Tuesday 12 October, 2010

மூன்று பெண்கள்; மூன்று வேறு கதைகள்

முதல் கதை


இவளுக்கு திருமணமாகி எட்டு வருடங்களாக குழந்தை இல்லாதக் காரணத்தால் குடும்பத்தில் பிரச்சினை. யாரிடம் என்ன குறை? அதை தீர்ப்பதற்கு என்ன வழி என்ற சிந்தனையெல்லாம் இல்லை. அதனால் பிரச்சினை முத்திப்போனதில் அவள் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாள். தற்கொலை செய்யும் அளவுக்கு மனதைக் காயப்படுத்திய வார்த்தைகள் என்ன என்பது எங்கள் யாருக்கும் இன்னும் விடை தெரியாத கேள்வி? இத்தனைக்கும் அவள் மிகவும் பொறுமைசாலி. எங்களுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்து, ஒரே ரூமில் கிண்டல் பேசி, விளையாடி, சிரித்து மகிழ்ந்த எங்கள் தோழி இன்று உயிருடன் இல்லை. எங்கள் நட்பு வட்டத்தில் முதலில் திருமணம் செய்தவளும் இவள்தான். குடும்பத்தில் அவளுக்கு நிறைய மனக்கசப்புகள் இருந்ததாக மற்றத் தோழிகள் சொன்னார்கள். அவள் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல.. அவள் கணவனே அவளைக் கொலை செய்திருப்பான் என்று அனைவரும் சொன்னார்கள். என்னால் அப்படி யூகிக்க முடியவில்லை. இழப்பு இரண்டு பக்கமும்தான். மனம் விட்டு பேச முடியாமல் இருந்தாளா? பேசியும் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க வழி தெரியாமல் மனதிற்குள்ளேயே குழம்பிக் கொண்டிருந்தாளா? தெரியவில்லை. ஆனால் கல்லூரி படிக்கும் வயதில் எத்தனையோ கனவுகளுடன் சிரித்து விளையாடிய தோழி இன்று இல்லையே...


இரண்டாவது கதை

ஆயிரம் கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் திருமணம் செய்து கொண்டவள் திருமணமாகிய மூன்றே மாதத்தில் வரதட்சணை என்ற பெயரில் கஷ்டத்தை அனுபவித்தாள். அதுவும் மாமனார், மாமியாரால் அல்ல.. தன் கணவனாலேயே அந்தக் கஷ்டத்தை அனுபவித்த போது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

தன் மனைவியின் அண்ணங்கள் இருவருக்கும் சொந்த வீடு இருந்ததைப்போல, தனக்கும் ஒரு வீடு கொடுப்பார்கள் என்று கனவுக்கோட்டை கட்டிக்கொண்டு வந்த மாப்பிள்ளை அது இல்லாமல் போகவே அவளை கொஞ்சம், கொஞ்சமாக டார்ச்சர் செய்ய, தாங்க முடியாமல் திருமணமாகிய ஒன்பதே மாதத்தில் விவகாரத்தாகி விட்ட்து. அத்தனைக் கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டுதான் இருந்தேன். அவனுடன் வாழத்தான் ஆசைப்பட்டேன். அவன் கொடுத்தக் கஷ்டத்தைத் தாங்க முடியாமல் அம்மா வீட்டுக்கு ஓடிப்போய் ஏதாவது வாங்கி வருவேன் என்று நினைத்திருந்தான். ஆனால் நான் அதையெல்லாம் வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவனுக்கு பேலன்ஸாக இருந்ததால் அவனால் பொறுக்க முடியவில்லை. கடைசி வரை என்னுடன் வாழவே வாய்ப்புக் கொடுத்தேன். ஆனால் அந்த வாழ்க்கையைத் தக்க வைத்துக்கொள்ள அவனுக்குத் தெரியவில்லை.

கோர்ட்டில் கூட நான் கொண்டு வந்த அத்தனை சீர் வரிசையையும் கொடுத்து விட்டுப்போ, இதெல்லாம் எனக்கு உபயோகமாக இருக்கும் என்று லிஸ்ட் போட்டுக்கொடுத்தான். உயிருள்ள ஜீவனை உணராமல் உயிரில்லாதப் பொருட்களைத் தேடிய அவனிடம் அத்தனையையும் பிடுங்கி, அவன் கண் முன்னாலேயே அனாதை இல்லத்துக்கு எழுதிக் கொடுத்து விட்டு வந்தேன் என்று சொன்னாள். அவள் தன் வாழ்க்கையில் நடந்த அத்தனைக் கஷ்டங்களையும் காமெடிக் கதைகளைப் போல சொன்னாள். நான் ஒன்றும் சொல்ல்வில்லை..அவளை அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தேன். எனக்கு மிகவும் நெருக்கமான இன்னொரு தோழி இவள்.


மூன்றாவது கதை

திருமணமாகி 9 வருடங்கள் முடிந்து, இரண்டு குழந்தைக்கும் தாயாகி விட்டாள். ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் வந்த ஒரு 8 வயது ஆண் பிள்ளைக்குத் தாயான விவகாரத்தான பெண் என் கணவனையும் அவளுடன் சேர்த்துக் கொண்டாள் . அவளும் என் கணவருடன் தான் வேலை செய்கிறாள் என்று சொன்னாள் என் தோழி. இன்று என் கணவர் அவளை விட்டு வர முடியாமல் இருக்கிறார். நம் குழந்தைகளுக்காக வாருங்கள் என்று கூப்பிட்டாலும் முடியவில்லை. என்னை விட்டு விலகிப் போனதற்கு அவர் சொல்லும் காரணம், என் அம்மாவைப் பார்த்துக் கொள்ளவில்லை.. என்னையும் நீ சரியாக கவனிக்கவில்லை.. அவள் என்னை அன்பாக பார்த்துக் கொள்கிறாள்..நம் குழந்தைகளைப் பிரிவது எனக்கு கஷ்டம் தான். ஆனால் அந்தக் கஷ்டத்தைத் தாங்கிக் கொள்வேன் என்று சொன்னதாகச் சொன்னாள் என் தோழி. இன்று இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறாள்.






இந்த மூன்று திருமணங்களும் பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் தான். மூன்று பெண்களும் பெற்றோர்கள் சரியாக விசாரிக்கவில்லை என்று சொன்னார்கள். பெற்றவர்கள், "பார்க்கும்போது அவன் நல்லவனாகத்தான் தெரிந்தான். ஆனால் அவன் மனதுக்குள் எப்படி இருக்கிறான் என்று எங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றார்கள்.

அவர்கள் சொல்வது ஓரளவிற்கு உண்மைதான் என்றாலும் தங்கள் பிள்ளைகளுக்கு முதல் திருமணமாக அல்லாமல், அந்த திருமணம் முடிந்தோ, முறிந்தோ போனபின் நடக்கும் மறுமணமாக இருந்தால் ரொம்பவும் கவனமுடன் இருக்கிறார்கள். பார்த்து பார்த்து நாலாப்பக்கமும் விசாரிக்கிறார்கள். தாங்கள் பார்க்கும் பெண்ணோ/பையனோ ஜாதி, மத பேதமில்லாமல், பணத்திற்கு ஆசைப்படாமல், தங்கள் பிள்ளைகளை நன்றாக பார்த்துக் கொள்வார்களா? என்றெல்லாம் துருவித் துருவி விசாரித்து விட்டுத்தான் செய்கிறார்கள். இரண்டாவது திருமண பந்தத்தில் காட்டும் அக்கறை ஏன் முதல் திருமணத்தில் இருப்பதில்லை என்பதுதான் பெற்றவர்களிடம் நான் வைக்கும் கேள்வி.

குடும்பத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் மனதை அழுத்தத்தான் செய்கிறது. நல்லப் பெண்களை ஆண்களுக்கு புரிந்து கொள்ளத் தெரியவில்லை, அன்பான ஆண்களை பெண்களால் அனுசரித்துப் போக முடியவில்லை.

அம்மாவிடம் உள்ள குறைகளைப் பொறுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு மனைவியின் சின்னச் சின்னக் குறைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்பாவிடம் உள்ள குறைகளைப் பார்க்காமல் அவரை அன்பான அப்பாவாக ஏற்றுக் கொள்ளும் பெண்களுக்கு தன் கணவருடைய குறைகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள், எத்தனைக் குழப்பங்கள், எத்தனை விதமான கோபங்கள், அந்த அடக்க முடியாதக் கோபத்தினால் வரும் வார்த்தைகள்.. அந்த வார்த்தைகள் மனதை ரணமாக்கி கிழிக்கும் போது மனது மரத்துப்போய் தற்கொலை வரை போய்விடுகிறது. இதில் பெரும்பாலும் சிக்கித் திணறுவது பெண்கள்.


ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஆண்களும், பெண்களும் வேறுபட்டுத் தெரிகிறார்கள். அது எத்தனைக் கோபக்கார மனைவியாக இருந்தாலும் கணவனுக்கு ஒரு சிறு தலைவலி, காய்ச்சல் என்று வந்தால் அவர்கள் அந்தக் கோபத்தை மறந்து அவரை தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் எத்தனை மென்மையான ஆணாக இருந்தாலும் மனைவி மேல் உள்ள ஒரு சிறியக் கோபத்தால் அவள் விழுந்தே கிடந்தால் கூட என்ன என்று கேட்காமல் இருக்கிறார்கள். அதற்காக எல்லா ஆண்களும் கொடுமைக்காரர்கள் என்று சொல்லவில்லை. அன்பான கணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் கோபம் வந்தால் கொஞ்சமாகவேனும் விட்டுக்கொடுத்துப் போக ஈகோ தடுக்கிறதே... ஏன்?

நம்மைப் போலவே அவனுக்கும் அல்லது அவளுக்கும் உடம்பும், மனதும் வலிக்கும் என்று ஆறறிவுள்ள மனித மனம் நினைத்துப் பார்த்தால் எத்தனைப் பிரச்சினைகளை இல்லாமல் செய்யலாம். அதிலும் குடும்பத்தில் உள்ளவர்கள் கடுமையான வார்த்தைகளை, அதாவது 'செத்துத் தொலை' என்பது போன்ற மனதைப் புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசாமல் இருந்தாலே போதும்.


மூன்று பெண்களின் கதையால் மனதில் ஏறிய பாரத்தை இறக்கி வைக்கத்தான் இந்தப் பதிவு.

இந்தப் பதிவைப் படிக்கும் ஆண்களும், பெண்களும் ஒரு நிமிடமாவது வீட்டிலுள்ள நல்ல மனங்களை நினைத்துப் பார்த்தால் அதுவே போதும்.