Wednesday 27 October, 2010

தனிமையில் இளையராஜா

இந்த உலகத்திலேயே நீ வெறுக்கும் முதல் விஷயம் எது என்று யாராவது என்னிடம் கேட்டால் உடனே என்னிடமிருந்து வரும் வார்த்தை தனிமை என்பது தான்.

நான் அறிந்தவரை, தனிமை பலருக்கும் பிடித்தமான விஷயமாகத்தான் இருக்கிறது. தனிமையில் இருக்கும் போது தான் எனக்கு கவிதை எழுத வருகிறது, நிதானமாக யோசிக்க முடிகிறது என்றெல்லாம் பலபேர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்கும் போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.



நான் தனிமையில் இருக்கும் போது என்றைக்கோ பார்த்த திகில் படங்களும், ஏதோ ஒரு நாளில் யாரிடமோ போட்ட சண்டையும் தான் நினைவுக்கு வரும். கூடவே வாழ்க்கையில் ஏற்படும் சலிப்புகளும் அதனால் ஏற்பட்ட சங்கடங்களும் கூட மனதைப்போட்டு அழுத்தும். என்னைப் பொறுத்தவரை, தனிமை மனதில் பாரத்தை மட்டும் தான்  கொடுக்கிறது,


நான் கொடுமையாக நினைக்கும் அந்தத் தனிமையில் கூட எனக்கு கேட்கப் பிடிக்கும் ஒரே விஷயம் இசை மட்டும் தான். அதுவும் இளையராஜாவின் பாடல்கள் என்றால் மனதில் ஏற்படும் ஒருவிதமான சுகம் இருக்கிறதே. ஆஹா! அதை வார்த்தையால் சொல்லவே முடியாது. அவருடைய பாடல்களைக் கேட்டுக்கொண்டே வேலை செய்யும் போது எந்த வேலையும் எனக்கு கஷ்டமாகத் தெரிந்ததில்லை. சொல்லப்போனால் மிகவும் சீக்கிரமாகவே அந்த வேலையை முடித்துவிட முடியும்.


அந்த இசையே 'டொம் டொம்' என்ற சத்தத்துடன் (இப்போது வரும் குத்துப்பாடல்கள் போல்) இருந்தால் தனிமையில் அந்த இசையேப் பெரும் தலைவலிதான்.

பள்ளிப்பாடங்களைப் படிக்கும்போது கூட, அனைவரும் தனியாக உட்கார்ந்து படித்தால் தான் மண்டையில் ஏறும் என்றெல்லாம் சொன்னதுண்டு. ஆனால் என்னால் அப்படி படிக்கப் பிடித்ததே இல்லை. தனியாக உட்கார்ந்து புத்தகத்தை விரித்தாலே என்னுடைய சிந்தனை வேறு பக்கம் போய்விடும். அப்போது இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டேப் படித்தால் தான் அந்தப் பாடம் என் மண்டையில் சீக்கிரம் ஏறும்.

அப்படிப் பாடல்களைக் கேட்டுக்கொண்டேப் படிக்கும்போது நான் தனிமையில் இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லை. செய்யும் வேலையும் கஷ்டமாகத் தெரிந்ததில்லை. தூங்கும் போது கூட இரவு பத்து மணிக்கு மேல் ஃஎப்.ஃஎம்மில் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருப்பேன். அப்போது அன்றாடம் மனதில் ஏற்படும் வலி கூட இல்லாமல் போகிறது. அவருடைய மெலடிகளால் மனதில் ஒரு துள்ளல்.


எப்போது டாம் அண்ட் ஜெர்ரி போல் முட்டிக்கொண்டிருக்கும் நானும், என் கணவரும் ஒத்துப்போகும் ஒரே விஷயம் இளையராஜாவின் பாடல்களைக் கேட்பதில் மட்டும்தான். எங்கள் இருவருக்கும் சண்டை முத்திப்போனால் அப்போது உடனே எங்கள் இருவருக்கும் பிடிக்கும் இளையராஜாவின் பாடல்களைப் போட்டுவிடுவேன். உடனே இருவரும் சண்டையை மறந்து அந்தப் பாடல்களைக் கேட்பதில் மும்முரமாகிவிடுவோம்.

என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இளையராஜாவின் மெட்டுக்கள் மருந்தாகவே அமைந்திருக்கிறது.

இப்போது வரும் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சீக்கிரமே சலிப்பையும் தந்து விடுகிறது, சில நேரங்களில் சில பாடல்கள் தலைவலியையும் சேர்த்துக் கொடுத்துவிடுகிறது. மனதில் நிற்கும் பாடல்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.


தனிமையிலே இனிமை காண முடியுமா? என்று கேட்டால் என்னுடையத் தனிமையில் இளையராஜாவின் பாடல்களால் மட்டுமே இனிமையைக் காண முடியும்.