Friday, 25 February, 2011

பெயரின் மீது காதல்!


அதென்ன பெயரின் மீது காதல்? ஒவ்வொருவருக்கும் முதல் அடையாளமாக இருப்பது நம்முடைய பெயர்தான். அந்தப் பெயரில்தான் எத்தனை விதம்? 


பெற்றோர்கள் வைத்தப் பெயர், நண்பர்கள் வட்டத்தில் ஒரு பெயர், பெற்றோர் வைத்தப் பெயர் பிடிக்காமல் போய் தாங்களாகவே வைத்துக்கொண்ட பெயர் என்று பெயர்களின் மீது உள்ள காதல் இதுவரை மட்டுமல்ல.. இனிமேலும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.


அந்தப் பெயரால் வந்த சுவாரஸ்யங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.


ஸ்ரீஅகிலா! இது என்னுடைய ஜாதகப்பெயர். ஆனால் இந்தப்பெயரை என்னுடைய சர்டிஃபிகேட்டில் கொடுக்காமல் வெறும் அகிலா என்று மட்டுமே கொடுத்தார்கள். 'அகிலா' இதன் முதலெழுத்து A என்று ஆரம்பிப்பதால் க்ளாஸ் ரூமில் முன்னாடி உட்கார வைத்து விடுவார்கள். (கொடுமை! க்ளாஸில் தூக்கம் வந்தால் தூங்கவே முடியாது) எக்ஸாம் ஹாலிலும் முதல் பெஞ்சில் உட்கார வைத்து ஒரு பிட்டு கூட அடிக்க முடியாமல் செய்து விடுவார்கள். வீட்டில் கூப்பிடுவது 'பேபி'என்றாலும் நல்லவேளை அந்தப்பெயரையே எனக்கு வைத்து விடவில்லை. (வைத்திருந்தால்..நான் பாட்டியான பிறகு 'பேபி பாட்டி' என்றுதான் கூப்பிட்டிருப்பார்கள். ஷ்ஷ்! கற்பனை செய்யவே முடியவில்லை)  


கண்கள் பெரிதாக இருந்ததால் என்னை 'முட்டக்கண்ணு' என்று கூப்பிட்டவர்கள் ஏராளம். அப்படி கூப்பிடுபவர்களை அதே முட்டைக்கண்ணை வைத்து முறைத்து விட்டு சென்றுவிடுவேன். அந்தக் கண்ணைக் கொடுத்ததற்காக கடவுளையும் திட்டியிருக்கிறேன். அந்த தாழ்வு மனப்பான்மை, அந்தக் கண்களுக்காகவே என்னை ஸ்கூலில், நடனத்தில் சேர்த்துக் கொள்ளும் போதும், அந்தக் கண்களை வர்ணித்து லவ்லெட்டர் வந்தபோதும் தானாக விலகிப்போனது.


நண்பர்கள் குழுவில் என்னை 'அகில், அகில்ஸ்' என்றெல்லாம் சுருக்கி கூப்பிடும்போது அந்தப் பெயர் எனக்கு ரொம்பவும் பிடித்துப்போனது. அதன் அர்த்தம் தெரிந்தபோது அதைவிட அந்தப்பெயரின் மீது காதல் வந்தது.


என் கணவரும் அடிக்கடி சொல்லுவார், "எனக்கு முதலில் ராஜாஜி என்றுதான் பெயர் வைக்கப்பார்த்தார்கள், ஆனால் நல்லவேளை 'ராஜ்குமார்' என்று வைத்து விட்டார்கள். தப்பித்தேன்!" என்று சொன்னார். பொதுவாக தேசத்தலைவர்களின் பெயர்களை வைத்துக்கொள்ள யாருக்கும் விருப்பமில்லை என்பது தான் உண்மை. அப்படி வைத்தாலும் அதையும் சுருக்கி ஸ்டைலாக வைத்துக்கொள்வது பலருக்கும் பிடித்தமான விஷயம். 


பிடிக்காத பெயரைப் பெற்றோர்கள் வைத்துவிட்டால் அதனால் வரும் தாழ்வு மனப்பான்மையும் அதிகம் தான். அனைவரும் கிண்டல் செய்வதாலேயே அந்த எண்ணம் வருகிறது என்று நினைக்கிறேன். 


வீட்டில் பெண், மாப்பிள்ளை பார்க்கும் நேரத்தில் கூட இந்தப் பெயருக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்தப் பெயருக்காகவே பல வரன்களைத் தட்டிக்கழித்தவர்களும் ஏராளம். (அதுசரி அர்ச்சனா என்று வைத்தால் பிடிக்கும், அருக்காணி என்று வைத்தால் பிடிக்குமா?)


இப்போது அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்டைலாக பேர் வைப்பது கூட அதன் மீது உள்ள காதலால் தான். என் மகள் பிறந்த போதும் பெயர் பிரச்சினை தலை தூக்கியது. பெரியவர்கள் இப்படித்தான் வைக்க வேண்டும் என்று ஆரம்பித்தார்கள். நட்சத்திரப் பெயர்தான் வைக்க வேண்டும் என்றும் சண்டை போட்டார்கள். நாங்கள் யாருக்கும் இசைந்து கொடுக்கவில்லை. 


அவரவர்களுக்கு எப்படி பிடிக்கிறதோ அப்படி கூப்பிட்டுக்கொள்ளுங்கள். நாங்கள் இப்படித்தான் வைப்போம், சர்ட்டிஃஃபிகேட்டிலும் நாங்கள் வைக்கும் பெயர்தான் இருக்கும் என்று உறுதியாக இருந்தோம். 


அப்படி ஆசையாக என் மகளுக்கு வைத்தப் பெயர்தான் 'ரிஜூதா'. அவள் வளர்ந்து வரும் போது அது நல்லப் பெயராகவும், கொஞ்சம் ஸ்டைலாகவும்  இருக்க வேண்டும் என்றும் இந்தப்பெயரை வைத்தோம்.


ஆனால் அவளுக்கும் 'ரிஜூதா' என்ற முழுப்பெயர் ஸ்கூலில் தான் கூப்பிட வேண்டும். வீட்டிற்கு வந்தால் ரிஜூதான். இல்லாவிட்டால் ரகளைதான்.  அவளை வெறுப்பேற்ற வேண்டும் என்றால் ரிஜூதா என்று கூப்பிட்டால் போதும். சிறு குழந்தைகளுக்கும் அவர்களின் பெயர் மீது உள்ள காதல் இங்கிருந்தே தொடங்கி விடுகிறது.


பதிவுலகத்துக்கு வந்தபிறகு முதலில் கவர்ந்ததும் பலருடைய பெயர்கள் தான். எத்தனையோ பேருக்கு தங்களுடைய பெயர்களால் வந்த சீண்டல்களும், சுவாரஸ்யங்களும் நிறைய இருக்கும். அதைப் பலரும் பகிர்ந்து கொள்ளலாமே, அதற்காக இதை தொடர்பதிவாக கொண்டு செல்லலாம் என்று நினைக்கிறேன்.


உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களுடைய பெயரால் வந்த சுவாரஸ்யங்களை, கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். படிப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். 


இந்த தொடர்பதிவுக்கு நான் அழைப்பது; (விருப்பமிருந்தால்)


சந்தன முல்லை  (இந்தப்பெயர் எனக்கு மிகவும் பிடித்திருப்பதால்)


26 comments:

சௌந்தர் said...

பெயரை மீது காதலா யார் பெயரா வேண்டும் என்றாலும் இருக்கலாமா என் பெயரை மட்டும் தான் எழுதனுமா...என் பெயரை பற்றி கண்டிப்பா எழுதுறேன்....

தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி ... சில இடங்களில் படிக்கும் போது சிரிப்பு வந்தது .....எந்த இடம் சொல்ல மாட்டேன்

சுதர்ஷன் said...

சுவாரசியமாக இருக்கிறது ..:D ரிஜூ என்றால் என்ன அர்த்தம் ? கேள்விப்படாத பெயராக இருக்கிறது !!

எல் கே said...

ரிஜுதா அர்த்தம் என்ன??? தொடர்பதிவா?? எழுதறேன் சீக்கிரமா

Chitra said...

பெயர் மட்டும் அல்ல - அதை அழைக்கும் விதத்திலே பாசம் புரியுமே. உங்கள் பெயர் குறித்த அனுபவங்களை, நல்லா எழுதி இருக்கீங்க...
ஷேக்ஸ்பியர் கூட பெயர் குறித்து தன் கருத்தை தெரிவிக்க மறக்கவில்லையே.... "A rose by any other name would smell as sweet"
:-)

Anonymous said...

செம இண்ட்ரஸ்டிங்கான டாபிக் ஆரம்பிச்சிருக்கீங்க அகிலா! வெல்டன்..
//பேபி பாட்டி // ஹா ஹா.. :)

தமிழ் உதயம் said...

இன்று அழகாக தெரியும் பெயர்கள் நாளை சாதாரணமாக தெரியலாம். நல்ல பதிவு. நான் "பட்டப் பெயர்கள்" என்றொரு பதிவு எழுதி இருந்தேன், இதனடிப்படையில்.

அன்பரசன் said...

//முதலெழுத்து A என்று ஆரம்பிப்பதால் க்ளாஸ் ரூமில் முன்னாடி உட்கார வைத்து விடுவார்கள்.//

சேம் பிளட்

அம்பிகா said...

அகிலா,
அழைப்புக்கு நன்றி. நல்ல சுவாரஸ்யமான தொடர்பதிவுதான்.
விரைவில் எழுதுகிறேன்.

Sriakila said...

S. Sudharshan & LK,

Rijutha means Innocence.

சிவகுமாரன் said...

என் பையனுக்கு எனக்கு பிடித்த தமிழ்ப் பெயர் வைக்க ஆசை. என் தந்தை எண் கணிதப்படியும் தன பெயர் சேர்ந்து வரும் படியும் வேறு பெயர் வைத்தார். எனக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் என் தந்தையின் விருப்பத்தை தட்ட முடியவில்லை.

மாணவன் said...

படிக்கும்போதே யதார்த்தம் கலந்து சுவாரசியமா இருந்தது..

அண்ணன் வெறும்பய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. :))

ஜெய்லானி said...

ம் சரிதான் அகி (ஹை..நானும் உங்க பேரை சுருக்கிட்டேன் )..!!
சின்ன வயசில வைத்த பேர் பெரிசான பிறகு ,இல்லை வெளிநாடு போகும் போது பலருக்கு கிண்டலா தோனும் :-))

புகழேந்தி said...

நமது பெயர் என்பது, நமக்குச் சொந்தமான ஒன்று, ஆனால், பிறரால் மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தப் படுவது. - இது சிறுவயதில் நான் படித்தது.
யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்குத் தான் உரிமை அதிகம்!

ராமலக்ஷ்மி said...

அருமை:)! பலமுறை பலரது இடுகைகளில் என் அனுபவம் பற்றி கூறிவிட்டுள்ளேன். வீட்டில் அழைக்கும் பெயரை திருமணத்துக்குப் பிறகு தங்கைகள் மாற்றி வைத்துக் கொண்டாலும், எனக்கு இயற்பெயரே பிடித்தம்:)!

சாந்தி மாரியப்பன் said...

சுவாரஸ்யமான இடுகை..

எல் கே said...

http://lksthoughts.blogspot.com/2011/02/blog-post_28.html

ஹேமா said...

நல்லதொரு தொடர் பதிவு.பழைய நினைவுகளோடு சுவாரஸ்யமா இருக்கும் !

'பரிவை' சே.குமார் said...

சுவாரசியமாக இருக்கிறது. நல்லதொரு தொடர் பதிவு.

பாரி தாண்டவமூர்த்தி said...

தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருந்தால் வந்து பார்க்கவும்

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி
http://blogintamil.blogspot.com/2011/03/2.html

குறையொன்றுமில்லை. said...

ஆஹா, சுவாரசியமானபதிவு.தொடர் பதிவில் பலருடைய பெயர்க்காரணங்களும் தெரிந்து கொள்ள லாம்.

raji said...

நீங்கள் ஆரம்பித்து வைத்த 'பெயர்க் காரணம்'ரிலே ரேஸ் தொடர்ந்தவர்களில் நானும் ஒருத்தி.முடிந்தால்
என் பதிவு பக்கம் வந்து படித்துப் பார்க்கவும்.

raji said...

ரிஜூதா என்றால் சந்தோஷப்படுத்துபவள்,
மகிழ்விப்பவள் என்று அர்த்தம் என படித்திருக்கிறேனே?

யாரோ said...

ஒரு பிட்டு கூட அடிக்க முடியாமல் செய்து விடுவார்கள்...

Hahha :-)

ப்ரியமுடன் வசந்த் said...

//கண்கள் பெரிதாக இருந்ததால் என்னை 'முட்டக்கண்ணு' என்று கூப்பிட்டவர்கள் ஏராளம். அப்படி கூப்பிடுபவர்களை அதே முட்டைக்கண்ணை வைத்து முறைத்து விட்டு சென்றுவிடுவேன். //

டெர்ரரா இருப்பீங்க போல பேபி பாட்டி அவ்வ்வ்!!!

நல்லதொரு பகிர்தல் என்னுடைய பல பெயர்கள் ஞாபகத்தில் வந்து ஒரே ரகளையாகிவிட்டது அதாங்க வெட்கம்...!

Sriakila said...

வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

Unknown said...

good