Thursday, 19 August, 2010

டீன்-ஏஜ்

எதிர் வீட்டு முரளியைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு சின்னக் குறுகுறுப்பு, சந்தோஷம், வெட்கம் எல்லாம் வந்தது அவளுக்கு. காலையில் அவன் வீட்டு வாசலில் வண்டியைத் துடைக்கும் அழகைப் பார்ப்பதற்காகவே புத்தகமும், கையுமாக ஜன்னலோரம் உட்கார்ந்து விடுவாள். தினமும் ஒரு தடவையாவது அவனைப் பார்க்காவிட்டால் அவளுக்குத் தூக்கமே வருவதில்லை. அவனும் அவளைப் பார்க்காமல் இல்லை. ஓரக் கண்ணால் அவள் செய்கைகளை ரசித்துக் கொண்டுதான் இருந்தான்.ஒரு வருடமாகவே இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது. இன்று சொல்லலாம், நாளை சொல்லலாம் என்று நினைத்து நினைத்துத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தாள் அவள். சொல்லி விட்டால் இந்த சந்தோஷமும் நிலைக்காதோ? குழப்பமாக இருந்தது.

இந்த வருடம் பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுத வேண்டும். படிப்பில் கவனம் சென்றால்தானே. இப்படி ஒரு அவஸ்தையை அனுபவிப்பதற்கு பேசாமல் நேரில் சொல்லி விடலாம் என்று நினைத்தாள். பாடப் புத்தகத்தைக் கையில் எடுத்தாலே அவன் முகம்தான் ஞாபகம் வருகிறது. படிப்பு மண்டையில் ஏறவே இல்லை. புத்தகத்தை எரிச்சலுடன் மூடி வைத்தாள். மனம் திரும்பத் திரும்ப அவன் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தது. எத்தனை நாள்தான் இந்த சுகமான அவஸ்தையை அனுபவிப்பது? முடிவுகட்டி விட்டாள். நாளைக் கண்டிப்பாக சொல்லியேத் தீர வேண்டும். சொல்லாமலேயே இருந்துவிட்டால் தன் வாழ்க்கைத் தன்னை விட்டுப் போய்விடும். என்ன ஆனாலும் சரி, அதன் பிறகுப் பார்த்துக் கொள்ளலாம். நாளை மனம் திறந்து பேசி விடுவது நல்லது. ஒரு முடிவுடன் உறங்கி விட்டாள்.


மறுநாள் காலை ஜன்னலோரம் எட்டிப் பார்த்துவிட்டு, பேப்பர் படித்துக் கொண்டிருந்த தன் அப்பாவிடம் வந்தாள். "அப்பா, உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்" என்று இழுத்தாள். அவள் அப்பா அவளை நிமிர்ந்துப் பார்த்தார். அவ்வளவுதான்! அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்த அவள் அப்பா, "என்னம்மா, என்ன ஆச்சு?" என்று தலையைக் கோதினார். "அப்பா, என்னால் படிக்கவே முடியவில்லை. புத்தகத்தை எடுத்தாலே எதிர் வீட்டு முரளிதான் மனதில் வருகிறான். அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், அவனிடம் பேச வேண்டும் என்று ஆசையாக உள்ளது. என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. நான் என்ன செய்ய? " ஒரு வழியாக மனதில் உள்ளதைக் கொட்டி விட்டாள் அவள் தந்தையிடம்.


அவள் கையை ஆதரவாகப் பிடித்த அவள் தந்தை, "அவ்வளவுதானே! இதற்காகவா அழுகிறாய்? அவனைப் போய்ப் பார்க்க வேண்டுமா? போய்ப் பார்! அவனிடம் பேச வேண்டுமா? போய்ப் பேசு! உன் வயதில் இதுபோல எண்ணங்கள் வருவது சகஜம்தான். அவனிடம் நட்புடன் பழகு. அவனை நம் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வா. அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தால் அவன் தோற்றம் மட்டும் தான் உன் கண்ணுக்குத் தெரியும். அவனுடன் நட்புடன் பழகிப் பார்த்தால் தான் அவனுடைய குறைகளும் உனக்குத் தெரிய வரும். அப்போது உனக்குள் இருக்கும் அவனைப் பற்றிய கற்பனை பிம்பம் தானாக மறைந்து விடும். புரிகிறதா?" என்று சொன்னார்.

அப்பாவின் வார்த்தைகளைக் கேட்ட அவளுக்கு தெளிவு வந்தது. அப்பாவைப் பார்த்து மலர்ந்து சிரித்தாள். "சீக்கிரம் அவனை எனக்கும் அறிமுகம் செய்து வை. என் மகளின் மனதைத் திருடிய அந்த முதல் ஆண்மகனிடம் பேச எனக்கும் ஆசையாக உள்ளது" தன் மகளைப் பார்த்துக் கிண்டலடித்தார் அப்பா.


என் தோழி ஒருத்தி தான் படிக்கும் வயதில் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட விஷயம் இது. அவள் தன் தந்தையைப் பற்றிப் பெருமையாகக் கூறினாள். "அன்று மட்டும் என் தந்தையிடம் என்னுடய நிலைமையைச் சொல்லாமல் இருந்து, என் தந்தையும் என்னைத் தெளிவுப்ப்டுத்தாமல் இருந்திருந்தால்? நான் அவனைக் கண்மூடித்தனமாகக் காதலித்து, வீட்டை விட்டு ஓடிப்போய், வயிற்றில் புள்ளையோடுதான் வந்திருப்பேன். நல்லவேளை அவனிடம் நட்புடன் பழகிப் பார்த்தவுடன் தான் தெரிந்தது, அவன் என் வாழ்க்கைக்கெல்லாம் ஒத்து வரமாட்டான் என்று. அவனையே நினைத்துக் கொண்டு இருந்திருந்தால் கண்டிப்பாக என் வாழ்க்கையில் நான் கஷ்டப்பட்டிருப்பேன்." என்று சொன்னாள்.


தன் மனதில் ஏற்பட்ட மாற்றங்களை, அவஸ்தையைத் தன் தந்தையிடமே பகிர்ந்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு பெண் யோசிக்கிறாள் என்றால், அவள் தந்தைத் தன் மகளிடம் எந்த அளவுக்கு நண்பராகப் பழகியிருப்பார். இது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகப் பட்டது எனக்கு.

பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாகப் பழகினால் அவர்கள் வழித்தவறிப் போக வாய்ப்பில்லை என்பதை இதன் மூலம் தெரிந்துக் கொண்டேன்.