Tuesday 7 September, 2010

ஆண், பெண் சுதந்திரம்

சமீபத்தில் 'நான் மகான் அல்ல' படம் பார்த்தேன். அதில் நிறையக் காட்சிகள் பார்ப்பதற்கு கொடூரமாகத் தெரிந்தாலும் அவை அனைத்தும் இன்று நாட்டில் நடக்கக்கூடியதாகத்தான் இருக்கின்றன. படத்தில் வில்லன்களாக வரும் கல்லூரி மாணவர்கள் இதுபோன்ற தவறுகள் செய்யும் ஆண் பிள்ளைகளை அப்படியே தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். நான் அந்தப் படத்தின் விமர்சனங்களுக்குள் செல்லாமல் விஷயத்துக்கு வருகிறேன்.


போதைக்கு அடிமையாகி, பெண்களைக் கற்பழித்து, கொலை செய்யும் அளவிற்கு மாணவர்கள் செல்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு முழுமையானக் காரணம் பெற்றோர்கள் ஆண்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் அளவுக்கு மீறிய சுதந்திரம்தான்.

ஒரு வீட்டில் பெண்பிள்ளையை "இருட்டிய பிறகு ஏன் வெளியே செல்கிறாய்?" என்றுக் கட்டுப்படுத்தும் அதே அம்மாதான் ஆண்பிள்ளையை இரவு முழுவதும் வெளியே நண்பர்களுடன் தங்கிக் கொள்வதற்கும் அனுமதி கொடுக்கிறாள். ஏன் இந்த முரண்பாடு? அதனால் யாருக்கு என்ன பயன்?

ஆண்களைப் போல் பெண்கள் வெளியே சுதந்திரமாகத் திரிய வேண்டும் என்றில்லை. ஆனால் பெண்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகளை ஆண்பிள்ளைகளுக்கும் கொடுத்தால் இந்த சமூகத்திற்கு நல்லது.

நட்பு வட்டம் பெற்றோர்களின் கண்காணிப்பில் இருக்கும் வரைப் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் நண்பர்களுடன் வெளியே தங்குகிறேன் என்று ஒரு ஆண் சொன்னால் அது குடித்து கும்மாளம் போடுவதற்காகத்தானே தவிர வேறு எதற்காகவுமில்லை.

என் கணவர், அண்ணா, மாமா, சித்தப்பா, அப்பா என்று உறவினர்கள் அனைவரிடமும் இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்றுக் கேட்டால் அனைவரும் ஒன்றாக சொன்னது "நண்பர்கள் பழக்கிவிட்டார்கள்" என்பதுதான்.

குடி, போதை என்று அடிமையாகி கிடப்பவர்கள் ஒன்றாகச் சேரும்போது குடிக்காத இன்னும் இரண்டு பேரைக் குடிக்க வைத்துக் கெடுக்கிறார்கள். போதைத் தலைக்கேறினால் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது நினைவிலே இருப்பதுமில்லை. அதிலும் அந்தப் போதையில் ஊறிப்போன அனைவரும் சொல்லும் ஒரு மட்டமான டயலாக் "என்னோட லிமிட் எனக்குத் தெரியும்" என்பது.

இதற்கெல்லாம் காரணம் ஆண்களுக்கு பெற்றோர்கள் கொடுக்கும் அளவுக்கு மீறிய சுதந்திரம். அந்த அளவுக்கு மீறிய சுதந்திரத்தால், தவறான நட்புகளுடன் சேர்ந்து தானும் கெட்டு, இன்னும் நாலு பேரை சேர்த்துக் கெடுக்கிறார்கள், பெண்கள் வாழ்க்கையையும் சீரழிக்கிறார்கள். இதற்கு காரணமாக அம்மா என்னும் இன்னொரு பெண்ணேக் காரணமாக இருப்பது அதைவிட வேதனையிலும் வேதனை.

பெண்கள் தங்கள் நட்பு வட்டத்தில் ஒரு சின்னத் தவறு நடந்தால் கூட பயத்தில் உளறி விடுவார்கள். ஆனால் ஆண்கள் பெரிய தவறே என்றாலும் தன் நண்பனுக்காக என்று அனைத்தையும் மூடி மறைத்து விடுவார்கள். இது ஆரோக்கியமான விஷயமா?

ஆண்பிள்ளைகள் வைத்திருக்கும் இன்றையத் தலைமுறைப் பெற்றோரே! பெண்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் கட்டுப்பாடுகளில் சிலவற்றை ஆண்பிள்ளைகளுக்கும் கொடுத்து அடுத்த தலைமுறையைக் காப்பாற்றுங்கள்!