொலைஞ்சான். என்று மனதில் நினைத்துக்கொண்டு சைக்கிளை நிறுத்தி திரும்பிப் பார்த்தேன். அவன் என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான். அவ்வளவுதான்! சைக்கிளை நன்றாக அழுத்தி, வேகமாக ஓட்டினேன். அவ்னும் வேகமாக வந்தான். விடுவேனா? என்ன ஆனாலும் சரி! இப்போதைக்கு சைக்கிளை விட்டு இறங்கக்கூடாது, ஒருமுடிவுடன் வேகமாக ஓட்ட ஆரம்பித்தேன். சைக்கிளை இப்போது லாவகமாகப் பிடித்து பேலன்ஸ் செய்ய முடிந்தது.

ஓட்டினேன்...ஓட்டினேன்... வேகமாக ஓட்டிக் கொண்டேயிருந்தேன். குவார்ட்டஸ் என்பதால் ஒவ்வொரு ப்ளாக்குக்கு உள்ளேயும் நுழைஞ்சு, நுழைஞ்சு ஓட்டிக்கிட்டே இருந்தேன். எந்தப்பக்கம் போனாலும் அவனும் பின்னாலேயே வந்துக்கிட்டிருந்தான். விடமாட்டான் போலிருக்கே.. சைக்கிளை ரொம்பவும் வேகமாக ஓட்டி சந்து, பொந்துக்குள் எல்லாம் நுழைஞ்சு ஒருவழியா என் ப்ரெண்ட் வீட்டுக்குள்ள நுழைஞ்சுட்டேன். அவள் வீட்டில் ரொம்ப நேரம் இருந்துவிட்டுத்தான் திரும்பினேன்.

திரும்பி வரும்போது, சைக்கிளை ரொம்பவும் அழகாக, வேகமாக ஓட்ட முடிந்தது. நம்மால் இவ்வளவு வேகமாக சைக்கிள் ஓட்டமுடிகிறதே என்று முதன்முதலாக மனதில் இனம்புரியாத சந்தோஷம்!



அடுத்தடுத்த நாட்களில் நான் விழாமல் சைக்கிள் ஓட்டியதை அவனும் ஆச்சரியத்துடன் பார்த்தான்.

இப்படித்தான் ஓட்டக் கற்றுக்கொண்டேன் சைக்கிளை.