Wednesday 18 August, 2010

மெட்டி ஒலி

எப்போது ஊருக்குச் சென்றாலும் வீட்டில் கழட்டி வைத்திருக்கும் மெட்டியை மறக்காமல் காலில் மாட்டிக் கொண்டு போய்விடுவேன். வீட்டில் உள்ளவர்களிடம் வாங்கும் அர்ச்சனைகளைக் கேட்க முடியாமல் தான். இந்த முறை ஊருக்குச் செல்லும் போது அதை மறந்தேப் போய் விட்டேன். எப்போதும் அதைப் போட்டுக் கொள்ள ஞாபகப்படுத்தும் என் கணவர் இந்த முறை வீட்டில் நன்றாக வாங்கட்டும் என்று அவரும் விட்டுவிட்டார் போலும், மறந்தே போனார்.


வீட்டிற்குச் சென்றவுடன் காலில் மெட்டியைக் காணாமல் ஒரே திட்டு. அதைக் கழுவுவதற்காகக் கழட்டி வைத்தேன், மறந்தேப் போய்விட்டேன் என்று சமாளித்துப் பார்த்தேன். ஒன்றும் முடியவில்லை. அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம் என்று அர்ச்சனை மேல் அர்ச்சனையாக விழுந்து கொண்டிருந்தது.

 "நீங்கள் இதற்கெல்லாம் இடம் கொடுக்காதீர்கள் மாப்பிள்ளை" என்று மாப்பிள்ளைக்கு அறிவுரை வேறு. "இதெல்லாம் அவரவர் மனதைப் பொறுத்த விஷயம். அவள் தாலியைக் கழட்டி வைத்தால் கூட நான் ஒன்றும் சொல்லுவதில்லை." நல்லபிள்ளையாக சமயம் பார்த்து உசுப்பேற்றி விட்டார் என் கணவர். நான் அவரைப் பார்த்து முறைத்தேன்.

"தாலியை வேறு கழட்டி வைக்கிறாளா?" என்று மேலும் மேலும் அர்ச்சனைகள் தொடர்ந்துக் கொண்டிருந்தது. பொறுக்க முடியவில்லை. "மெட்டியைக் காலில் மாட்டினால் எனக்கு மிகவும் அலர்ஜியாகிறது" பொய் சொல்லவில்லை, உண்மையைத்தான் சொன்னேன். யாரும் புரிந்து கொள்ளவில்லை. தாலி, நெற்றியில் வைக்கும் குங்குமம், மெட்டி இதெல்லாம் குடும்பப் பெண்களுக்கு முக்கியம் என்கிற ரீதியில் அர்ச்சனைகள் தொடர்ந்துக் கொண்டேயிருந்தது. சிறு வயதில் இருந்தே கழுத்தில் செயின், கையில் வளையல், காதில் கம்மல் எல்லாம் மாட்டிவிட்டு பழக்கியது போல், மெட்டியையும் போட்டுப் பழக்கியிருக்க வேண்டியதுதானே" எதிர்க் கேள்வி கேட்டேன் அப்பாவிடம். உடனே அம்மா, "எப்படியெல்லாம் பேசிப் பழகியிருக்கிறாள். பாருங்கள்" என்று முணுமுணுத்துக் கொண்டே கையில் வைத்திருந்த டம்ளரை 'டொங்க்" என்ற சத்தத்துடன் வைத்தார். காது கிழிந்தது. சே... ஏந்தான் ஊருக்கு வந்தோமோ என்றிருந்தது.

கணவர், "நன்றாக மாட்டிக் கொண்டாயா?" என்று நக்கலாக என்னைப் பார்த்து சிரித்தார். அவருக்கு இதிலெல்லாம் பெரிதாக நம்பிக்கை இல்லைதான். இருந்தாலும் சமயம் பார்த்துக் காலை வாரி விட்டார் பாருங்கள். கடுப்பாகத் தான் இருந்தது. சரி. சமாளித்தாக வேண்டுமே. என்ன செய்ய? "சரிப்பா. அலர்ஜியாகி, புண்ணாகி விட்டதால் போடாமல் விட்டேன். வேறொன்று வாங்கிக் கொடுக்க வேண்டியது தானே. அதற்கு கூட அவர் எனக்கு நேரம் ஒதுக்குவதில்லை. நான் என்ன செய்ய?", கொஞ்சம் கண் கலங்கியவாறு அப்பாவிடம் கேட்டேன். அப்பா கொஞ்சமாகப் பரிதாபப்பட்டார். "மாட்டினீங்களா?" ஜாடையாகக் கேட்டேன் என் கணவரிடம். அப்பா, " மாப்பிள்ளை...." என்று இழுத்துக் கொண்டே கணவரிடம் திரும்பினார். அப்பாடா என்றிருந்தது. மாப்பிள்ளை என்பதால் கட்டாயம் அர்ச்சனைகள் விழப்போவதில்லை. நான் தப்பித்தேனடா சாமி என்று ஓட்டமாக ஓடி விட்டேன். அந்த நாள் மெட்டிச் சத்தத்தால் ஓய்ந்து போனது.

மறுநாள் ஊருக்குத் திரும்பும்போது என் கணவர், "மெட்டி வாங்கித் தர நேரமில்லைன்னு வீட்ல சொன்னேல்ல. ஒரு டஜன் மெட்டி வாங்கித் தர்றேன். இனிமே அதைக் கழட்டினேன்னு வை, அப்புறம் ஊர்ல இருக்கிறவங்களுக்கு ஃபோன் போட ஆரம்பிச்சிடுவேன். புரியுதா?" என்று கொஞ்சம் மிரட்டினார். "என்ன இருந்தாலும் உங்களை விட எங்க வீட்ல உள்ளவங்களுக்கு முற்போக்கு சிந்தனை கொஞ்சம் கம்மிதானே. அவங்கள என்னப் பண்றது?" ஆறுதல் சொன்னேன் அவ்ரிடம். பெருமூச்சு விட்டபடி தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.

எனக்கு தூக்கமே வரவில்லை. உண்மையில் இந்த மாதிரி ஆபரணங்களில் எல்லாம் எனக்குப் பெரிதாக ஆர்வமுமில்லை, நம்பிக்கையுமில்லை. அது அவரவர் மனதைப் பொறுத்த விஷயம். ஆரம்பத்தில் மெட்டியைப் போடவேக் கூடாது என்றெல்லாம் நான் நினைக்கவே இல்லை.

திருமணத்தன்று மெட்டியைக் காலில் மாட்டும் போது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அது கொஞ்சம் லூசாக இருந்ததால் நடக்கும் போதெல்லாம் கழன்று வந்து விடும். மறுநாளே கழட்டி வைத்துவிட்டால் தவறாக நினைப்பார்களோ என்று விரலால் கவ்விக் கொண்டு கொஞ்சம் தத்தித் தத்தி நடந்தேன். மாமியார் வீட்டில் "சேலைக் கட்டிப் பழக்கமே இல்லையா. இப்படி நடக்கிறாய்" என்று சந்தேகத்துடன் கேட்டார்கள். தயக்கத்துடன் விஷயத்தைச் சொன்னேன். "ஓ.. அப்படியா? சரி. சரி.. மாற்றி விடலாம்" என்று வேறொரு மெட்டியை வாங்கி வந்துக் காலில் மாட்டிவிட்டார்கள். அது கொஞ்சம் பரவாயில்லை.

இதுவரை கழுத்தில் செயின், கையில் வளையல், காதில் கம்மல் என்று அனைத்து விதமான ஆபரணங்களும் போட்டுப் பழகியிருந்ததால் அதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால் புதிதாகப் போட்டிருந்த மெட்டி கொஞ்சம், கொஞ்சமாக உறுத்த ஆரம்பித்தது. நடக்கும் போதெல்லாம் கால் விரல்களை இறுக்கிப் பிடித்திருந்ததால் எரிச்சலாக இருந்தது. ஒரு ஆறு மாதக் காலம் அதை மாட்டிக் கொண்டே இருந்தேன். கால் விரல்களில் அரிக்க ஆரம்பித்தது. அதை மேலும் கீழும் அசைக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டுத்தான் அந்த மெட்டியைக் கழட்டினேன். கழட்டி விட்டுப் பார்த்தால் மெட்டிப் போட்டிருந்த விரலில் புண்ணாகிப் போயிருந்தது. அப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் போடாவிட்டால் என்ன. என்று அதைத் திரும்ப மாட்டவே இல்லை.


ஆரம்பக்காலத்தில் மெட்டி என்பது திருமணமான ஆண்களுக்குத்தான் என்றிருந்ததாம். ஒரு பெண் திருமணமானவள் என்று அவளின் தாலியைப் பார்த்து எப்படி அடையாளம் தெரிந்துக் கொள்வார்களோ அதைப் போல ஒரு ஆண் திருமணமானவன் என்பதை அவன் காலில் அணிந்திருக்கும் மெட்டியைப் பார்த்துத் தெரிந்துக் கொள்வார்களாம். (நான் சொல்வது அந்தக் காலத்தில்). ஆனால் காலப்போக்கில் ஆண்கள் இதையும் பெண்கள் தலையிலேயேக் கட்டி விட்டார்கள் என்று படித்திருக்கிறேன். இன்று வரை ஆண்களுக்குத் திருமணமானவன் என்ற அடையாளம் ஒன்று கூட இல்லை. ஆனால் பெண்களுக்கு எல்லாமே கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. அது கொஞ்சம் சலிப்பைத் தந்தாலும் கணவர் மேல் உள்ள அன்பினால் மட்டும்தான் பெண்கள் அதைச் சுமக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி ஒரு பெண் முற்போக்குத்தனமாக சிந்தித்தால் இந்தச் சமுதாயம் அவளைப் பழிப்பது மிகப் பெரிய வேதனை!