Friday 7 January, 2011

ஒரு பெண்ணின் பரிதாபக் கதை

அவள் பெயர் ராதா. அழகான அம்மாவுக்கும், செல்லமான அப்பாவுக்கும் பிறந்த மகள். 4 வயதுக் குழந்தையாக இருந்த போது ஒருநாள் அவள் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் அவளுடைய அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சண்டை. வாக்குவாதம் முற்றி, அவளுடைய அம்மா கணவனைப் பயமுறுத்துவதற்காகத் தன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். விஷயம் விபரீதமாக முடிந்து அவரை ஆஸ்பிட்டலில் சேர்த்தனர். இரண்டொரு நாளிலேயே அந்தம்மாவின் கதை முடிந்து விட்டது. ஒன்றும் அறியாத அந்தப் பிஞ்சுக் குழந்தை 'அம்மா, அம்மா' என்று அழுது அழுது ஓய்ந்து போனது.

ராதா கொஞ்சக் காலம் அவளுடைய அப்பாவுடனும், பாட்டி வீட்டிலும் வளர்ந்து வந்தாள். பாட்டி வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருந்த அவளுடைய சித்தி, மாமா, அத்தை போன்ற உறவினர்கள் சின்ன சின்ன எரிச்சலையும், அவ்வப்போது கோபத்தையும் அவள் மேல் காட்டிக் கொண்டிருந்தனர். சில வருடங்களுக்குப் பிறகு அவள் அப்பா வேறு திருமணம் செய்து கொண்டார். அதுவரை அம்மா, அம்மா என்று ஏங்கித்தவித்த ராதா புது அம்மா வரப்போவதை ஆசையாக எதிர்பார்த்தாள்.

புது அம்மா வந்து தன்னை ஆசை, ஆசையாகப் பார்த்துக் கொள்வாள் என்று எதிர்பார்த்திருந்த ராதாவுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. புது அம்மாவின் உத்தரவுப்படி வீட்டில் உள்ள அத்தனை வேலைகளையும் ராதாவே செய்தாள். வீட்டில் ஒரு மூலையில் இடம் கிடைத்த அந்தப் பெண்ணுக்கு, அந்தம்மாவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தவுடன், வீட்டுத் திண்ணை அவளுக்குப் படுக்கை அறையாக மாறியது.

அதுவரை மாற்றாந்தாயின் கொடுமைகளைக் கேள்விக் கேட்கத் திராணியில்லாத ராதாவின் அப்பா அவள் மேல் மேலும் எரிச்சல் பட்டு அவளுடையப் பாட்டி வீட்டுக்குத் துரத்தி விட்டார். பாட்டி வீட்டுக்குப் போனால் அந்த வீட்டிலிருந்த அம்மாவின் உறவினர்கள் அவளைப் பாடாய்படுத்தினார்கள். ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே இரு வீட்டு உறவினர்களும் அவளைக் காசில்லாத வேலைக்காரியாக வைத்திருந்தார்கள்.

இப்படியே எந்தப் பள்ளிக்கூடத்திற்கும் போகாமல் வீட்டு வேலை செய்து, மாற்றாந்தாய்க்குப் பிறந்த தன் தம்பிகளைக் கவனித்துக் கொண்டு அவளது வாழ்க்கை ஓடியது. அப்பாவின் கூடப்பிறந்த அக்கா, தங்கைகள் போன்ற உறவினர்கள் யாராவது அவளைப் பார்க்க வந்தால், "என்னை உங்கள் வீட்டு மருமகளாக்கிக் கொள்கிறீர்களா? நான் நல்லா வேலை செய்வேன் அத்தை. உங்கள் மேல் ரொம்ப அன்பா இருப்பேன். உங்களை நல்லாப் பார்த்துப்பேன்" என்றெல்லாம் கேட்டாள்.

எல்லோருக்கும் அவள் மேல் பரிதாபப்பட்டுக் காசு கொடுத்து விட்டு வரத் தெரிந்ததே தவிர அவளை மருமகளாகிக் கொள்ளும் துணிவில்லை. அவளை அந்த இடத்திலிருந்து தங்கள் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வரவும் தைரியமில்லை. அனைவருக்கும் வேறு வேறு வாழ்க்கை அதில் இவளை வேறு கூடவே வைத்துக்கொண்டு பிரச்சினையாக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.

உண்மையில் ராதா ரொம்பவும் அழகு. யார் வந்தாலும் அன்பாகப் பேசக்கூடியவள். அவள் உடம்பில் மாற்றாந்தாயான சித்தி கொடுத்த தீக்காயங்கள் ஏராளம்.

அன்புக்காக ஏங்கிக் கொண்டிருந்த ராதாவுக்கு அவள் பாட்டி வீட்டில் இருந்த தன் முறை மாமன் ஒருதலையாகக் காதலித்தான். ராதா அவன் காதலை ஏற்றுக்கொள்ள முடியாமல் மௌனமாகவே இருந்தாள். அவளுக்கும் அவனை ரொம்பப் பிடிக்கும். தன் மேல் அன்புக் காட்டக் கிடைத்திருக்கும் முதல் ஜீவன் என்று மனதிற்குள் மகிழ்ந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் "உன்னை என்னால் மறக்க முடியாது, உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்ய மாட்டேன்" என்று உறுதியாக அவளிடம் கூறினான்.

திருமண விஷயத்தில் தன் மனதில் பட்டதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்தாள். அதற்குள் அந்த முறைப்பையன் தனக்கும், அவளுக்கும் கல்யாண ஏற்பாடுகளை செய்யுமாறு வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டான். எவ்வளவோ வேண்டாம் என்றும் சொல்லியும் அவன் கேட்கவே இல்லை. கல்யாண விஷயத்தில் தன் அப்பாவின் தயவை எதிர்பார்த்ததில் அவரும் கைவிரித்து விட்டார்.

கல்யாண ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போதே ராதா ரொம்பவும் பயந்து போனாள். இந்தத் திருமணம் நடந்தால் இதே வீட்டு சூழ்நிலையும், கொடுமைகளும் தன்னை வாழ்நாள் முழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற எண்ணங்கள் மனதில் பாரமாக அழுத்த, இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று முடிவெடுத்து விஷம் சாப்பிட்டுத் தன் கதையை முடித்துக் கொண்டாள் அந்தப் பரிதாபப் பெண். அவள் இறந்த ஒரு வாரத்திலேயே ராதாவைக் காதலித்த முறைப்பையனும் சயனைடு சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.

இரண்டு உயிர்களையும் பலி வாங்கியதில் வீடே நிசப்தமாகிப் போனது. தன் மகள் இறந்த அதிர்ச்சியில் ராதாவின் அப்பா கொஞ்சம், கொஞ்சமாக மனநிலை சரியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டார். கொஞ்ச நாள் வீட்டை விட்டுக் காணாமல் போவதும், கொஞ்ச நாள் கழித்து திரும்ப வருவதுமாக இருந்தார். ஒருநாள் தன் குடும்பத்தை விட்டுக் காணாமல் போய்விட்டார்.

இன்று அவர் பழநியில் ஏதோ ஓர் இடத்தில் மனநிலை சரியில்லாதப் பிச்சைக்காரராக இருப்பதாகக் கேள்வி. தற்போது அவர் உயிருடன் இருப்பாரா என்பது கூட சந்தேகமே.

எத்தனையோக் கனவுகளுடன் சுற்றித் திரிய வேண்டிய ஒரு பெண், குழந்தையாக இருந்த போது தன் அம்மா செய்த முட்டாள்த்தனத்தால் இன்று இல்லாமல் போய்விட்டாள். இது போன்ற முட்டாள்த்தனங்களை செய்யும் ஒவ்வொருவருக்கும் இந்தக் கதை ஒரு பாடமாக இருக்கட்டும்.