Tuesday 27 July, 2010

குழந்தை கற்றுத் தந்த பாடம்

கோபம்! சில மாதங்களுக்கு முன்பு வரை, நன்கு பழகியவர்களுடன் உரிமையுடன் கத்தியும், அதிகம் பழகாதவர்களுடன் மிக அமைதியாகவும் கோபத்தை வெளிப்படுத்தும் இயல்புடன் இருந்தவள் நான். ஆனால் அந்தக் கோபம் கூட சிறுபிள்ளைத்தனமானது என்று உணர வைத்தவள் என் குழந்தை.

ஏதாவது ஒரு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு அதில் இருக்கும் கதையை சொல்லித் தா என்று நச்செரித்துக்கொண்டே இருப்பாள். ஒருநாள் உடல் வலியும், தீராத தலைவலியும் சேர்ந்து என்னை பாடாய்படுத்த, அவள் செய்யும் சேட்டைகளை தாங்க முடியாமல் நன்றாக திட்டி முதுகில் ரெண்டு போடு போட்டேன். கொஞ்ச நேரம் அழுது கொண்டே இருந்தவள், சிறிது நேரம் கழித்து கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு என்னிடம் வந்தாள். "அம்மா, இந்த கதையை சொல்லித் தாம்மா" என்று கேட்டாள்.

தலைவலி மண்டையைப் பிளக்க, "எப்ப பாத்தாலும் கதை, கதைன்னு பாடாய்ப்படுத்துவ. பேசாம போ" என்றேன் கோபமாக. "அம்மா, ப்ளீஸ்மா... சொல்லித் தாம்மா" என்று கெஞ்சினாள். எரிச்சலுடன் "சரி வா" என்று அவள் கொடுத்த கதையை படிக்க ஆரம்பித்தேன்.

அந்தக் குழந்தையின் பெயர் வர்ஷா. அவளுக்கு தாய் இல்லை. அப்பாவிடம் வளர்ந்தாள். தாயில்லாததால் வர்ஷாவை மிகவும் கண்டிப்புடன் வளர்த்தார் அப்பா. ஒருநாள் வர்ஷா தனது பாடப்புத்தகத்தில் இருந்து ஒரு பேப்பரைக் கிழித்து, பென்சில் பாக்ஸில் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தவர், "பேப்பரைக் கிழிப்பியா...?" என்று கோபத்துடன் திட்டி புத்தகத்தை பிடுங்கி வைத்தார். சிறிது நேரத்தில் அப்பாவிடம் வந்த வர்ஷா, கண்களில் பயத்தோடு கலர் பேப்பர் ஒட்டப்பட்ட ஒரு பரிசுப் பொருளை தன் அப்பாவிடம் கொடுத்து, " ஹாப்பி ப்ர்த் டே டாடி" என்றாள். "தாங்க்யூ" என்று சொல்லியபடியே பரிசைப் பிரிக்க, அதற்குள் ஒரு காலியான பென்சில் பாக்ஸ்!

அவருக்கு வர்ஷாவின் இந்த ஏமாற்றும் விளையாட்டு பிடிக்கவில்லை. "யாரையும் ஏமாற்றி இப்படி விளையாடக்கூடாதுன்னு உனக்குத் தெரியாதா? வீட்ல இருக்கிற பழக்கம்தான் வெளியிலேயும் வரும்" என்று அவர் மீண்டும் கோபத்தில் வெடிக்க, அப்பாவின் இந்த ரியாக்க்ஷனை எதிர்பாராத வர்ஷாவின் கண்களில் மளமளவென நீர் வழிய... "அது காலி பாக்ஸ் இல்லை டாடி. அதுல உங்களுக்கு நான் 100 கிஸ்ஸஸ் வச்சிருக்கேன்! நல்லாப் பாருங்க!" என்று வர்ஷா அழுது கொண்டே சொன்ன போது, அவள் அப்பாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. தன் தவறை உணர்ந்தவர் தரையில் மண்டியிட்டு, "ஸாரிடா" என்றார்.


கதையைப் படித்து விட்டு நிமிர்ந்து பார்த்தேன் என் குழந்தையை. "என்னம்மா, எவ்வளவு நேரமா கதையைப் படிச்சிக்கிட்டே இருப்ப... சீக்கிரம் சொல்லித் தாம்மா.. சொல்லித் தர்ரியா?" என்று கேட்டாள் வெகுளித்தனமாக. என் குழந்தையின் பிஞ்சுக் கால்களில் முத்தமிட்டேன்.
"என்னம்மா... என் கால் உனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கா... முத்தம் கொடுக்கிற!" புரியாமல் கேட்டாள் குழந்தை.
"ஸாரிம்மா... செல்லம்.."
"சே....ரி....ம்மா.... அம்மா எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.." என்று என்னைக் கட்டிக் கொண்டு கொஞ்சினாள்.

இப்போது யார் மீது கோபம் வந்தாலும் இந்தக் கதையைப் படிக்கக் கொடுத்த என் குழந்தை முகம்தான் நினைவுக்கு வரும். அப்போது அந்தக் கோபத்தையும் எதிர்கொள்ள பழகிக்கொண்டேன் ஒரு சின்ன புன்னகையுடன்.