Friday 17 September, 2010

ஆண்டு விழா அனுபவங்கள் - தொடர் பதிவு

பதிவர் தீபா ஆண்டுவிழா அனுபவங்கள் பற்றியத் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். எழுத வேண்டும் எழுத வேண்டும் என்று நினைத்தே மிகப் பெரிய இடைவெளி விட்டுவிட்டேன். அவரது அழைப்பை ஏற்று என்னுடையப் பள்ளிக்கால நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.




எனக்கு சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது ஆர்வம் அதிகம். டான்ஸ் முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆசைப்பட்டதுண்டு. ஊர், ஊராக மாறிக்கொண்டே இருந்ததால் நடனம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு அமையவேயில்லை.



நான் அப்போது சிவகங்கையில் உள்ள ஒரு பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு மேடைக்கூச்சம் அதிகம் என்பதால் நானாக எந்த டான்ஸிலும் பேர் கொடுத்ததில்லை. அவர்களாகவே ஐந்தாறு பெயர்களை எழுதிக் கொண்டு போய் விடுவார்கள். முதலில் ரெண்டு, மூணு ஸ்டெப் சொல்லிக் கொடுப்பார்கள். ஓரளவிற்கு பிக்கப் செய்பவர்களை மட்டும் எடுத்துக்கொள்வார்கள். நான் சூப்பராக ஆடும் அளவுக்கு பெரிய நடனப்புயல் இல்லை என்றாலும் சொல்லிக் கொடுத்தால் அதைப் புரிந்து கொண்டு ஓரளவிற்கு ஆடி விடுவேன்.



இப்படி சுதந்திர தின விழா, குடியரசு தின விழா மற்றும் எல்லாப் பள்ளிகளுக்கும் நடக்கும் போட்டி என்று ஒவ்வொரு விழாவிற்கும் ஆடும் நடனம் இருக்கிறதே.. ஆஹா! அதை இப்போது நினைத்தாலும் பசுமையான நினைவுகள்தான்.


இந்த சுதந்திர, குடியரசு தின விழாக்களுக்காக கலெக்டர் ஆபீஸில் போய் ஆட வேண்டும் என்பதால் ரிகர்சல் அடிக்கடி நடக்கும். அதனால் க்ளாஸும் அடிக்கடி கட்டாகும். க்ளாஸைக் கட்டடிப்பதற்காகவே ரிகர்சல் என்ற பெயரில் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவோம். ஒரு மணிநேரம் பயிற்சி என்றால் இன்னும் ஒரு மணிநேரம் என்ன காஸ்ட்யூம், மேக்கப் போடலாம் என்ற டிஸ்கஷனிலேயே ஓடிவிடும். அப்படி அனைவரும் பாராட்டிய டான்ஸ் என்று சொன்னால் அது, "மேக வீதியில் நூறு வெண்ணிலா" (வெற்றிக்கரங்கள் என்னும் படத்திலிருந்து) ஒயிட் அண்ட் ஒயிட் ட்ரெஸ்ஸில் சிவப்புக் கலர் ரிப்பன் வைத்து ஆடியதுதான்.



அதற்கு மேல் கரகாட்டம், ஒயிலாட்டம் என்று வேறு வேறு விழாக்களில் ஆடியதுண்டு. ஆண்டு விழாவில் "ஏக்..தோ...தீன்" பாடலுக்கு நாலு பேர் ஆடினோம். இப்படி மறக்க முடியாத வேறு வேறு நடனங்கள் எல்லாம் 5-ஆம் வகுப்பிலிருந்து 8-ஆம் வகுப்பு வரைதான்.

என்னால் மறக்கவே முடியாத டான்ஸ் என்று சொன்னால் நான் 7 வது படிக்கும்போது, முதலும் கடைசியுமாக ஆடிய ஸோலோ டான்ஸ்தான்.



பள்ளியில் நடந்த ஏதோ ஒரு விழாவிற்காக என் வகுப்பு ஆசிரியர், விழாவிற்கு ஒரு நாள்தான் உள்ளது என்ற நிலையில் என்னிடம் ஏதாவது ஒரு டான்ஸ் பண்ணு என்று கண்டிப்பாக கூறிவிட்டார். தனியாக ஆட கூச்சம் என்பதால் தயக்கத்துடன் வேண்டாம் என்று மறுத்துப்பார்த்தேன். முடியவில்லை. "நான் என் க்ளாஸிலிருந்து ப்ரோகிராம் கொடுக்கிறேன் என்று ப்ரின்ஸிபாலிடம் சொல்லியிருக்கேன். அதனால் கண்டிப்பாக ஆடியே தீர வேண்டும்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். என்ன செய்வதென்று புரியாமல் நின்றபோது தோழிகள் பக்திப்பாடலுக்கு ஆடினால் ஈஸியாக இருக்கும் என்று ஐடியா கொடுத்தார்கள். வேறு வழியில்லாமல் என்னால் முடிந்தளவு ப்ராக்டீஸ் செய்துவந்தேன்.



பக்திப்பாடல் என்பதால் பட்டுப்பாவாடை போட்டு, தலையை விரித்துவிட்டு, நெற்றியில் குங்குமப்பொட்டும் வைத்துக்கொண்டு, காலில் பெரியக் கொலுசு, இடுப்பில் ஒட்டியாணம் என்று ஃபுல் கெட்டப்பில் விழாவிற்கு வந்தேன். நன்றாக ஆடுகிறேனா என்பத சரிபார்க்க தோழிகள் முன்னாடி ஆடிக்காட்டினேன். நல்லா இருக்கு, ஆனா ஏதோ ஒண்ணுக் குறையுதுன்னு சொல்லி, பள்ளியில் உள்ள வேப்பமரத்திலிருந்து வேப்பிலைகளைக் கொத்தாகப் பறித்துக்கொண்டு வந்து என் கையில் திணித்தார்கள். வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்தும் அப்போதுதான் இந்தக் கெட்டப்பிற்கு ஃபுல் ஃபார்மில் ஆட முடியும் என்று உசுப்பேற்றி விட்டார்கள். வேறு வழியில்லாமல் "ஆயி...மகமாயி..அவள் தாய்க்கெல்லாம் தாயான தாயி.." என்று கையில் வேப்பிலைகளை வைத்துக்கொண்டு ஆட ஆரம்பித்தேன். தனியாக ஆடவிட்டு விட்டார்களே என்று கொஞ்சம் ஆக்ரோஷமாகத்தான் ஆடிவிட்டேன். தோழிகள் அனைவரும் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.



அவர்கள் சிரித்ததற்கானக் காரணம் ஆடிமுடித்தவுடன் தான் தெரிந்தது. நான் ஆக்ரோஷமாக ஆடியதைப்பார்த்து பக்தி முத்திப்போன ஆசிரியர்கள் சிலர் நான் சாமி வந்துதான் ஆடுகிறேன் என்று நினைத்து கன்னத்தில் போட்டுக்கொண்டார்களாம். இதைக் கேட்டவுடன் என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதிலிருந்து தனியாக ஆடினால் நானாக ஸ்டெப் போட்டு பழக வேண்டும் என்பதால் அதற்கு பிறகு நான் ஸோலோவாக ஆடியதே இல்லை.



அதன் பின்பு வேறு ஊரில் வேறு பள்ளியில் படிக்க நேர்ந்தது. அங்கு சிறு வயதிலிருந்து அதேப் பள்ளியில் படித்த மாணவிகளின் ஆதிக்கம் நிறைய இருந்ததால் நானாக எதிலும் கலந்து கொள்ளவில்லை. கல்லூரியில் படித்தக் காலத்தில் ஒன்றிரண்டு நடனங்கள் ஆடியதுண்டு. அப்போது மேடையில் ஆடியதைவிட தோழிகளுடன் சேர்ந்து ஒரு ஆடியன்ஸாக மேடைக்குக் கீழே ஆடி ஜாலியாக இருந்ததுண்டு. அதெல்லாம் சந்தோஷமான நாட்கள்.



இன்றும் குழந்தைகள் ஆடுவதைப் பார்த்தால் அவர்களுடன் சேர்ந்து ஆடவேண்டும் என்று கால் பரபரக்கும். ஆனாலும் ஏதோ ஒரு கூச்சத்தில் அமைதியாக அவர்களை ரசிக்க மட்டும்தான் முடிகிறது. இப்போது எல்.கே.ஜி படிக்கும் என் மகளின் பள்ளி ஆண்டுவிழாவுக்காகத்தான் காத்திருக்கிறேன்.



பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே ஆசைப்பட்டதுண்டு. ஆனால் அதற்கான வாய்ப்புகள் அமையாமலேப் போனது எனக்கு இப்போதும் மிகப்பெரிய வருத்தம்.

இந்த ஆண்டுவிழா அனுபவங்கள் தொடர்பதிவுக்கு என்னை அழைத்ததன் மூலம் தீபா, என் பள்ளி, கால நினைவுகளை மட்டும் தட்டியெழுப்பவில்லை, நடனத்தின் மீதுள்ள ஆர்வத்தையும்தான். நன்றி தீபா!